‘உக்கிர ஸ்தம்பம்’ இரண்ய கசிபுவுக்கு தூணைப் பிளந்து கொண்டு நரசிம்மர் தரிசனம் தந்த இடம்!

இந்த ஸ்தம்பத்தைக் காணும் போது நாமும் ஒருமுறை அஹோபிலம் சென்று வந்தால் என்ன? நரசிம்மர் தூணைப்பிளந்து கொண்டு தரிசனம் தந்த அந்த உக்கிர ஸ்தம்பத்தைக் கண்டால் என்ன? என்று தோன்றுகிறது.
உக்கிர ஸ்தம்பம்
உக்கிர ஸ்தம்பம்
Published on
Updated on
2 min read

இந்த ஆண்டு தினமணி தீபாவளி மலரில் ஆசிரியர் எழுதிய அஹோபில பயணக் கட்டுரை வாசிக்கச் சிறப்பு. மொத்தக் கட்டுரையுமே நேரில் அஹோபிலத்துக்கு சென்று வந்த உணர்வை அளிப்பதாக இருந்தது. நவ நரசிம்மர் ஆலய தரிசனமும், நல்ல மலை இயற்கை எழிலும் காணக் காணத் தெவிட்டாதது. ஆயினும் அத்தனையிலும் என்னை மிக மிக ஈர்த்த விஷயம் என்றால் இந்த உக்கிர ஸ்தம்பத்தைச் சொல்வேன். சிறுவன் பிரகலாதனின் நாராயண பக்தியைக் கண்டு சகிக்க முடியாத இரண்ய கசிபு மகனை அரசவைக்கு அழைத்து, எங்கே இருக்கிறான் உன் நாராயணன்? வரச் சொல் அவனை. என்று அட்டகாசம் செய்ய.

‘தூணிலும் இருப்பார் நாராயணன், துரும்பிலும் இருப்பார் நாராயணன்’

- என்கிறான் சிறுவன்.

சிறுவனனின் பதிலைக் கண்டு வெகுண்ட இரண்ய கசிபு ஆத்திரம் தலைக்கேற எங்கே இந்தத் தூணில் இருந்து வெளியே வரச் சொல் உன் நாராயணனை என்று ஆக்ரோஷமாகக் கூவி தன் மிகப்பெரிய கதாயுதத்தால் அந்த பிரம்மாண்டத் தூணை மோதி உடைக்க முயல்கிறான்.

அந்த நொடியில்.. இனியும் பொறுக்க முடியாது என தூணைப் பிளந்து கொண்டு குரோத மூர்த்தியாக வெளியில் குதிக்கிறார் நரசிம்மர்.

பிறகு நடந்ததெல்லாம் உலகறிந்த கதை..

ஆக, இந்தக் கட்டுரையில் இதோ இந்த இடத்தில் இந்த தூணைப் பிளந்து கொண்டு தான் நரசிம்மர் வெளிப்பட்டார் என இந்த உக்கிர ஸ்தம்பத்தை காட்டும் போது ஞாபகங்கள் பின்னோக்கி நகர்கின்றன.

‘பக்த பிரகலாதன்’ திரைப்படத்தில் தான் நம் அனைவருக்குமே முதன்முறையாக நரசிம்மர் தரிசனம் கிடைத்திருக்க முடியும். அன்றேல், சிலருக்குப் ‘பழைய தசாவதாரத்தில்’ கிடைத்திருக்கலாம். மறக்க முடியுமா அந்தக் காட்சிகளை. படம் பார்க்கும் போது அது எங்கேயோ, கண் காணாத தேசத்தில் நடப்பதாக கற்பனை செய்து கொண்டு ரசித்திருப்போமில்லையா? இங்கே அந்தக் கற்பனைக்கு உருவம் தந்திருக்கிறது இந்த உக்கிர ஸ்தம்பப் புகைப்படம்.

ஜெயமோகன் தனது ‘வெண்முரசில்’ விவரித்திருந்த மாமன்னர் மகாபலியின் ராஜ்ஜியத்தைப் போலவே இரண்ய கசிபுவின் ராஜ்ஜியமும் மிகப்பெரிய ராட்சதத் தூண்களுடன் கூடிய பிரம்மாண்ட மாளிகையாக இருந்திருக்கலாம். யுகங்கள் பல கடந்து இன்று சிதிலமான பாறைக்குன்று போல காட்சியளிக்கும் இந்த ஸ்தம்பத்தைக் காணும் போது நாமும் ஒருமுறை அஹோபிலம் சென்று வந்தால் என்ன? நரசிம்மர் தூணைப்பிளந்து கொண்டு தரிசனம் தந்த அந்த உக்கிர ஸ்தம்பத்தைக் கண்டால் என்ன? என்று தோன்றுகிறது.

ராமேஸ்வரத்துக் கடலுக்குள் ஆழ்ந்திருக்கும் ‘சேதுபாலத்தைக்’ காண வட இந்தியர்கள் தென்கோடிக்கு வருவதைப் போல...

மக்கள் இங்கிருந்து கேதார் நாத், கேதார் நாத் ஆலயங்களுக்குச் சென்று இறை அவதரித்த திருத்தலங்களைக் காணச் செல்வதைப் போல

நாமும் அங்கே சென்றால் தான் என்ன என்று, ஒரு நொடி தோன்றத்தான் செய்கிறது.

ஆனால், அப்படி எளிதில் புறப்பட்டுச் சென்று விடக்கூடிய இடமல்ல அஹோபிலம்.

நரசிம்மர் அழைத்தால் மட்டுமே செல்ல முடியும் என்கிறார்கள்.

ஆசிரியரின் கட்டுரையிலிருந்து;

//தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா பகுதிகளில் நரசிம்மர் ஆலயங்கள் காணப்பட்டாலும், நரசிம்மரின் முதல் ஆலயமும், மூலஸ்தானமும் ஆந்திர மாநிலம் அஹோபிலம்தான். கிழக்குத் தொடர்ச்சி மலையின் பகுதியான நல்லமலைப் பகுதியில் அமைந்திருக்கும் அஹோபிலம், புராணங்கள் குறிப்பிடும் பிரகலாத சரித்திரம் நிகழ்ந்த இடம் என்பதால் அதன் முக்கியத்துவம் அதிகரிக்கிறது. ஏனைய இடங்கள், நரசிம்மருக்கு எழுப்பப்பட்டிருக்கும் ஆலயங்கள். ஆனால், அஹோபிலம் என்பது நரசிம்மர் தோன்றிய இடம். அவரது அவதாரத் தலம்.// 

ஆம், அஹோபிலத்தின் சிறப்பே அது தான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com