குழந்தைகளுக்கும் தேவை உடற்பயிற்சி! என்ன செய்யலாம்?

இந்த நவீன காலத்தில் குறிப்பாக பேரிடர் காலத்தில் குழந்தைகளுக்கும் உடற்பயிற்சி அவசியம் என்கின்றனர் உடல்நல நிபுணர்கள். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

உடல்நலனுக்கும் மனநலனுக்கும் உடற்பயிற்சி செய்வது அவசியம் என்பது அனைவரும் அறிந்ததே. அதுபோல இந்த நவீன காலத்தில் குறிப்பாக பேரிடர் காலத்தில் குழந்தைகளுக்கும் உடற்பயிற்சி அவசியம் என்கின்றனர் உடல்நல நிபுணர்கள். 

ஒரு காலத்தில் குழந்தைகள் சிறு வயதில் தெருக்களில் ஓடியாடி விளையாடுவர். பள்ளிகளிலும் வகுப்புகள் குறைவாகவும், விளையாட்டுப் பயிற்சிகள் அதிகமாகவும் இருக்கும். டிவி இருந்த காலத்திலும்கூட குழந்தைகள் விளையாடுவதில் அதிக கவனம் செலுத்தினர். 

ஆனால், இப்போது 2 வயதில் எல்லாம் 'பிளே ஸ்கூலில்' விட்டுவிட்டு வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள்தான் அதிகம். 3 வயதில் எல்லாம் ப்ரீ-கேஜியில் சேர்த்துவிடுகிறார்கள். ஓடியாடி விளையாட வேண்டிய குழந்தைக்கு 2 வயதிலேயே படிப்பறிவைத் திணிக்கின்றனர். நகரங்களில் பெரும்பாலாக குழந்தைகள் வீட்டுக்குள்ளேயே இருக்க வற்புறுத்தப்படுகின்றனர். இதனால் குழந்தைகளின் உடலும் மனமும் பாதிக்கப்படுகின்றது. 

கரோனா பேரிடர் காலத்திலும் வீட்டுக்குள் முடங்கியிருந்த காலத்தில் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். 

இதனால், உடற்பயிற்சி உள்ளிட்ட வேறு சில உடலியக்க நடவடிக்கைகளில் குழந்தைகளை தொடர்ந்து ஈடுபட வைக்க வேண்டும். உடற்பயிற்சி செய்வது அவர்களது அன்றாட நடவடிக்கைகளில் ஓர் அங்கமாக இருக்க வேண்டும். 

வரும் காலத்தில் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில் தினமும் அரை மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்கிறது ஓர் சமீபத்திய ஆய்வு. அதுவே குழந்தைகளுக்கும். 

இன்று பெரும்பாலான குழந்தைகள் மொபைல்போன், டிவி என்று நேரத்தை செலவழிக்கின்றனர். உடலியக்கமின்றி இருப்பதால்தான் குழந்தைகளும் இன்று உடல் பருமன், நீரிழிவு நோய் என பாதிக்கப்படுகின்றனர். 

எனவே, குழந்தைகளை நாள் ஒன்றுக்கு சில மணி நேரங்களாவது விளையாட வைக்க வேண்டும். 

வீட்டில் இருந்து தொடங்குங்கள்

குழந்தைகள் வெளியில் சென்று விளையாட முடியாத பேரிடர் சூழ்நிலையில் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்ய ஊக்குவியுங்கள்.

யோகா, ஏரோபிக்ஸ், தியானம் உள்ளிட்ட பயிற்சிகளை அளிக்கலாம். மேலும், சிறு வயதிலேயே உடல்நலன் குறித்த விழிப்புணர்வை குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். மேலும் வீட்டில் இருந்து செய்யக்கூடிய கை, கால்களுக்கான உடற்பயிற்சிகளை செய்ய கற்றுக்கொடுக்க வேண்டும். 

