சிறார்களால் நேரிடும் சாலை விபத்துகளும் விளைவுகளும்! நீதியும் நியாயமும் - 11
கேரளத்தில் நீதிபதியின் மகன் காரை இயக்கி விபத்து ஏற்படுத்திய சம்பவம், சிறார் வாகனம் ஓட்டுவதன் பாதிப்பையும் விளைவையும் எடுத்துரைக்கிறது...

கேரள விபத்து - IANS
அக்டோபர் 25, 2026: கேரள மாநிலம், கொச்சி. சாலையோர உணவகம் நடத்தி வரும் ஜெயபாஸ்கரன், தனது வியாபாரத்தை முடித்துவிட்டு சேரநல்லூர் கன்டெய்னர் சாலையில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயபாஸ்கரன் சென்றுவரும் சாலைதான் அது. அதிகாலை 2.20 மணி. 104 கிலோ மீட்டர் வேகத்தில் பின்னால் வந்த மெர்சிடஸ் பென்ஸ் கார் மோதி சம்பவ இடத்திலேயே ஜெயபாஸ்கரன் இறந்துபோகிறார். சாலையோர உணவகம் நடத்திதான் தனது மூன்று பிள்ளைகளையும் படிக்க வைத்திருக்கிறார் ஜெயபாஸ்கரன். அந்தக் குடும்பத்தின் ஒரே வருவாய் ஆதாரம் முடிவுக்கு வந்துவிட்டது. விபத்துதான், ஆனால் விபத்து அல்ல.
அதிகார ஆணவத்தின் மமதையில் ஏற்படுத்தப்பட்ட குற்றமற்ற கொலை. நள்ளிரவில் ஜெயபாஸ்கரன் இரு சக்கர வாகனத்தில் செல்வதற்கு நியாயமான காரணம் இருந்தது. நள்ளிரவில் காரை 104 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கிய ஓட்டுநருக்கு நியாயமான காரணம் எதுவும் இல்லை. விபத்து நடந்துவிட்டது. 55 வயதில் ஜெயபாஸ்கரனின் வாழ்வு முடிவுக்கு வந்துவிட்டது. சொகுசு காரை அதிவேகமாக இயக்கிய ஓட்டுநரின் வயது 17. ஆம், அவன் ஒரு சிறுவன். திருச்சூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதியின் மகன்.
மோட்டார் வாகனச் சட்டம் (Motor Vehicles Act, 1988) பிரிவு 199A-இன்படி, 18 வயதுக்கு உள்பட்ட சிறார்கள் பொதுச் சாலைகளில் வாகனம் ஓட்டினால், பெற்றோர் அல்லது வாகனத்தின் உரிமையாளருக்குக் கடுமையான சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். சிறார்கள் வாகனம் ஓட்டக் கூடாது என்பதைப் பெற்றோர்கள் கவனத்தில் கொள்கின்றார்களா? என்றால், பலரும் பெருமை கொள்கிறார்கள் என்பதுதான் யதார்த்த நிலை.
இந்திய உரிமை வயதுச் சட்டப் (Indian majority Act, 1875) பிரிவு 3-இன்படி 18 வயதுக்குக் குறைவானவர்கள் சிறார்கள். 61 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின்படி 18 வயது நிறைவடைந்தவர்கள் வாக்களிக்க முடியும். இந்திய ஒப்பந்தச் சட்டத்தின்படி (Indian Contract Act, 1872), ஒப்பந்தம் மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்களில் 18 வயது நிறைவடைந்தவர்கள்தான் கையெழுத்திட முடியும். மீறினால், அது தொடக்கம் முதலே செல்லாதது ஆகிவிடும் (Void ab initio). இத்தகைய சட்டங்களில் பெற்றோர்கள் கவனமாகத்தான் இருக்கின்றார்கள். ஆனால், 18 வயது நிறைவடையாத பிள்ளைகள் வாகனத்தை இயக்குவது குற்றம் என்பதை மட்டும் உணர மறுக்கின்றார்கள். சுயபெருமை அவர்களின் கண்களை மறைக்கின்றது. இத்தகைய விதிமீறல்கள் தொடர்புடையவர்களை மட்டுமல்லாமல் மூன்றாம் தரப்பினரையும் கடுமையாகப் பாதிக்கின்றது. சமூக வளர்ச்சியையும் சீர்குலைக்கின்றது.
