முதுகில் கட்டிய மூங்கில் கூடையுடன் 10 கிமீ நடந்து சென்று காய்கறி வாங்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரி!
By RKV | Published On : 26th September 2019 11:28 AM | Last Updated : 26th September 2019 02:46 PM | அ+அ அ- |

‘ஃபிட் இந்தியா’ இந்தியப் பிரதமர் மோடியின் புதிய தாரக மந்திரம்.
இந்த மந்திரத்தை நாம் எல்லோருமே பின்பற்றினால் நன்மை நமக்குத்தான். சிலர் கொள்கை ரீதியிலான அரசியல் கருத்து வேறுபாடுகளை மனதில் கொண்டு மத்திய அரசின் சில நல்ல முன்னெடுப்புகளைக் கூடப் புறக்கணித்து விடுகிறார்கள். அதிலொன்று தான் இதுவும். ஆனால், அதிகாரிகளில் சிலர், மக்கள் அவ்விதமாக நல்ல விஷயங்களையும் கூட புறக்கணித்து விடக்கூடாது என்பதற்காக, அரசின் நலத்திட்டங்களையும், நேர்மையான சில முன்னெடுப்புகளையும் தங்களது வாழ்க்கை முறையில் செய்து காட்டி அதன் மூலமாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முயல்வது பாரட்டத்தக்கது.
அப்படி ஒருவர் தான் மேகாலயாவின் துணை கமிஷனர் ராம் சிங். இந்திய குடிமைப் பணிகளில் ஐ.ஏ.எஸ். தரவரிசை அதிகாரியான ராம் சிங். ஒவ்வொரு வாரமும்.. வார இறுதி நாட்களில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் முதுகில் மூங்கில் கூடையுடன் நடந்தே சென்று தன் வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் மற்றும் பழங்களை சந்தையில் இருந்து வாங்கி வருகிறார். காய்கறிகள் மற்றும் பழங்கள் முற்றிலும் ஆர்கானிக் ரகமாக இருக்க வேண்டும் என்று தனக்குத் தானே நிபந்தனை விதித்துக்கொண்டு அதிலிருந்து வழுவாமல் இருக்கிறார் ராம்சிங்.
அதுமட்டுமல்ல, பொருட்களை வாங்கி இவர் பிளாஸ்டிக் கூடைகளையோ, பைகளையோ பயன்படுத்தக்கூடாது என்பதிலிம் பிடிவாதமாக இருக்கிறார். அதனால் தான் அந்த முதுகில் கட்டிய மூங்கில் கூடைத் தோற்றம். சாதரணமாக மேகாலயா போன்ற மலைப்பிரதேசங்களில் ஃபயர் உட் என்று சொல்லக்கூடிய விறகுக் கட்டைகளைச் சேகரிக்க அங்கத்திய மக்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் கூடை இது. இத்தாம் பெரிய கூடை இருந்தால் தான் வாரம் முழுமைக்கும் தேவையான காய்கறிகள், மற்றும் பழங்களை வாங்க தாரளமாக இடமிருக்கும் என்பதால் ராம்சிங் அதை முதுகில் மாட்டிக் கொண்டு மனைவி, குழந்தை சமேதராக 10 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்வது அங்குள்ள மக்களுக்கு ஆச்சர்யமளித்து வருகிறது..
‘அரசின் ‘ஃபிட் இந்தியா’ திட்டத்தை மேகாலயா மக்களிடம் கொண்டு சேர்ப்பது மட்டுமல்ல, 10 கிலோ மீட்டர் தூரத்தையும் வாகனங்களைப் பயன்படுத்தாமல் நடந்தே கடப்பதால் சூழல் மாசுபாட்டையும் தடுக்க முடிவதோடு, மூங்கில் கூடை மூலமாக பிளாஸ்டிக் பயன்பாட்டையும் ஒழிக்க முடிகிறது. எனவே இது என் உடலுக்கு மட்டுமல்ல என் ஒட்டுமொத்த சமுதாய ஆரோக்யத்தையும் மேம்படுத்தவும், சூழல் சார்ந்த பாதுகாப்பு முன்னெடுப்புகளை மேம்படுத்தவும் உதவக் கூடியதாக அமைகிறது. அத்துடன் வாகனங்களைப் பயன்படுத்தாததால் அவற்றுக்கான பார்க்கிங் பிரச்னையும் இல்லை பாருங்கள். அதனால் இந்த வாழ்க்கை முறையைத் தொடர்ந்து பின்பற்றி வருகிறேன்’ என்கிறார் ராம் சிங்..
ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து கொண்டு வாகனத்தை தவிர்த்து விட்டு, கூடையை முதுகில் சுமந்து சென்று 10 கிலோ மீட்டர் தூரத்தையும் வாக்கத்தானில் கடக்கும் இந்த அதிகாரியின் செயல்பாடு சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து தற்போது வெகு ஜன ஊடகங்களிலும் பரவலாகப் பாராட்டு பெற்று வருகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...