தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சீரற்ற இதயத் துடிப்பை கண்டுபிடிக்கும் கருவி!

இந்தச் சிறிய கருவியை இதயத்தின் அருகே வைத்துக் கொண்டால்போதும், இதயத் துடிப்பை அளவிடலாம்.

News image
Updated On :28 செப்டம்பர் 2016, 7:45 am

அ. சர்ஃப்ராஸ்

மனிதனின் உடலில் இடைவிடாது இயங்கிக் கொண்டிருப்பது இதயம். உடம்பின் அனைத்து பகுதிகளுக்கும் ரத்தத்தை அனுப்பி வைக்கும் பணியைச் செய்யும் அதன் துடிப்பு அதிகரித்தாலும், குறைந்தாலும் பிரச்னைதான்.

உலகம் முழுவதும் சுமார் 5 சதவீதம் பேருக்கு சீரான இதயத் துடிப்பு இல்லை என்று ஓர் ஆய்வு கூறுகிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களே இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 

சீரற்ற இதயத் துடிப்பை கண்டறிய வயதானவர்கள் சிரமத்துடன் அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்லும் நிலைதான் உலகம் முழுவதும் தற்போது உள்ளது. இதை எளிதாக்கும் வகையில், சீரற்ற இதயத் துடிப்பைக் கண்டறியும், கட்டை விரல் அளவிலான "பீட் 2 போன்' என்ற கருவியை பின்லாந்து நாட்டின் விடிடி தொழில்நுட்ப ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது.

இந்தக் கருவியை ஆன்ட்ராய்டு மென்பொருள் கொண்ட செல்லிடப்பேசியில் உள்ள செயலி மூலம் இணைத்து இதயத்துடிப்பின் அளவை இசிஜி சமிக்ஞை வடிவில் துல்லியமாகக் கண்டறியலாம்.

இந்தச் சிறிய கருவியை இதயத்தின் அருகே வைத்துக் கொண்டால்போதும், இதயத் துடிப்பின் அளவு சீராக உள்ளதா, குறைவாக உள்ளதா, அதிகமாக உள்ளதா என்பது செல்லிடப்பேசியில் உள்ள செயலியில் பதிவாகிவிடும். இதயத் துடிப்புகளுக்கு இடையிலான இடைவெளியையும் இந்தக் கருவி கணக்கிடும். இதன் மூலம் ஒருவர் எந்த அளவுக்கு மன அழுத்தத்துடன் உள்ளார் என்பதையும் கண்டறியலாம்.

இதய அறுவைச் சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு இந்தக் கருவி மிகவும் உதவியாக இருக்கும். அவர்கள் இந்தக் கருவியை அணிந்து  கொண்டு இரவிலும் எந்தப் பயமுமின்றி உறங்கலாம். இதன் மூலம் பல்வேறு நிலைகளில் அவர்களின் இதயத்துடிப்பின் அளவு செல்லிடப்பேசியில் பதிவாகும். அதனை நேரடியாக மருத்துவரின் செல்லிடப்பேசிக்கு அனுப்பி வைத்து மருத்துவ ஆலோசனை பெறலாம். இதன் மூலம் மருத்துவமனைக்கு அடிக்கடி சென்று வருவதை நோயாளிகள் தவிர்க்கலாம்.

சீரற்ற இதயத் துடிப்பைக் கண்டறிவதன் மூலம் பக்கவாதம் எனும் கொடிய நோய் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம். விளையாட்டு வீரர்கள், இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் என 30க்கும் மேற்பட்டவர்களிடம் இந்தக் கருவியைப் பொருத்தி சோதனை மேற்கொள்ளப்பட்டது. சிலர் இரவு முழுவதும் இந்தக் கருவியை அணிந்திருந்தனர். இதன் மூலம் அவர்களின் இதயத் துடிப்பு எப்போதெல்லாம் சீரற்ற நிலையில் உள்ளது என்பது தெளிவாகப் பதிவாகியது. இது சாதாரண சோதனையில் கண்டறியப்பட முடியவில்லை. பின்னர் அவர்களின் இதயத் துடிப்பைச் சீராக்க மருத்துவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கருவி இன்னும் 6 மாதங்களில் விற்பனைக்கு வர உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.