நமது நாட்டில் பொதுப் போக்குவரத்து வாகனங்கள் அதிக அளவில் இருக்கின்றன. அதைப் பயன்படுத்தும்போது கல்வியோடு நமது சமூக அமைப்பையும் வளரிளம் பருவத்தினர் புரிந்துகொள்ள முடியும். பள்ளியில் கற்க முடியாத வாழ்வியலை பொது சமூகக் கட்டமைப்பில்தான் வளரிளம் பருவத்தினர் கற்றுக்கொள்ள முடியும். அதற்கான முதல்நிலை வாய்ப்பாக பொதுப் போக்குவரத்துகள் அமைகின்றன. சில தவிர்க்க இயலாத சூழல்களில் பெற்றோர்கள், தாங்களே பிள்ளைகளை வாகனங்களில் அழைத்துச் செல்லலாம். அழைத்து வரலாம். பிள்ளைகள் கேட்கிறார்கள் என்பதற்காக இருசக்கர வாகனத்தையோ நான்கு சக்கர வாகனத்தையோ கொடுத்து அனுப்புவது என்பது தீங்கிழைக்கத் தூண்டும் செயலாகவே அமைகின்றது.
“இந்தியச் சாலைகள் மரணப் பள்ளத்தாக்குகளா?” என்று முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் ஒரு விபத்து வழக்கு விசாரணையின்போது கேள்வி எழுப்பி இருந்தார். 50 ஆண்டுகள் கடந்துவிட்டது. அந்தக் கேள்வி இன்றும் அப்படியே உயிர்ப்போடுதான் இருக்கின்றது. எதுவும் மாறவில்லை. இந்தியச் சாலைகளில் நிமிடத்திற்கு நிமிடம் விபத்துகள் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. மரணங்கள் தொடர்கின்றன. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நிலைகுலைந்து போகின்றன. நாமோ, ‘விபத்து’ என்று எளிதாகக் கடந்து சென்று கொண்டிருக்கின்றோம். விபத்து மரணங்கள் அதிகளவில் நடந்துகொண்டிருக்கும் சாலைகளை நம்பித்தான் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு அதிவேக வாகனங்களை வாங்கிக் கொடுத்து வாழ்வைத் தொலைத்துக்கொண்டிருக்கிறார்கள். சாலைகள் எல்லோருக்கும் பொதுவானது. சாலை விதிகளுக்கு உள்பட்டுத்தான் பயணிக்க வேண்டும்.
பெற்றோர்கள் குழந்தைகள் மீது அன்பு செலுத்துவதும் குழந்தைகள் கேட்பதை வாங்கிக் கொடுப்பதும் இயற்கையானது. அவசியமானது. எது சரி, எது தவறு என்பதைப் பெற்றோர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். தரமான கல்வியும் தரமான உணவும்தான் குழந்தைகளுக்கான அடிப்படையே தவிர, ஆடம்பரமான அதிவேகமான வாகனங்கள் அல்ல. அதிகரித்துவரும் நுகர்வுக் கலாசாரம் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றி வருகின்றது. தனக்குக் கிடைக்காத வசதியும் வாய்ப்பும் தங்கள் பிள்ளைகளுக்குக் கிடைக்க வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர். அதை நடைமுறைப்படுத்துகின்றனர். “சட்டம் தெரியாது” என்று சொல்வதைச் சட்டம் அனுமதிப்பதில்லை. அதேநேரம், சட்டம் தெரிந்தவர்களும் சிறார்களிடம் வாகனத்தைக் கொடுத்து உயிரிழப்புகளை ஏற்படுத்துகின்றார்கள் என்பதுதான் கவலைக்குரியதாகின்றது.
