அடிக்கடி பார்பிக்யூ சென்று கிரில்டு சிக்கன் சாப்பிடும் பழக்கமிருப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை!

அசைவ உணவு வகைகளைப் பொறுத்தவரை உணவு வேக வைக்கப்படுவது முக்கியமானது தான். ஆனால், அது மீண்டும் மீண்டுமெனத் தொடரும் போது உணவுக்குழாய் கேன்சர், புரோஸ்டேட் கேன்சர் எனப் பல்வேறு விதமான கேன்சர்களைத் தூண்டும்
Barbeque grilled chicken
Barbeque grilled chicken
Published on
Updated on
2 min read

குழந்தைகளுக்கு மட்டுமல்ல இன்று பெரியவர்களுக்கும் கூட பார்பிக்யூ உணவகங்களுக்குச் சென்று சிக்கன், மட்டன் மற்றும் கடல் உணவு வகைகளை ஒரு கை பார்ப்பதென்பது மிகப்பிடித்தமான செயலாக மாறி வருகிறது. பார்பிக்யூவில் முன்கூட்டியே அசைவ உணவு வகைகளை அரை வேக்காட்டில் வேக வைத்து எடுத்துக் கொண்டு அதில் மசாலா தடவி வைத்து விடுவார்கள். பிறகு கஸ்டமர்கள் வந்து அமர்ந்ததும் அவர்களுக்கு முன்பாக டேபிளில் இருக்கும் கிரில் அடுப்பில் அந்த அரைவேக்காட்டு உணவு வகைகளை அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப மீண்டும் சுட்டு சாப்பிடும் வசதியைச் செய்து தருகிறார்கள். உணவைச் சுட்டு சாப்பிடும் போது அதில் மேற்கொண்டு சேர்த்துக் கொள்ளத் தேவையான சாஸ்கள்,  சாறுகள், உப்பு, இஞ்சி பேஸ்ட் எல்லாமும் பக்கவாட்டில் வைக்கப்பட்டிருக்கும். ஒரு பிரஸ்ஸால் தொட்டுத் தொட்டு அதை கிரில் அடுப்பில் வெந்து கொண்டிருக்கும் அசைவ உணவுகளின் மேல் தடவி நமது சுவை விருப்பங்களுக்கு ஏற்ப உணவில் சுவை கூட்டும் வசதியும் அதில் உண்டு. இவை எல்லாவற்றையும் தாண்டி பார்பிக்யூவில் கஸ்டமர்களை ஈர்க்கும் முக்கியமான விஷயம், அங்கு அசைவம் மற்றும் சைவ உணவு வகைகளில் கிடைக்கும் அதிகமான சாய்ஸ்கள். அத்தனையும் அன்லிமிடெட் என்பது அதன் கூடுதல் சிறப்பு. சாப்பிடத் தனியாக வயிறு வேண்டும் என்பது போலத்தான் இருக்கும் பார்ப்க்யூவின் மெனு கார்டுகள்.

பலருக்கு ஸ்னாக்ஸ் ரவுண்டு முடிவதற்குள்ளாகவே வயிறு நிறைந்து விடும். மெயின் கோர்ஸ் உணவுகளைச் சாப்பிட வயிற்றில் இடமிருக்காது. மெயின் கோர்ஸ் என்பது நமது சப்பாத்தி, தோசை, பூரி, பிரியாணி, அரிசி சாதம், சாம்பார், முட்டைக் குருமா, சிக்கன் கிரேவி, மட்டன் கிரேவி, பனீர் கிரேவி, மஷ்ரூம் இத்யாதி வகைகள் எனத் தொடரும். அதை முடித்ததும் பின்னர் அனுமார் வால் போல நீளும் டெசர்ட் வகையறாக்களுக்கு வரும் போது வயிறு மெல்ல சிக்னல் கொடுக்கும். ‘போதும்,வேண்டாம் நிறுத்தி விடு, இதற்கு மேல் தாங்காது’ என்று. ஆனால், பலரும் வயிற்றின் பொருமலைக் கண்டு கொள்ளாமல் கேக், ஐஸ்கிரீம், குளோப் ஜாமூன் என அதையும் விட்டு விட மனமில்லாமல் நொறுக்குவார்கள்.

