சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்தது!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் தவெக முதன்முறையாக பங்கேற்புமதுராந்தகம், தாராபுரத்தில் நாளையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவுகச்சா எண்ணெய் கையிருப்பை வெளியிட ஜி7 நாடுகள் முடிவு!ஆசிய விளையாட்டு: தங்கம் வென்றார் இந்திய வில்வித்தை வீராங்கனை மொஹோத்!

விருப்ப உயில் - சந்தேகங்களும் விளக்கங்களும்! நீதியும் நியாயமும் - 7

தனிமனிதர்கள் எழுதும் விருப்ப உயில் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்த சந்தேகங்களும் விளக்கங்களும் பற்றி...

விருப்ப உயில்

விருப்ப உயில் - AI - dinamani

Published On :

தற்சார்புப் பொருளாதாரத்தைப் பற்றிச் சிந்தித்த முதல் தமிழன் வ.உ. சிதம்பரம் பிள்ளை. கூட்டுப் பொருளாதாரத்தைப் பற்றிச் சிந்தித்த முதல் தமிழனும் அவர்தான். 1906, அக்டோபர் 16-இல் ‘சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம்’ (Swadeshi Steam Navigation Company) என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அது, 40,000 பங்குகளைக் கொண்ட பத்து லட்சம் ரூபாய் முதலீட்டு நிறுவனம். பிரான்சில் இருந்து வாங்கிய எஸ்.எஸ். கேலியா மற்றும் எஸ்.எஸ். லாவோ (S.S. Galia and S.S. Lao) என்ற இரண்டு கப்பல்களும் இந்தியப் பெருங்கடலில் செம்மாந்த செருக்குடன் வலம் வந்தன. பிரிட்டிஷ் அரசின் கடுமையான அடக்குமுறைகள் மற்றும் சதிகளால் 1911-இல் அந்த நிறுவனம் கலைக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் சிறை சென்றதையும், சிறையில் செக்கிழுத்ததையும் தமிழ்நாடு அறியும். ஆனால், வ. உ. சிதம்பரம் பிள்ளையின் மனச்சான்றாக விளங்கும் அவருடைய ‘உயில்’ பற்றி தமிழகம் அறியாது.

26.10.1936 இல் வ.உ. சிதம்பரம் பிள்ளை இப்படித்தான் தனது உயிலைத் தொடங்குகிறார்; ‘தூத்துக்குடியிலிருக்கும் மகாஸ்ரீ அ.செ.சு. கந்தசுவாமி ரெட்டியார் அவர்களுக்கு; தூத்துக்குடியிலிருக்கும் வ. உ. சிதம்பரம் பிள்ளை எழுதிக் கொடுத்த உயில் சாசன நிருபம்.

அன்பார்ந்த ஐயா, நமஸ்காரம். எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் கடவுளையும் தங்களையொத்த உண்மை தேசாபிமானிகள் சிலரையும் தவிர, இவ்வுலகத்தில் வேறு தஞ்சம் ஒருவரிருக்கிறதாக எனக்குத் தெரியவில்லை. நான், இனிமேல் அதிக காலம் ஜீவித்திருப்பேனென்று திடமாக நினைக்க வழி இல்லை. எனது குடும்ப நிலைமையையும் தாங்கள் முன்னின்று என் குடும்பத்திற்கு செய்ய வேண்டிய காரியங்களையும் இதன் கீழே தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் கீழ்வரும் காரியங்களை செய்து முடித்துக் கொடுத்து, என் குடும்பத்தை காப்பாற்றியருளும்படியாக தங்களை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து கேட்டுக்கொள்கிறேன்’ என்று தொடங்கும் 838 வார்த்தைகளைக் கொண்ட வ.உ. சிதம்பரம் பிள்ளையின் உயில், அவரது வாழ்வையும் உளச்சான்றினையும் பிரதிபலிக்கும் வரலாற்று ஆவணம். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை எதிர்த்துக் கப்பல் நிறுவனம் தொடங்கியவர்; சட்டம் படித்தவர்; எனப் பல பெருமைகளோடு வாழ்ந்த மனிதர் வ.உ. சிதம்பரம் பிள்ளை. அ.செ.சு. கந்தசுவாமி ரெட்டியாரிடம், ‘தங்களை விட்டால் வேறு தஞ்சம் இல்லை’ என்றும் ‘என் குடும்பத்தை காப்பாற்றியருளும் படியாக தங்களை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து கேட்டுக்கொள்கிறேன்’ என்றும் எழுதியிருப்பது மனச்சான்று உள்ள ஒவ்வொரு மனிதனின் இதயத்தையும் கசக்கிப் பிழியும் வரிகளாக இருக்கின்றன. அவரது வாழ்வு முழுவதும் துயர் நிறைந்தவை.

