உங்களுக்கு மட்டும் இல்லீங்க.. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே தூக்கம் இல்லையாம்..!

தூக்கமின்மையைக் கொண்ட நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. இந்திய மக்கள் சராசரியாக 7 மணி நேரம் 1 நிமிடம் தூங்குகின்றனர். இது சராசரி நேரத்தைக் காட்டிலும் 48 நிமிடங்கள் குறைவு ஆகும்.
உங்களுக்கு மட்டும் இல்லீங்க.. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே தூக்கம் இல்லையாம்..!

நாம் அன்றாட வேலைகளை சிறப்பாக, சரியாக செய்ய வேண்டும் என்றால் தூக்கம் அத்தியாவசியமானது. 16 மணி நேரத்திற்கும் மேலாக இயங்கிக் கொண்டிருக்கும் மனித உடலுக்கு குறைந்தது 7 மணி நேர தூக்கமாவது அவசியம் என்று கூறுகின்றனர் மருத்துவர்கள். சிலர் படுத்தவுடன் தூங்குவார்கள்; சிலர் எவ்வளவு தான் புரண்டு படுத்தாலும் பல மணி நேரத்திற்கு தூக்கம் வராது. இந்த தூக்கம் குறித்து ஃபிட்பிட் அமைப்பு சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியுள்ளது. 

அதில், தூக்கமின்மையைக் கொண்ட நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது என தெரிவித்துள்ளது. இந்திய மக்கள் சராசரியாக 7 மணி நேரம் 1 நிமிடம் தூங்குவதாகவும், இது சராசரி நேரத்தைக் காட்டிலும் 48 நிமிடங்கள் குறைவு எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், தூக்கமின்மையில் ஜப்பான் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. ஜப்பானிய மக்கள் 6 மணி நேரம் 47 நிமிடங்கள் தூங்குகின்றனர். 

அதேபோன்று அதிக நேரம் தூங்கும் மக்கள் கொண்ட நாடுகளில் பிரிட்டிஷ் முதல் இடத்திலும், அமெரிக்கா இரண்டாம் இடத்திலும் உள்ளது. 

இந்தியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, கனடா, சிலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஹாங்காங், அயர்லாந்து, இத்தாலி, ஜப்பான், மெக்ஸிகோ, நியூசிலாந்து, பெரு, சிங்கப்பூர், ஸ்பெயின், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா என 18 நாடுகளில் ஆகஸ்ட் 1, 2018 முதல் ஜூலை 31, 2019 வரை  இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

நினைவாற்றல், சுறுசுறுப்பு, உடல் வளர்சிதை மாற்றம் உள்ளிட்டவைக்கு தூக்கம் அவசியமானது. உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் சிறப்பாக இயங்க வேண்டும் என்றால் குறைந்தபட்ச நேரமாவது தூங்க வேண்டும். இல்லையெனில் பல்வேறு நோய்கள் ஏற்பட வழிவகுக்கிறது. 

மற்ற வயதினருடன் ஒப்பிடும்போது 75-90 வயதுக்குட்பட்டவர்களுக்கு குறைவான நேரமே (6 மணிநேரம் 35 நிமிடங்கள்) உறங்குகின்றனர். அதேபோன்று 18-25 வயதுக்குட்பட்டவர்கள் 75- 90 வயது பிரிவினரை விட மேலும் ஒரு மணி நேரம் தாமதமாகவே உறங்கச் செல்கின்றனர். இளம் பருவத்தினர் மொபைல் போன் பயன்படுத்துவது தான் இதற்கு முக்கியக் காரணமாகவும் கூறப்படுகிறது. ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சமூக ஊடகங்களில் செலவிடும் நபர்களுக்கு கவலை மற்றும் மனச்சோர்வு, மன அழுத்தம் அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இன்றைக்கு தூக்கம் வராததால் தான் மொபைலிலில் நேரம் செலவிடுகிறேன் என்று பலர் கூறுகிறார்கள். ஆனால், யோசித்துப் பாருங்கள், ஒரு 10 வருடங்களுக்கு முன்பு நீங்கள் எத்தனை மணிக்குத் தூங்கச் சென்றீர்கள் என்று.. நம்முடைய தூக்கத்தை இன்றைய தொழில் நுட்பத்தில் தான் நாம் தொலைத்திருக்கிறோம். இரவு நேரத்தில் மொபைல் போனை அதிகம் உபயோகித்து பழக்கியதால்தான் இன்று தூக்கமின்மையால் அவதிப்படுகிறோம். எனவே, இரவு நேரங்களில் மொபைல் மற்றும் கணினி பயன்பாட்டைத் தவிருங்கள். 

உணவு பழக்கவழக்கங்களும் தூக்கம் வருவதற்கு அவசியம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். பாஸ்ட் புட், சாப்ட் ட்ரிங்க்ஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இரவு உணவில் கீரை சிறிது சேர்த்துக்கொள்ளலாம், அவ்வாறு முடியாதவர்கள் பகலில் கீரை, பருப்பு சாப்பிடலாம், இரவு உறக்கத்திற்கு முன்னர் பால், உலர் பழங்கள், வாழைப்பழம் சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும் என்று கூறுகிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள். 

எனவே, குறைந்தபட்சம் 6 முதல் 7 மணி நேரமாவது  ஆழ்ந்த நித்திரையை மேற்கொள்வது உங்களது உடல்நலத்திற்கு நல்லது..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com