வயதானாலும் சுறுசுறுப்பாக இருப்பவரா நீங்கள்?

தீவிர உடல் செயல்பாடு கொண்டவர்கள், அதாவது சுறுசுறுப்பாக இருப்பவர்களுக்கு சிறந்த உடல், மன ஆரோக்கியம் இருக்கும் என்றும் அவர்களிடம் நோய்த் தாக்கம் குறைவாக இருக்கும் என்றும் ஆய்வொன்று தெரிவிக்கிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தீவிர உடல் செயல்பாடு கொண்டவர்கள், அதாவது சுறுசுறுப்பாக இருப்பவர்களுக்கு சிறந்த உடல், மன ஆரோக்கியம் இருக்கும் என்றும் அவர்களிடம் நோய்த் தாக்கம் குறைவாக இருக்கும் என்றும் ஆய்வொன்று தெரிவிக்கிறது.

60, 70களில் கூட அதிகாலையிலே எழுந்து தன் அன்றாட வேலைகளைச் செய்து வாழ்ந்து வரும் மூத்த குடிமக்களை அதிகமாக நாம் கிராமப்புறப் பகுதிகளில் பார்க்க முடியும். பாரம்பரிய உணவு முறைகளால் சத்தான உணவுகளை எடுத்துக்கொண்டு, உடற்பயிற்சிகள்/வேலைகளில் ஈடுபட்டு தங்கள் உடல்நலத்தைப் பேணி சுறுசுறுப்பாக இயங்கி வரும் மூத்தவர்கள், இன்றைய தலைமுறையினருக்கு ஒரு உதாரணம். 

இந்நிலையில் சுறுசுறுப்பாக இருக்கும் வயதானவர்கள் நல்ல உடல் மற்றும் மன நலத்துடன் இருப்பார்கள் எனவும், அவர்களுக்கு நோய்களின் தாக்கம் குறைவாக இருக்கும் எனவும் இதுகுறித்த ஆய்வொன்றில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது பல சுகாதார நன்மைகளுடன் தொடர்புடையது என்று கூறும் டாக்டர் எரிகா ரீஸ்-புனியா தலைமையிலான ஏ.சி.எஸ். அமைப்பைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உடலியல் செயல்பாடுகள் அதாவது தசை இயங்கும் நேரம், அவர்கள் அமர்ந்திருக்கும் நேரம், மன மற்றும் உடல் ஆரோக்கியம் ஆகியவை குறித்து கிட்டத்தட்ட 78,000 பங்கேற்பாளர்களிடையே பகுப்பாய்வு செய்தனர். பங்கேற்பாளர்களில் பெரும்பாலானோர் புற்றுநோயில் இருந்து மீண்டவர்கள். அவர்களின் சராசரி வயது 78 ஆக இருந்தது. 

இந்த ஆய்வில் உடல் பயல்பாடுகளைப் பொறுத்து மன மற்றும் உடல் ஆரோக்கியத்தில் உள்ள வேறுபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், வயதான ஆண்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு ஆய்வாகவும் இது இருக்கிறது என்றும் முடிந்தவரையில் அவரது உடல் அசைவில் இருக்கும்போது உடல் உறுப்புகள் சீராக இயங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது. 

வயதானவர்களின் உடல் செயல்பாடு 150 - 300 நிமிடங்கள் மிதமான செயல்பாட்டிலும், 75 - 150 நிமிடங்கள் தீவிர செயல்பாட்டிலும் இருக்க வேண்டும் என்று ஆய்வில் பரிந்துரைக்கப்படுகிறது. சாதரணமாக, உடல் சுறுசுறுப்பாக இருந்தாலே நோய்கள் வரும் வாய்ப்பு குறைவு என்று இந்த ஆய்வு எடுத்துரைக்கிறது. 

உங்கள் வயது அல்லது புற்றுநோய் போன்ற நோய்களின் தாக்கத்தில் இருந்து மீண்டு வந்திருந்தாலும், அதன்பின்னர் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள், சுறுசுறுப்பாக இருங்கள் என்று ஆய்வாளர் ரீஸ்-புனியா கூறுகிறார்.  'கேன்சர்' என்ற இதழில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

தற்போது பலரும் கரோனா தொற்றுநோயால் வீட்டில் முடங்கியிருக்கலாம். உடல் செயல்பாடுகள் குறைவாக இருக்கலாம். அதேபோன்று வெளியில் செல்ல முடியாத காரணத்தால் மனச்சோர்வும் அடையலாம். எனவே இதுபோன்ற காலகட்டத்தில்தான், நாம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த ஆய்வின் பரிந்துரைப்படி, உடலை முடிந்தவரை செயல்பாட்டில் வைத்துக்கொண்டு உடல் நலத்தைப் பேணுங்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com