உடல், மனப்பயிற்சி புற்றுநோயாளிகளின் சோர்வைக் குறைக்கும்: ஆய்வில் தகவல்

உடற்பயிற்சி, மனப்பயிற்சி மூலம் மார்பக புற்றுநோயாளிகளின் சோர்வை வெகுவாக குறைக்க முடியும் என்று ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

உடற்பயிற்சி, மனப்பயிற்சி பயிற்சி மூலம் மார்பகப் புற்றுநோயாளிகளின் சோர்வை வெகுவாக குறைக்க முடியும் என்று ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. 

உலக அளவில் நுரையீரல், மார்பகம், இரைப்பை புற்றுநோயின் தாக்கம்  அதிகமாக உள்ளது. ஆனால், இந்திய அளவில் வாய் மற்றும் தொண்டைப் புற்றுநோய், கருப்பை வாய்ப் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் ஆகியனவற்றின் தாக்கமே 75 சதவிகிதம் இருக்கிறது. 

புற்றுநோயைப் பொருத்தவரை நோய் வந்தவுடன் உடனடியாகக் கண்டுபிடித்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் தப்பிக்கலாம். மேலும் தொடர்ந்து அவர்கள் முறையாக சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியமாகிறது. மருத்துவ சிகிச்சை மட்டுமின்றி லேசான உடற்பயிற்சியும் எடுத்துக்கொள்வது உடல் ஆரோக்கியதுக்கு உதவும். 

இந்நிலையில், மார்பகப் புற்றுநோயிலிருந்து மீண்டவர்களிடம் ஏரோபிக் உடற்பயிற்சி மற்றும் மன ரீதியான பயிற்சியின் விளைவுகள் குறித்து இல்லினாய்ஸ் அர்பானா-சேம்பெயின் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் சில முடிவுகள் தெரிய வந்துள்ளன. 

சைக்கோ-ஆன்காலஜி என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வின் முடிவுகள் புற்றுநோயாளிகளின் சிகிச்சைக்கு பெரிதும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் புற்றுநோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. ஆனால் சிகிச்சையின்போது அவர்கள் மன ரீதியாக மிகவும் சோர்வடைகின்றனர். எனவே, அவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் எளிய பயிற்சிகளை அளிக்க வேண்டும், அதேபோன்று லேசான உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். 

புற்றுநோயிலிருந்து தப்பித்தவர்கள் பெரும்பாலானோருக்கு மன மற்றும் உடல் சோர்வு, பதட்டம், தூக்கமின்மை உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகிறது. 

எனவே, இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 40 பெண்கள் பங்கேற்றனர். அவர்கள் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டனர். உடற்பயிற்சி அல்லது மனப்பயிற்சி, ஒரு குழுவினர் இரண்டும் செய்ய பரிந்துரைக்கப்பட்டனர்.

இவ்வாறான முயற்சியில் அனைவருமே ஓரளவுக்கு மன மற்றும் உடல் ரீதியாக முன்னேற்றத்தைக் கண்டனர். ஆனால் இரு பயிற்சிகளையும் ஒருங்கே செய்தவர்கள் உடல், மன அளவில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை உணர்ந்தனர். 

எனவே, மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர், புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் தொடர்ந்து உடல் மற்றும் மனப்பயிற்சிகளை செய்துவர ஆய்வாளர்கள் அறிவுறுத்துகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com