தனக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டதை அறிந்து மனநிலை பாதிக்கப்பட்ட தன்னுடைய தம்பி மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் உணவுக்கு ஏற்பாடு செய்வது, தனது செல்ல மகள்கள் ஆனந்தவல்லி, மரகதவல்லி ஆகியோரின் திருமணம், தன்னுடைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான ஏற்பாடுகள், ஓட்டப்பிடாரத்தில் உள்ள தனது பாகத்திற்கு உரிய நஞ்சை, புஞ்சை நிலத்தை விற்பனை செய்வது, தனது சட்டப் புத்தகங்களை விற்பனை செய்வது, ஓட்டப்பிடாரத்தில் உள்ள தனது பழைய வீட்டைப் பழுது பார்ப்பது எனத் தன்னுடைய வாழ்நாளுக்குப் பிறகு என்ன செய்ய வேண்டும் என்ற தனது விருப்பங்களை உயிலில் எழுதி உள்ளார். வ.உ. சிதம்பரம் பிள்ளையின் உயில் அவருடைய முழு வாழ்வையும் பிரதிபலிக்கும் காலக்கண்ணாடி. உயில் எழுதிய 23 ஆம் நாளில் 18.11.1936 அன்று வ. உ. சிதம்பரம் பிள்ளை இயற்கை எய்தினார். அவரின் கடைசி மகன் வ.உ.சி. வாலேஸ்வரன் 1970-களில் மணப்பாறையில் தொழிலாளர் நல அலுவலராகப் பணி செய்துள்ளார். கடைசியாக, தொழிலாளர் இணை ஆணையராகத் திண்டுக்கல்லில் பணி செய்து ஓய்வு பெற்றார். முதுமை காரணமாக 2015 ஆம் ஆண்டு தனது 88ஆம் வயதில் வ.உ.சி. வாலேஸ்வரன் சென்னையில் இறந்தார்.

வ.உ. சிதம்பரம் பிள்ளை எழுதிய உயிலை வாசிப்பவர்கள் அவரது வலி நிறைந்த வாழ்வை உணர முடியும். வ.உ.சி தனது முயற்சிகளில் தோற்றுப் போயிருக்கலாம். ஆனால், பொருளாதாரம் குறித்த அவருடைய தொலைநோக்குப் பார்வையும் சிந்தனையும் தமிழர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கம். அந்தக் கலங்கரை வெளிச்சத்தைப் பயன்படுத்தி, நாம் நமது பொருளாதாரத்தில் தற்சார்பு நிலையை அடையலாம். வ.உ. சிதம்பரம் பிள்ளை எழுதிய உயில் அவருடைய வாரிசுகளுக்கு மட்டும் அல்ல, மனித குலத்திற்கே வழிகாட்டுகிறது; எச்சரிக்கிறது. 90 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட ஆவணம் என்றாலும்கூட, அதில் இருக்கும் தெளிவும் நேர்மையும் இன்றைய தலைமுறைக்கும் வழிகாட்டுகிறது. 