ஜெயபாஸ்கரன் மரணத்தில் காரை அதிவேகமாக ஓட்டிச் சென்ற 17 வயது சிறுவன் முதல் குற்றவாளி. மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதியான அவரது தந்தை இரண்டாவது குற்றவாளி. BNS சட்டத்தின் 281, 106(1) பிரிவுகளின்படி அலட்சியமாக வாகனம் ஓட்டி, மரணம் விளைவித்ததற்காக சிறுவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தெரிந்து நள்ளிரவில் நீதிபதி காவல் நிலையம் வருகிறார். சிறார் நீதி வாரியத்தின் மூலம் பிணை பெற்று தனது மகனை அழைத்துச் சென்றுவிட்டார். இங்கு ‘சிறார் நீதி வாரியம்’ என்பது மாவட்ட நீதிபதிக்குக் கீழ் பணி செய்யும் நீதித்துறை நடுவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட ஜெயபாஸ்கரன் குடும்பத்தினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு நீதி கேட்டுப் போராட்டம் நடத்தி உள்ளனர். மக்களின் போராட்டத்தால் BNS சட்டத்தின் பிரிவு 105 கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து வழக்கு மாநிலம் முழுவதும் பேசுபொருளாகிறது. நீதித் துறை தனது நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. உச்ச நீதிமன்ற விதிகளின்படி; ஒரு நீதிபதி தனது அதிகாரப்பூர்வ கடமையைத் தவிர இதர நேர்வுகளில் காவல் நிலையம் செல்வது விதிமீறல் எனக் கூறி, மாவட்ட நீதிபதியை சஸ்பெண்ட் செய்ய அந்த மாவட்டத்தின் பொறுப்பு உயர் நீதிமன்ற நீதிபதியால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அந்தப் பரிந்துரை தற்போது, கேரளத் தலைமை நீதிபதி தலைமையிலான நிர்வாகக் குழுவின் இறுதி உத்தரவிற்காக நிலுவையில் உள்ளது. நள்ளிரவில் தான் தூங்கிக் கொண்டிருக்கும்போது தனக்குத் தெரியாமல் தனது மைனர் மகன் காரை எடுத்துச் சென்றுள்ளார். அந்தத் தகவல் விபத்திற்குப் பிறகுதான் எனக்குத் தெரியும். எனவே BNS சட்டத்தின் பிரிவு 105 இன் கீழ் குற்றமற்ற கொலையில் பெற்றோருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறுவது சட்டப்படி செல்லாது என்றும் தனக்குப் பிணை வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். கேரள உயர்நீதிமன்றம் அவருக்கு இடைக்கால பிணை வழங்கி உள்ளது. நீதிபதியின் பணிப் பதிவேட்டில் இந்த வழக்கு ஒரு கரும்புள்ளியாக பதிவாகிவிடும். இந்த வழக்கில் மாவட்ட நீதிபதிக்கு ஆதரவாக, மெத்தனப் போக்குடன் செயல்பட்ட காவல் துறையைச் சேர்ந்த 4 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.
முதல் தகவல் அறிக்கை பலவீனமாக உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. வழக்கைச் சரிவர மேற்பார்வை செய்யாத கொச்சி நகர காவல் துறை ஆணையர் காளிராஜ் மகேஷ் குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு உள்ளார். தென்மண்டல ஐஜி நிஷாந்தினி கொச்சி நகரின் புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு விபத்து வழக்கிற்காக இதெல்லாம் நடைபெறுமா? என்றால், அத்திப்பூவைப் பார்ப்பது போலத்தான். தமிழ்நாட்டில் இப்படியெல்லாம் நடந்த வரலாறு இல்லை. எதிர்காலம் பிழைக்கட்டும்.
ஜெயபாஸ்கரன் வழக்கில், நீதிபதியின் வீட்டில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை காவல் துறையினர் கைப்பற்றி உள்ளனர். விசாரணை நடைபெறுகின்றது. சிறுவனின் பிணையை ரத்து செய்யக் கோரி காவல் துறையினர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் பாதிப்பும் விளைவுகளும் எத்தகையன என்பதற்கான ஓர் உதாரணம்தான் கேரள மாநிலத்தின் ஜெயபாஸ்கரன் விபத்து வழக்கு. இதைப் போன்று சிறார்களால் ஏற்படுத்தப்படும் விபத்துகள் நாடு முழுவதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது.
இரு சக்கர வாகன சாகசக்காரர் டி.டி.எப். வாசன் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் ஒரு விபத்தில் சிக்கினார். இன்ஸ்டாகிராம் பதிவிற்காக சாகசச் செயலில் ஈடுபட்டு தனக்குத் தானே விபத்தை ஏற்படுத்திக்கொண்டார். அந்தக் காட்சிகள் பலரையும் பதறச் செய்தன. கொலை முயற்சிக்கு இணையான குற்றம், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவித்தல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் தமிழகக் காவல் துறை அவரைக் கைது செய்தது. அவருக்கு உடனடியாக பிணை வழங்க மாவட்ட நீதிமன்றம் மறுத்துவிட்டது. சென்னை உயர்நீதிமன்றம், ‘சிறையில் இருப்பதுதான் அவருக்கான பாடம்’ என்று பிணை மனுவிற்கான மேல்முறையீட்டை ஏற்க மறுத்தது. பின்னர் நிபந்தனையின் பேரில் அவர் விடுவிக்கப்பட்டார். டி.டி.எப். வாசனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை சுமார் 45 லட்சம் பார்வையாளர்கள் பின்தொடர்கின்றார்கள் என்பது கவலைக்கு உரியது. இளைஞர்களின் மனம் எத்தகைய வெறுமையில் சிக்கித் தவிக்கின்றது என்பதைத்தான் இது காட்டுகின்றது.
