அந்தக் காலத்துல மொட்டைக் கடிதாசி போடுவாங்கன்னா... இந்தக் காலத்துல இப்படிக் கிளம்பிட்டாங்களே!

திருமணத்துக்கான முழு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு மணமேடை வரை வந்த திருமணம் மார்ஃபிங் செய்யப்பட்டு அனுப்பப் பட்ட புகைப்படங்களுக்காக மணமகனால் தடுத்து நிறுத்தப்பட்ட சங்கதி
அந்தக் காலத்துல மொட்டைக் கடிதாசி போடுவாங்கன்னா... இந்தக் காலத்துல இப்படிக் கிளம்பிட்டாங்களே!
Published on
Updated on
1 min read

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் நடக்கவிருந்த திருமணமொன்றை மணமகளது மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் தடுத்து நிறுத்தியிருக்கின்றன. தொழில்நுட்பத்தை... வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் பயன்படுத்துவதை விடுத்து இப்படியான கெட்ட காரியங்களை நிறைவேற்றப் பயனபடுத்திக் கொள்வது காலங்காலமாக நடைமுறையில் இருக்கும் விஷயமே! முன்பு திருமணங்களைத் தடுத்து நிறுத்துவதில் மொட்டைக்கடிதாசிகள் எப்படிச் செயல்பட்டனவோ அதே விதமாக தற்போது மார்ஃபிங் புகைப்படங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த வகை புகைப்பட உத்தியை பயன்படுத்தி பிடிக்காத எவரொருவரின் வாழ்விலும் சிக்கலையும், குழப்பத்தையும் உண்டாக்கலாம் என்பது நவீனகால கெடுமதியாளர்களின் தீர்க்கமான எண்ணமாக இருக்கிறது. 

தமிழ்நாட்டில் இரு ஆண்டுகளுக்கு முன்பு வினோதினி என்ற கல்லூரி மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக மார்ஃபிங் செய்து முகநூலில் வெளியிட்டு அம்மாணவியின் மரணத்துக்கே காரணமானான் ஒரு இளைஞன். அதே விதமாக தற்போது ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த வினய்சிந்தலா கிராமத்தில் நடக்கவிருந்த திருமணமொன்றை மணப்பெண்ணின் ஆபாச புகைப்படங்களை தபாலில் அனுப்பி தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள் யாரோ சிலர். அந்த சிலர் யார் எனக் கண்டறிய காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. 

திருமண நாளன்று மணமகனின் பெயரைக் குறிப்பிட்டு வந்து சேர்ந்த இந்த விபரீத கடித உறையினுள் மணமகளின் ஆபாசமான புகைப்படங்களைக் கண்ட மணமகன் உடனடியாக அத்திருமணத்தை தடுத்து நிறுத்தி விட்டதாகத் தகவல். மணமகளின் முகத்தை மட்டும் வைத்துக் கொண்டு வேறொரு பெண்ணின் ஆபாசமான தோற்றம் அப்புகைப்படங்களில் மார்ஃபிங் செய்யப்பட்டிருப்பது காவல்துறை விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. குற்றவாளி யார் என்பது காவல்துறை விசாரணையின் முடிவில் தெரிய வரலாம்.

எனினும் திருமணம் நிறுத்தப் பட்டது இல்லையென்று ஆகாது. திருமணத்துக்கான முழு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு மணமேடை வரை வந்த திருமணம் மார்ஃபிங் செய்யப்பட்டு அனுப்பப் பட்ட புகைப்படங்களுக்காக மணமகனால் தடுத்து நிறுத்தப்பட்ட சங்கதி அக்கிராம மக்களையும், மணமகள் வீட்டாரையும் தற்போது அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com