

மன அழுத்தம்(stress).. அண்மைக் காலமாக அதிகமானோர் பயன்படுத்தும் ஒரு வார்த்தையாக இருக்கிறது. முன்பெல்லாம் மனரீதியாக பாதிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் அதனை வெளியில் சொல்லமாட்டார்கள், அது மன அழுத்தம் என்பதும் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஆனால், இன்று மன அழுத்தம் என்ற வார்த்தையை சாதாரணமாக பயன்படுத்துகிறோம். அதுதொடர்பான பேச்சு, விவாதங்கள், மருத்துவர்களின் கருத்துகள் அதிகமாக சமூக ஊடகங்களில் வெளிப்படுவதே காரணம் என்று கூறலாம். மறுபுறம், மன அழுத்தத்தினால் பாதிக்கப்படுபவர்களும் அதிகரித்து வருகின்றனர்.
இந்தியாவில் 14% மக்கள், சுமார் 20 கோடி பேர் மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
அறிகுறிகள்
இந்த மன அழுத்தத்திற்கான அறிகுறிகள் சிலருக்கு லேசாகவும் சிலருக்கு தீவிரமாகவும் இருக்கலாம். இந்த அறிகுறிகள் எல்லாம் இருந்தால் உங்களுக்கு மன அழுத்தம் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம்.
மன அழுத்தத்திற்கான அறிகுறிகளை நன்கு கவனிப்பதன் மூலம் அறிய முடியும். மன அழுத்தம் தீவிரமாவதற்கு முன்னேரே கண்டறிந்து சரிசெய்யவும் முடியும்.
திடீரென தலைவலி, ஒற்றைத் தலைவலி, தூக்கமின்மை, பதற்றம், கவலை, ஒருவித எரிச்சல், எப்போதும் சோர்வாக இருப்பது போன்ற உணர்வு, முகப்பரு வருவது. அதிமாக நகத்தை கடிப்பது, முடியின் நிறம் மாறுவது, உடல் எடை எந்த காரணமும் இன்றி திடீரென கூடுவது அல்லது குறைவது, பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்களால் சீரற்ற மாதவிடாய், மறதி, செரிமானப் பிரச்னைகள் ஆகியவை மன அழுத்தத்திற்கான அறிகுறிகள். இதில் அனைத்து அறிகுறிகளும் இருக்க வேண்டிய அவசியமில்லை, இவற்றில் சில அறிகுறிகள் இருந்தாலே அது மன அழுத்தமாக இருக்கலாம்.
இதிலும் தீவிரமாக நம்பிக்கையின்மை, வெறுமை, அதிகரித்த கோபம் அல்லது எரிச்சல், விரோதம் அல்லது பழிவாங்கும் நோக்கம் முற்றிலுமாக எதிலுமே கவனம் செலுத்த முடியாத நிலை, குற்ற உணர்ச்சி, தாழ்வு மனப்பான்மை அதிகரிப்பது இருந்தால் அது தீவிர அறிகுறிகளாக இருக்கலாம்.
என்ன செய்ய வேண்டும்?
மன அழுத்தம் சிலருக்கு மாதக்கணக்கில் இருக்கலாம்.. இது தீவிர மன அழுத்தம் எனப்படுகிறது. மன அழுத்தம் அதிகமாக இருக்கும்போது உயர் ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்பு அதிகம்.
எனவே, மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால் உடனடியாக மனநல ஆலோசகரை அணுகுவது நல்லது. மருத்துவர் கூறியபடி உடனடி சிகிச்சை பெற வேண்டும்.
உங்களை நீங்கள் எப்போதும் பிஸியாக வைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் கவனத்தைச் சிதைக்கும் விஷயங்களில் இருந்து தள்ளி இருங்கள். உங்களுடைய பிரச்னைகளுக்கு சுற்றியுள்ளவர்களின் உதவியுடன் தீர்வு காணுங்கள்.
சமச்சீரான உணவு, உடற்பயிற்சி, பிடித்த பொழுதுபோக்குகளில் நேரம் செலவிடுவது, குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பது, பிரச்னைகளுக்கு தீர்வு காணுவது என மன அழுத்தத்தில் இருந்து ஓரளவு விடுபட முடியும். யோகாவும் மன அழுத்தத்தைக் குறைக்கும்.
சுவாசப் பயிற்சியின் மூலம் மன அழுத்தத்தை குறைக்க முடியும் என்று கூறுகின்றனர் அதுசார்ந்த நிபுணர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.