வாந்தி வருதுன்னு நடிச்சா பஸ்ல ஜன்னல் சீட் கிடைச்சிடும், ஆனா, அதே நாடகத்தை விமானத்துல அரங்கேற்றப் பார்த்தா?!
By RKV | Published on : 03rd December 2019 05:15 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

AMERICAN EAGLE FLIGHT
ஃப்ளோரிடா மாகாணம், பென்சகோலாவில் இருந்து மியாமிக்குச் சென்று கொண்டிருந்த அமெரிக்கன் ஈகிள் விமானம் 3508 ல் பயணித்த அடையாளம் தெரியாத பெண் பயணி ஒருவர், விமானத்தில் தனக்கென அகலமான பெரிய இருக்கை வசதியைப் பெறுவதற்காக, விமானம் பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களில் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டவர் போல நடித்திருக்கிறார். அவர் நடிப்பதை நிஜம் என்று எண்ணி குறிப்பிட்ட அந்த விமானத்தின் பைலட் விமானத்தை எமர்ஜென்ஸி கருதி துரிதகதியில் தரையிறக்கினார். அப்போது பயணிகள் அனைவரும் விமானத்தை விட்டுக் கீழே இறங்கிய பின்னரும் கூட சம்மந்தப்பட்ட அந்தப் பெண் மட்டும் விமானத்தில் இருந்து தரை இறங்க மறுத்திருக்கிறார். ஆனாலும், விமான நிலைய அதிகாரிகள் அப்பெண்ணை சமாதானப்படுத்தி விமானத்திலிருந்து கீழிறக்கினர்.
அப்படி கீழே இறக்கப்பட்ட பின்னர், விமானத்தில் வசதியான இருக்கையைப் பெறவே தான் அப்படி நடித்ததாக அந்தப் பெண் ஒப்புக்கொண்டிருப்பது பென்சகோலா காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் மைக் வுட் மூலமாகத் தெரிய வந்திருக்கிறது.
ஒரு பெண்ணின் போலியான நடிப்பில் குறிப்பிட்ட நேரத்தில் மியாமியை அடைந்திருக்க வேண்டிய அமெரிக்கன் ஈகிள் விமானம் அன்று 1 மணி நேர தாமதத்தின் பின் மீண்டும் புறப்பட்டிருக்கிறது.
இருக்கை வசதிக்காக நடுவானில் உடல்நலக்குறைவு போல நடித்த பெண் இப்போது விமான நிலையக் காவலர்களால் கைது செய்யப்பட்டு கஸ்டடியில் வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்.
இந்தச் செய்தியை அறிய நேர்கையில், நம்மூரில் பஸ் பயணத்தின் நடுவே ஜன்னலோர சீட் வேண்டுமென்றால் சிலர் வேடிக்கையாக வாந்தி வருவது போல நடிப்பார்களே அந்தக் கதை தான் நினைவுக்கு வருகிறது.
அது வேறு, இது வேறு தான். ஆனாலும் வெறுமே இருக்கை வசதிக்காக ஒரு பெண், தன்னுடன் பயணித்த அத்தனை பேரின் பயண நேரத்தையுமே தாமதப்படுத்தியது எத்தனை பெரிய தவறு என்று உணர வேண்டுமே! அவருடன் பயணித்தவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நெருக்கடிகள் இருந்திருக்கலாம்.
அத்தனையையும், தனது சுயநலத்துக்காக இந்தப் பெண் யோசித்தே பார்க்கவில்லையே என்பது தான் இங்கே கேள்விக்குள்ளாக்கப்படுகிறது!