தீயின் நாவுகளால் ஈர்க்கப்படும் விட்டில்களுக்கும் நெடுஞ்சாலையில் வாகன சாகசத்தில் ஈடுபடுபவர்களைப் பின்தொடர்பவர்களுக்கும் வேறுபாடு இல்லை. வாகன சாகச நிகழ்வில் ஈடுபடுபவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தீங்கிழைக்கும் அபாயம் உள்ளவர்களைப் பின்தொடரும், பிள்ளைகளைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கே அதிகம் உண்டு.
18 வயதுக்கு உள்பட்ட சிறார்கள், பொதுச் சாலைகளில் வாகனங்களை இயக்கி விபத்தை ஏற்படுத்தினால், சிறார்கள் மட்டுமல்லாமல் பெற்றோரும் குற்றவாளி ஆகின்றனர். பெற்றோர் அல்லது வாகனத்தின் உரிமையாளருக்கு 25,000/- வரை அபராதம் விதிக்கவும், 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கவும் ‘மோட்டார் வாகனச் சட்டம்’ பிரிவு 199A வகை செய்கின்றது. விபத்தில் தொடர்புடைய வாகனத்தின் உரிமம் ஓர் ஆண்டுக்கு ரத்து செய்யப்படும். தொடர்புடைய சிறுவன் 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் பெற தகுதி அற்றவராகின்றார். மேலும், விபத்திற்கு இன்ஸ்சூரன்ஸ் நிறுவனம் பொறுப்பேற்காது. இதனால் பாதிக்கப்பட்ட மூன்றாம் நபருக்கு உரிய இழப்பீட்டை வாகனத்தின் உரிமையாளரே கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது.
பெற்றோரால் இரவல் வாங்கி இயக்கப்படும் வாகனத்தை தெரிந்தோ, தெரியாமலோ சிறுவர்கள் இயக்கி விபத்து ஏற்பட நேரிட்டால்; நிலைமை இன்னும் மோசமாகி விடுகின்றது. விபத்தை ஏற்படுத்திய வகையில் சிறுவனும், சிறுவனுக்கு வாகனத்தைக் கொடுத்த சிறுவனின் பெற்றோரும், பெற்றோருக்கு வாகனத்தைக் கொடுத்த அவர்களின் நண்பரும் இங்கு குற்ற வழக்கை எதிர்கொள்ள வேண்டும். கூடுதலாக, இழப்பீடு கோரும் வழக்கையும் ஒரே நேரத்தில் சந்திக்க நேரிடும். கெடுவாய்ப்பாக அந்த வாகனத்தில் காப்பீடு எதுவும் இல்லாமல்போனால், விபத்திற்குக் காரணமானவர்கள், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டைக் கொடுத்தாக வேண்டும். அதற்கான வசதியும் வாய்ப்பும் இல்லை என்றால், சிறைக்குச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை.
மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 4-இன்படி, 16 வயதுக்கு மேல் உள்ள சிறார்கள் தங்களது பெற்றோர் ஒப்புதலுடன் கியர் இல்லாத 50 சிசி திறனுக்கு மிகாத எஞ்சின் திறன் கொண்ட இருசக்கர வாகனங்களை ஓட்டுவதற்கு பழகுநர் உரிமம் பெறலாம். ஆனால், 50 சிசி-க்குக் குறைவான பெட்ரோல் வாகனங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் உட்பொருள், பெற்றோர் பாதுகாப்பில், மின்னணு இருசக்கர வாகனங்களை இயக்கலாம் என்பதுதான். ஆனால், இத்தகைய பழகுநர் உரிமத்தை வைத்துக்கொண்டு, தனக்கு முழுமையான உரிமம் இருப்பதாகக் கருதி, வாகனங்களை இயக்குவதால்தான் சிறார்கள் தொடர்புடைய விபத்துகள் அதிகரித்து வருகின்றது. இந்தச் சட்டப்பிரிவை நீக்கம் செய்ய வேண்டும்.
சிறார்கள் வாகனத்தை இயக்காமல் இருப்பதுதான் அவர்களின் வாழ்விற்கு நல்லது. சமூகத்திற்கும் உகந்தது. அதற்கான வழிகாட்டுதல்களைக் கொடுக்க வேண்டியக் கடமை பெற்றோர்களுக்குத்தான் உண்டு. ‘ஒடியாத முருங்கையும் படியாத பிள்ளையும் நிலையாது’ என்பது மூத்தோர் வாக்கு. இதனைப் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நீதிக்கான குரல் ஒலிக்கும்...
நியாயத்திற்கான பயணம் தொடரும்...
Summary
கட்டுரையாளர் : வழக்குரைஞர், சமூக செயற்பாட்டாளர்
Tamilmani Arumugam, Advocate.
advocatetamilmani@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