தங்கள் வாழ்நாளுக்குப் பிறகு தங்களுடைய சொத்துகளை வாரிசுகள் எத்தகைய வழியைப் பின்பற்றி அடைந்து அனுபவிக்க வேண்டும் என்பதை பெற்றோர் தெளிவாக ஆவணப்படுத்த வேண்டும். அது ஒவ்வொரு பெற்றோரின் கடமையும்கூட. கடன்கள் நிறைந்த வாழ்வு என்றாலும் அந்தக் கடன்களை எப்படி நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதற்கு வ.உ.சி. தனது உயில் வழியாக வழிகாட்டிச் சென்றிருக்கிறார். பெற்றோர்கள் தெளிபடுத்தத் தவறினால், சிக்கல்களும் வழக்குகளும் நிறைந்த சொத்தையே தங்களது வாரிசுகளுக்கு விட்டுச்செல்லும் நிலை உருவாகும். இந்திய நீதிமன்றங்களின் முன்பாக விசாரணைக்காகக் காத்திருக்கும் வழக்குகளில் அல்லது தாக்கல் செய்யப்படும் வழக்குகளில் பெரும்பாலான வழக்குகள் உயில் தொடர்பானவை.

சொத்து உரிமை சார்ந்து இயங்கும் சமூகக் கட்டமைப்பில், உயில் என்பது எளிமையான அதே சமயம் முக்கியமான ஆவணமாக சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அது, ஒரு மனிதனுடைய விருப்பத்தைக் கடத்தும் உயிர் உள்ள ஆவணம். வாரிசுகளுக்கு இடையேயான சொத்துரிமைப் போட்டியால் உயில் ஆவணங்கள் போலியாகவும் மோசடியாகவும் தயாரிக்கும் சூழல் பெருகி வருகிறது. இறந்தவர்களின் கை ரேகையைப் பதிவு செய்து உயில் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டதாக வழக்குகள் நீதிமன்றத்திற்கு வருகின்றன. சொத்துகளை அடைய வேண்டும் என்பதற்காக எத்தகைய இழிசெயல்களையும் செய்வதற்கு சிலர் தயாராக இருக்கிறார்கள். சமூகத்தில் அதிகரித்துவரும் இத்தகைய அணுகுமுறை குடும்பங்களிடையே சிக்கல்களையும் விரோதங்களையும் வளர்க்கிறது. நீதிமன்றங்களில் வழக்குகளாகக் குவிந்து வருகின்றது. 

உயில் என்றால் என்ன? What is a Will?

ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாளுக்குப் பிறகு தனது சொத்துகளை என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து, தனது சுயவிருப்பத்தை அல்லது தனது உட்கருத்தை சட்டப்படி எழுத்துருவில் அறிவிப்பதை அல்லது விளம்புகை (Legal Declaration) செய்வதை இந்திய வாரிசுரிமைச் சட்டம் பிரிவு 2(h) உயில் என்று வரையறை செய்கிறது. அது சட்டப்படியான அசையும் மற்றும் அசையாச் சொத்தாக இருக்க வேண்டும்.

ஒரு மனிதன் தன்னுடைய உயிர் பிரிந்த பிறகு, தனது சொத்துகள் இப்படித்தான், இன்னாரால் அனுபவிக்கப்பட வேண்டும் என, தான் வாழும் காலத்தில் தனது விருப்பத்தை எழுதிப் பதிவு செய்வதால், அந்த மனிதனுடைய வாழ்நாளுக்குப் பின்னரும் அவன் எழுதிய ஆவணத்தின் மூலமாக அவனுடைய விருப்பம் உயிரோடு இருக்கிறது. அந்த ஆவணம் உயிர் ஆவணமாக அமைகிறது. உயிர் மருவி உயில் என்ற சொல்லாக நிலைபெற்றுவிட்டது. விருப்பத்தை ஆங்கிலத்தில் willing என்கிறோம். உயிலை ஆங்கிலத்தில் Will என்கிறோம். இதிலிருந்துதான் விருப்ப ஆவணம் அல்லது விருப்புறுதி ஆவணம் என்ற சொல் உருவாகிறது. எழுதியவரின் உயிர் பிரிந்த பிறகு அந்த ஆவணம் நடைமுறைக்கு வருவதால், உயிலை மரண சாசனம் என்றும் கூறலாம்.