அத்தோடு முடிந்து விடுமா என்றால் அது தான் இல்லை. பழங்களும், சாலட்களுமாக ஒரு வரிசை நம்மைப் பார்த்துக் கண் சிமிட்டிக் கொண்டிருக்கும். சிலர், அதெல்லாம் ஒரு பொருட்டில்லை என்று டெசர்ட்டோடு முடித்து விடுவார்கள். சிலரோ, ஆளொன்றுக்கு 750 ரூபாய் கொடுத்து இங்கே சாப்பிட வந்திருக்கிறோம். மொத்தத்தையும் ஒரு கை பார்த்தே தீருவது என கங்கணம் கட்டிக் கொண்டு அவற்றையும் முழுங்கி வைப்பார்கள். அதுவரை சாப்பிட்டு முடித்த உணவே தொண்டை வரை நிற்கும் நிலையில் இதையும் சாப்பிட்டு முடித்து பிறகு விருந்தோம்பலுக்காக அவர்கள் வைக்கும் சோம்பு மிட்டாய்கள் மற்றும் ஸ்வீட் பீடாக்களையும் ஒன்றுக்கு நான்காக சிலர் உள்ளே தள்ளுவார்கள்.

அப்புறமென்ன?

வீட்டுக்குக் கிளம்ப வேண்டியது தான் பாக்கி.

இப்படி நம்மை, எதை உண்பது? எதைத் தவிர்ப்பது? என்று தெரியாமல் நிலைகுலைய வைக்கும் விதத்திலான இந்த பார்பிக்யூ ஸ்டைல் விருந்தோம்பலை நாம் மாதமொரு முறையோ அல்லது சில மாதங்களுக்கு ஒரு முறையோ மட்டுமே மேற்கொண்டால் அதில் தவறேதும் இல்லை. ஆனால், இன்று மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறைகள் தவறாமல் பார்பிக்யூ செல்லக் கூடிய குடும்பங்களும் இருக்கிறார்கள் என்பது கண்கூடு. அவர்களுக்கெல்லாம் சொல்லிக் கொள்ள ஒரு விஷயமுண்டு. இனிமேல் தயவு செய்து உங்கள் பார்பிக்யூ ஆர்வத்தை சற்றுக் குறைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், 2009 ஆம் ஆண்டில் வெளிவந்த மருத்துவ ஆய்வு முன்பே சொன்னதை இப்போது மற்றொரு மேலைநாட்டு உணவியல் மருத்துவ ஆய்வொன்று மீண்டும் உறுதி செய்திருக்கிறது.

அதன்படி சமைத்த உணவை மீண்டும் மீண்டும் சூடு படுத்தும் போது அதில் heterocyclic amines (HCAs)எனப்படும் கார்சினோஜன்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து கொண்டே செல்லும் வாய்ப்பிருக்கிறதாம். அதன் காரணமாக கணையப் புற்றுநோய் வர அதிக அளவிலான வாய்ப்புகள் உண்டு என்கிறது அந்த ஆய்வு. 

அடிக்கடி பார்பிக்யூ சென்று சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களைப் பயமுறுத்தும் நோக்கில் இதைச் சொல்லவில்லை. பல்லாண்டுகளாக அதிகரித்துக் கொண்டே இருக்கும் கேன்சர் நோயாளிகளிடையே நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பொன்றில் தெரிய வந்த உண்மை இது.  

அசைவ உணவு வகைகளைப் பொறுத்தவரை உணவு வேக வைக்கப்படுவது முக்கியமானது தான். ஆனால், அது மீண்டும் மீண்டுமெனத் தொடரும் போது உணவுக்குழாய் கேன்சர், புரோஸ்டேட் கேன்சர் எனப் பல்வேறு விதமான கேன்சர்களைத் தூண்டும் காரணியாக அமைந்து விடுகிறது. ஆகவே, அப்படி அசைவ உணவு வகைகளை மீண்டும், மீண்டும் சூடு படுத்தி உண்ணும் வாய்ப்புகள் அதிகமுள்ள பார்பிக்யூ உணவு வகைகளை அடிக்கடி சாப்பிடும் பழக்கத்தை தவிர்த்து விடுவது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com