விளையாட்டுகள்

ஸ்கேட்டிங், நீச்சல், ஓடுதல் அல்லது கிரிக்கெட், கபடி என ஏதேனும் ஒரு விளையாட்டுப் பயிற்சியை குழந்தைகளுக்கு வழங்கலாம். ஒரு குறிப்பிட்ட விளையாட்டில் ஈடுபடுவதன் மூலமாக குழந்தைகளுக்கு உடற்பயிற்சியுடன் அந்த விளையாட்டில் சாதனை புரிய உதவியாக இருக்கும். பொதுவாக குழந்தைகளுக்கு எந்த விளையாட்டில் ஆர்வம் இருக்கிறதோ அந்த பயிற்சியைக் கொடுங்கள். 

ரோல் மாடல் 

குழந்தைகள் தங்களின் பழக்கவழக்கங்களை பெற்றோர்களைப் பார்த்தே கற்றுக்கொள்கின்றன. பெற்றோர்கள் செய்வதையே திரும்பச் செய்கின்றன. சிறுவயதில் பெற்றோர்களின் குணநலன்களையே ஒத்து இருக்கின்றன. இந்நிலையில், உடற்பயிற்சி செய்வதில் குழந்தைகளுக்கு ரோல் மாடலாக பெற்றோர்கள் இருக்க வேண்டும். 

நீங்கள் தினமும் வீட்டில் உடற்பயிற்சி செய்தால் குழந்தை தானாகவே செய்ய முற்படும். மேலும், விளையாட்டின் மீதுள்ள அவர்களின் ஆர்வத்தைத் தூண்ட ஏதேனும் ஒரு வகையில் முற்படுங்கள். 

குடும்பத்துடன் விளையாடுங்கள் 

அனைவருக்கும் உடற்பயிற்சி தேவை என்பதால் வாரத்தில் ஓரிரு தினங்களாவது குடும்பத்துடன் ஏதேனும் ஒரு விளையாட்டில் ஈடுபடுவது நல்லது. மேலும் குடும்பத்தினர் அனைவருடனும் விளையாடும்போது குழந்தைகளுக்கு உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். ஒரு நல்ல விளையாட்டை தேர்வு செய்து குழந்தைகளுடன் விளையாடுங்கள். இல்லையெனில் அனைவரும் சேர்ந்து நடனமாடுவது, ஓடுவது என செய்யலாம்.  

குழந்தைகளிடம் கற்றுக்கொள்ளுங்கள் 

குழந்தைகளுக்கு கற்றுக்கொள்ளும் ஆர்வம் ஏற்பட வேண்டுமெனில் கற்றுக்கொடுக்கும் பண்பை ஏற்படுத்த வேண்டும். விளையாட்டு குழந்தைகளிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். அனைவரும் பங்கேற்கும் விளையாட்டை குழந்தையை வழிநடத்தச் செய்யுங்கள். இது அவர்களிடம் தலைமைப் பண்பை ஏற்படுத்தும். 

மூளைக்கும் பயிற்சி 

சிந்திக்கும் திறனுடைய உடற்பயிற்சிக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். உதாரணமாக தரையில் எண்களை வரிசையாக எழுதி, அதன் மீது குதிக்கச் சொல்லுங்கள். 

பாராட்டு அவசியம்

குழந்தைகளிடம் நேர்மறையான போட்டி மனப்பான்மையை ஏற்படுத்த வேண்டும். விளையாட்டானாலும் சரி, படிப்பானாலும் சரி, நேர்முறையில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்க வேண்டும். உண்மையை ஒப்புக்கொள்ள கற்றுக்கொடுங்கள். தோல்வியும் சகஜம்தான் என்று சொல்லிக்கொடுங்கள். வெற்றி பெற்றாலும், வெற்றி பெற முயற்சித்தாலும் மனம் திறந்து பாராட்டுங்கள்.

குழந்தைகளின் உடல்நலனிலும் மனநலனிலும் பெற்றோர்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி அவர்களை நல்வழியில் செயல்படுத்துங்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com