உயில் இப்படித்தான் வடிவமைக்க வேண்டும் என்ற நிலையான வடிவம் எதுவும் இல்லை. ஆவண வடிவத்தில் இருக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. ஆனால், அந்த ஆவணம் உயிலாகச் செயல்பட வேண்டும் என்ற எண்ணம் அவசியம் அதில் வெளிப்பட்டு இருக்க வேண்டும். டைரி குறிப்புகள், கடிதங்கள், உடன்பாடுகள், அதிகாரப் பத்திரம் போன்றவை எழுதியவரின் எண்ணத்தை வெளிப்படுத்துமானால், அவர் இறந்த பின்னர் அவற்றையும் உயில்களாகச் செயல்படுத்த முடியும். செல்லுபடித் தன்மை கொண்ட ஓர் உயிலானது முறைப்படி கையொப்பமிட்டு, சான்றொப்பம் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் என இந்திய வாரிசுரிமைச் சட்டம், பிரிவு 63 வரையறை செய்கிறது. இந்துக்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் இந்திய வாரிசு உரிமைச் சட்டத்தின்படியும் இஸ்லாமியர்கள் தங்களது தனிப்பட்ட சட்டத்தின்படியும் உயிலை எழுதினால், தேவைப்படும் சூழலில், அவற்றின் உண்மைத் தன்மையை நீதிமன்றங்களில் நிரூபணம் செய்வது எளிதாக இருக்கும். 

உயில் எழுதுவதற்கான தகுதி

பொதுவாக உயில் என்றால் மனிதன் தனது முதிய வயதிலோ, அல்லது மரணப் படுக்கையிலோ எழுதும் ஆவணம் என்றுதான் எல்லோரும் நினைக்கிறோம். ஆனால், 18 வயது நிறைவடைந்த, நல்ல மனநிலை உள்ள எவர் ஒருவரும் உயிலை எழுதலாம் என்றகிறது ‘உரிமை வயதுச் சட்டம்’ (The Majority Act, 1975, Section 3). அதேநேரத்தில், நீதிமன்றம் ஒருவருக்கு நீதிமன்றக் காப்பாளரை நியமித்திருந்தால், அவர் 21 வயது நிறைவடைந்த பின்னர்தான் உயிலை உருவாக்க முடியும். உயிலைக் கைப்பட எழுதலாம்; தட்டச்சு செய்யலாம்.

உயில் எழுதும்போது விடுபட்ட பொருண்மைகளை மீண்டும் எழுதி அதனை ஏற்கெனவே எழுதப்பட்ட உயிலுடன் இணைக்க முடியும். சட்டம் அதை ‘உயில் பின் இணைப்பு’ (Codicil) என்கிறது. ஒருவர், தான் எழுதிய உயிலைத் தனது வாழ்நாளில் ரத்தும் செய்யலாம். மீண்டும் எழுதலாம். எத்தனை முறை எழுதலாம்? எத்தனை முறை ரத்து செய்யலாம்? என்பதற்கு வரையறை எதுவும் இல்லை. ஆனால், இறுதியாக எழுதப்பட்ட உயிலே செல்லுபடித் தன்மை உடையதாகிறது.

உயில் பதிவு செய்யப்பட வேண்டுமா?

உயில் ஆவணம் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மேலும், உயில் சொத்தின் சந்தை மதிப்பிற்கு மறுபயன் ஏற்பட்டிருக்கத் தேவையில்லை. ஆனால்,1908 ஆம் ஆண்டின் பதிவுச் சட்டப்படி, நூறு ரூபாய்க்கு மேற்பட்ட மதிப்பு உடைய இதர அசையாச் சொத்துகள் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் கண்டிப்பாகப் பதிவு செய்யப்பட வேண்டும். ஆவணங்கள் பதிவு செய்யும்போது, அந்தச் சொத்தின் சந்தை மதிப்பு கணக்கிடப்பட்டு, அதன்படி பணத்தால் மறுபயன் (Consideration) ஏற்பட்டிருக்க வேண்டும். தானம் தொடர்பான ஆவணங்களுக்கு மறுபயன் ஏற்பட்டிருக்கத் தேவையில்லை.

