/

கரோனா தடுப்புப் பணியில் மலப்புரம் விவசாயி!

மலப்புரத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கரோனா நோயாளிகளின் வீடுகளில் கிருமிநாசினி தெளிக்கும் தன்னிகரற்ற பணியில் ஈடுபட்டுள்ளார்.

News image
விவசாயி லத்தீப்
Updated On :4 செப்டம்பர் 2020, 9:24 am

DIN

மலப்புரத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கரோனா நோயாளிகளின் வீடுகளில் கிருமிநாசினி தெளிக்கும் தன்னிகரற்ற பணியில் ஈடுபட்டுள்ளார்.

கேரள மாநிலம் மலப்புரம் எடப்பல் பகுதியைச் சேர்ந்தவர் லத்தீப். கரோனா பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பதற்கு விவசாயி லத்தீப்பின் தெளிப்பானை சுகாதாரத் துறை அதிகாரிகள் கேட்டுள்ளனர். ஆனால், பேட்டரி மூலம் இயங்கும் அந்த தெளிப்பானை கவனமாக கையாள வேண்டும் என்பதால், தானே அந்த பணியில் இறங்க முன்வந்தார். எடப்பல் பகுதியில் உள்ள கரோனா பாதிக்கப்பட்டோர் இருக்கும் வீடுகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் இருந்து வருகிறார். 

தொற்றுநோய்க்கான ஆபத்து காரணமாக ஆரம்பத்தில் தான் கொஞ்சம் பயந்ததாகவும், ஆனால், இப்போது தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். 

கடந்த இரண்டு வாரங்களில், கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடித்து எடப்பல் பஞ்சாயத்தில் 35க்கும் மேற்பட்ட வீடுகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்துள்ளார். 

ஆறு தெளிப்பான்களில், லத்தீப் தனது சுத்திகரிப்பு பணிக்காக பிரத்தியேகமாக ஒன்றை வைத்திருக்கிறார். தினமும் அதிகாலை 5 மணி முதல் மாலை 3 மணி வரை தனது பண்ணையில் பணிபுரியும் லத்தீப், மாலை 4 மணிக்குப் பிறகு துப்புரவு நோயாளிகளின் வீடுகளுக்கு வெளியே செல்கிறார். பணிக்குச் சென்று வந்தபின்னர் குளிப்பதற்கும், பிபிஇ கிட்டை சுத்தப்படுத்தவும் தனி குளியலறை ஒன்றை அமைத்துள்ளார். 

'இந்த பணியின்போது ரெயின் கோட் மற்றும் பிளாஸ்டிக் பூட் ஆகியவற்றை பாதுகாப்பு கருவியாக பயன்படுத்தினேன். பின்னர் ஒரு பிபிஇ கிட் ரூ. 400-க்கு வாங்கினேன். தற்போது சுகாதாரத்துறை அனைத்து ஆதரவையும் அளித்து வருகிறது. மேலும், அருகிலுள்ள பொன்னானி நகராட்சியைச் சேர்ந்தவர்களும் தங்கள் வீடுகளை சுத்தம்செய்ய என்னை அணுகினர். சிலர் எனக்கு பணம் வழங்குதாகக் கூறினர். ஆனால், அதை நான் மறுத்துவிட்டேன். நான் பொதுநலத்துடனே இந்த பணியை செய்து வருகிறேன்' என்று கூறினார். 

மேலும், 'கிருமிநாசினிக்கு போதுமான அளவு உயர்தர ப்ளீச்சிங் பவுடரை சுகாதாரத் துறை எனக்கு வழங்கியுள்ளது. ஆரம்பத்தில், எனது பாதுகாப்பு குறித்து எனது குடும்பத்தினர் அச்சத்தில் இருந்தனர். ஆனால் நான் கண்டிப்பாக பின்பற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பற்றி அவர்களுக்கு உணர்த்தினேன். அவர்கள் அனைவரும் ஆதரவாக இருக்கிறார்கள்' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.