தனியாகத் தூங்குவதைவிட உங்கள் துணையுடன் தூங்கினால்...!
By DIN | Published On : 30th June 2022 04:41 PM | Last Updated : 30th June 2022 04:41 PM | அ+அ அ- |

தூக்கம் என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்று. இந்த காலத்தில் படுத்தவுடன் தூக்கம் வந்தால்/தூங்கினால் உண்மையில் அதிர்ஷ்டசாலிதான். ஏனெனில் நவீனத்தின் வளர்ச்சியால் பல்வேறு காரணங்களால் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் இன்று அதிகம். தூக்கம் வரவைப்பதற்கு, தூங்குவதற்கு சிலர் படாதபாடுபடுகிறார்கள்.
ஆழ்ந்த உறக்கம் இல்லாததற்கு மன அழுத்தம் மிகப்பெரிய காரணம். அடுத்து ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பல காரணங்கள் இருக்கலாம். அதுபோல, தூங்கும் முறை என்பதும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். 'இப்படி படுத்தால்தான் எனக்கு தூக்கம் வரும்' என்று கூறுபவர்களை பார்த்திருப்போம்.
ஆனால், தூக்கம் வருவதற்கு அல்லது ஆழ்ந்த தூக்கம் பெறுவதற்கு ஆய்வாளர்கள் புதிதாக ஒன்றைக் கண்டறிந்துள்ளனர்.
அதாவது, தனியாகத் தூங்குபவர்களைவிட தங்கள் துணையுடன் தூங்குபவர்கள் நன்றாகத் தூங்குவதாக அந்த புதிய ஆய்வு கூறுகிறது.
இதையும் படிக்க | பாம்பு கடித்து இத்தனை பேர் சாவார்களா? மருந்தில்லா சிக்கல்!
அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட இந்த புதிய ஆய்வில், தங்கள் கணவன்/மனைவி, காதலன்/காதலியுடன் படுக்கையை பகிர்ந்துகொள்பவர்கள் ஆழ்ந்த தூக்கம் பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'ஸ்லீப்' இதழில் இதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:
தூக்கம் வராதவர்கள், ஆழ்ந்த தூக்கம் பெறாதவர்கள், குறைந்த நேரம் தூங்குபவர்கள் தனியாக தூங்குவதைத் தவிர்த்து உங்கள் துணையுடனோ அல்லது துணை இல்லாதபட்சத்தில் உடன் இருக்கும் யாரோ ஒருவருடன் தூங்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர் ஆய்வாளர்கள்.
ஏனெனில் தனியாக தூங்கச் செல்லும்போது மனதில் எண்ண ஓட்டங்கள் வேறு மாதிரியாக இருக்கும். அதுவே, துணையுடன் தூங்கும்போது அவையெல்லாம் ஓரளவு தவிர்க்கப்படும். மேலும், துணை ஒருவர் உடன் இருக்கும்போது உற்சாகமாகவும் அதே நேரத்தில் ஒருவித பாதுகாப்பு உணர்வும் இருக்கும். இது இந்த ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனினும் குழந்தைகள் இருக்கும்பட்சத்தில் அவர்களின் தூக்கம் பாதிக்கப்படலாம்.
ஒரு துணையுடன் தூங்குவது மனச்சோர்வு, பதட்டம் மற்றும் மன அழுத்தம் ஆகியவை குறைவதுடன், வாழ்க்கையில் திருப்தியைத் தருவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆண்கள், தங்கள் காதலி அல்லது மனைவியுடன் தூங்குவது தூக்கத்தில் மூச்சுத்திணறல் அபாயத்தைக் குறைக்கிறது, அமைதியான ஆழ்ந்த தூக்கத்தைத் தருகிறது.
தென்கிழக்கு பென்சில்வேனியாவைச் சேர்ந்த 1,007 பேரின் தூக்கம், ஆரோக்கியமான செயல்பாடு, உணவு முறை, சுற்றுச்சூழல் மற்றும் சமூகமயமாக்கல் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
ஆனால், வெகுசிலர் மட்டுமே இதில் விதிவிலக்கு. ஏனெனில் சிலருக்கு உடன் ஒருவர் படுத்திருந்தால் அசௌகரியமாகவே தொந்தரவாகவோ நினைக்கலாம். தொடக்கத்தில் இருந்தே அவர்கள் தனியாகப் படுத்து உறங்கிப் பழக்கப்பட்டிருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இதையும் படிக்க | வெள்ளை தாடி கருப்பாக மாற வேண்டுமா? இதைச் செய்தாலே போதும்!