உயிலைப் பதிவு செய்ய வேண்டும் என்று விரும்பினால் பதிவு செய்துகொள்ளலாம். சொத்து உள்ள ஊரில்தான் உயில் பதிவு செய்ய வேண்டும் என்பதில்லை. உயில் எழுத விரும்புபவர் எங்கு இருக்கின்றாரோ அங்கு உள்ள பதிவு அலுவலகத்தில் உயிலைப் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்யப்படாத உயிலை, எழுதியவர் மறைந்த பின்னரும் அந்த உயிலைப் பதிவு செய்து கொள்ளலாம். பதிவுச் சட்டத்தில் அதற்கான வழிவகை உள்ளது. ஒரு பதிவு செய்யப்பட்ட உயிலை, பதிவு செய்யப்படாத உயில் வழியாகவும் ரத்து (revocation) செய்ய முடியும். ஆனால், பின்னர் உருவாக்கப்பட்ட உயிலை நிரூபிக்க வேண்டிய கடமை அந்த உயிலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துபவருக்கு (propounder) இருக்கிறது. ஓர் உயில் பதிவு செய்யப்படுவதாலேயே அது செல்லுந்தன்மை பெற்றுவிட்டது என்று கருத முடியாது. தேவையற்ற குழப்பங்களையும் சிக்கல்களையும் தவிர்க்க வேண்டும் என்றால், முறையாக சட்ட ஆலோசனைகளைப் பெற்று, அதன் பிறகு உயிலை எழுதிப் பதிவு செய்துகொள்வதுதான் சிறந்தது.

உயில் புரோபேட் (Probate of a Will) செய்வது கட்டாயமா?

ஒருவர் எழுதி வைத்துள்ள உயில் உண்மையானதுதானா என்பதை நீதிமன்றம் மூலம் சட்டப்படி உறுதிப்படுத்தும் ஒரு நடைமுறைதான் உயில் புரோபேட் என்பது. இந்திய வாரிசு உரிமைச் சட்டப்படி சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற பெருநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அசையாச் சொத்துகளுக்கு உயில் புரோபேட் செய்வது கட்டாயம். இதரப் பகுதிகளில் கட்டாயம் இல்லை. ஆனால், வங்கிக் கணக்குகள், பங்குகள் அல்லது நிலங்களை உயிலின் அடிப்படையில் ஒருவருடைய பெயருக்கு மாற்றும்போது, தொடர்புடைய நிறுவனங்களோ அல்லது வருவாய்த் துறையினரோ சட்டப்பூர்வ பாதுகாப்பிற்காக புரோபேட் சான்றிதழைக் கேட்கலாம்.

அசல் உயில், உயில் எழுதியவரின் இறப்புச் சான்று, சொத்து விவரங்கள் மற்றும் அதன் மதிப்பு, சட்டப்பூர்வ வாரிசுகளின் பட்டியல் மற்றும் அவர்களது சம்மதக் கடிதம் ஆகியவற்றுடன் நீதிமன்றத்தில் மனு த்தாக்கல் செய்ய வேண்டும். அதில் யாருக்கும் ஆட்சேபனை இல்லாத நிலையில் உரிய நீதிமன்றக் கட்டணத்தின் அடிப்படையில் புரோபேட் சான்று வழங்கப்படும். உயில் உண்மையானது அல்ல என்று ஆட்சேபனை இருக்கும் நிலையில், உயில் யாருடைய கட்டாயமும், தூண்டுதலும் இன்றி சுயநினைவோடுதான் எழுதப்பட்டதா? இதுதான் கடைசி உயிலா? உயிலில் கையெழுத்திட்டுள்ள சாட்சிகள் முன்னிலையில்தான் அது எழுதப்பட்டதா? என்பதையெல்லாம் கவனத்தில் கொண்டு விசாரணை செய்து அதன் அடிப்படையில் நிரூபணம் செய்யப்பட்டால் புரோபேட் சான்று வழங்கப்படும். 

உயில் எழுதியவர் (Testator) மறைந்த பிறகு, அந்த உயிலில் குறிப்பிட்டுள்ள நபர் அல்லது உயிலை நிறைவேற்றும் பொறுப்புடையவர் (Executor) நீதிமன்றத்தை அணுகி புரோபேட் சான்றைப் பெற வேண்டும்.

உயில் எழுதுவது எப்போது தேவையில்லை?

ஒருவர் தன் வாழ்நாளுக்குப் பிறகு தன்னுடைய அசையும் மற்றும் அசையாச் சொத்துகள் தன்னுடைய வாரிசுகளுக்குச் சமமாகப் போய்ச் சேர வேண்டும் என விரும்பினால், அவர் உயில் ஆவணம் எழுதி வைக்கத் தேவையில்லை. தன்னுடைய வாரிசுகளில் ஒரு சிலரைத் தனது வாழ்நாளுக்குப் பிறகு தனக்குப் பாத்தியப்பட்ட சொத்துகளை அனுபவிப்பதில் இருந்து விலக்கிவைப்பது (exclude), ஒருசிலருக்குக் கூடுதலானப் பங்கையும், ஒருசிலருக்குக் குறைவான பங்கையும் (uneven distribution of shares) கொடுக்க வேண்டும் என விரும்புவது போன்ற சூழ்நிலைகளில்தான் உயில் எழுதுகிறார்கள்.

தனது வாரிசுகளுக்கு ஏன் சொத்துகளை சமமாகப் பிரித்துக் கொடுக்கவில்லை என்பதற்கான காரணங்களையும் அந்த உயிலில் தெளிவாகக் கூற வேண்டும்.  இல்லையென்றால், அந்த உயில் சந்தேகத்திற்கு உரியதாக அமைந்துவிடும். நீதிமன்றத்தில் அந்த உயிலை முன்னிலைப்படுத்துபவரோ (Propounder) அல்லது அந்த உயிலின் பயனைப் பெறுபவரோ (beneficiary) சான்று மற்றும் சாட்சியங்களுடன் அந்தச் சந்தேகங்களை அகற்ற வேண்டும். 

சொத்துரிமை மாற்றுச் சட்டம் (Transfer of Property Act, 1882) பிரிவு 3, பாரதிய சாட்சிய அதினியம் (Bharatiya Sakshya Adhiniyam, 2023 - BSA) பிரிவு 67, இந்திய வாரிசு உரிமைச் சட்டம் (Indian Succession Act, 1925) பிரிவு 63 இன்படி உயிலின் சாட்சிகளையும் உயிலின் நிறைவேற்றத்தையும் உயிலை முன்னிலைப்படுத்துபவரோ அல்லது உயில்வழிப் பயன் பெறுபவரோ நிரூபிக்க வேண்டும்.

ஒருவர் தனக்குப் பாத்தியப்பட்ட சொத்துகளை அவர் விரும்பும் எவர் ஒருவருக்கு வேண்டுமானாலும் உயில் வழியாகக் கொடுக்க சட்டம் அனுமதிக்கிறது. அவர் வேற்று மதத்தைச் சார்ந்தவராகவும் இருக்கலாம்; வேற்று சாதியைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம். இதைத்தான் நமது முன்னோர்கள் ‘எண்ணம்’ போல் வாழ்வு என்று சொல்லி இருக்கிறார்கள்.

நீதிக்கான குரல் ஒலிக்கும்...

நியாயத்திற்கான பயணம் தொடரும்...

கட்டுரையாளர் : வழக்குரைஞர், சமூக செயற்பாட்டாளர்

Tamilmani Arumugam, Advocate.

advocatetamilmani@gmail.com

Summary

Regarding doubts and clarifications on how a personal will should be drafted...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.