Enable Javscript for better performance
anandha thenkatru thalatuthe by kavignar muthulingam| கவிஞர் முத்துலிங்கம் தொடர்- Dinamani

சுடச்சுட

  

  சென்சார்போர்டு அதிகாரியைச் சந்தித்தேன்!

  By கவிஞர் முத்துலிங்கம்  |   Published on : 05th September 2017 12:51 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  00_anandhath_thenkatru_-17

   

  ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே- 17

  "மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்' திரைப்படத்தில், சோழநாட்டுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறது பாண்டியநாடு. விடுதலைபெற்ற நாடாக பாண்டிய நாட்டை ஆக்குவதற்குப் பாண்டி நாட்டு மக்களைப் போருக்குத் தயார் செய்வதற்காகப் பல இடங்களில் பாடி மக்களை எழுச்சி கொள்ளச் செய்யவேண்டும் இதுதான் காட்சி. இதற்கேற்பப் பாடல் எழுதவேண்டும்.

  மண்ணுலகைக் காக்கும் களம் ஏர்க்களம் - நாட்டின்
  மானத்தைக் காக்கும்களம் போர்க்களம்
  என்று தொடங்கும் பல்லவியை எழுதி சரணமும் எழுதி டியூன் போட்டு எம்.ஜி.ஆரிடம் காட்டினோம். பாட்டில் கருத்து இருக்கிறது. ஆனால் மெட்டு நன்றாக இல்லை என்று சொல்லிவிட்டார்.

  விண்ணில் ஆடிவரும் மேகம் பாடிவர
  மண்ணில் வாழ்வுவரும் ஏர்முனையில்
  வெற்றி தேடிவர வீர மானம் பெற
  வேலில் பாட்டெழுது போர் முனையில்
  என்றொரு பல்லவி எழுதினேன். இதில் கவித்துவம் இருக்கிறது. நான் நினைப்பது வரவில்லையென்று சொல்லிவிட்டார்.

  நான் நினைப்பது வரவில்லையென்றால் என்ன நினைக்கிறார் என்பதை அவர் சொல்ல வேண்டுமல்லவா? சொல்லமாட்டார். அவர் என்ன நினைக்கிறார் என்பதை எவர் புரிந்துகொண்டு எழுதுகிறாரோ அவர்தான் அவரது படத்திற்குத் தொடர்ந்து பாடல் எழுத முடியும். அப்படி எழுதக் கூடியவர்களில் நானும் ஒருவன் என்பதால்தான் அவர் படத்திற்குத் தொடர்ந்தாற் போல் பாடல் எழுத முடிந்தது.

  ஏர் நடத்தும் மறவரெல்லாம்
  போர்நடத்த வாரீர்
  எதிரிகளின் குருதியிலே
  பொட்டு வைப்போம் வாரீர்
  என்று ஒரு பல்லவி எழுதினேன். இது வன்முறையைத் தூண்டுவதுபோல் இருக்கிறது. வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
  அப்போது திரைப்படத் தணிக்கைக் குழு மிகவும் கடுமையாக இருந்த காலம். தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டு இந்திய நாட்டில் நெருக்கடிநிலை அமல்படுத்தப்பட்ட 1975-ஆம் ஆண்டு அது.

  கத்தியால் குத்துவதைப்போல் காட்டலாம். ஆனால் ரத்தம் வருவதுபோல் காட்டக் கூடாது. கன்னத்தில் அறைவதுபோல் காட்டலாம். கைவிரல் கன்னத்தில் பதிந்திருப்பது போல் காட்டக்கூடாது. இப்படிக் கடுமையான தணிக்கை முறை இருந்த காலம். அதனால் அந்தப் பல்லவியை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

  இப்படி மாற்றி மாற்றி எழுதியதில் ஒருமாதம் ஆகிவிட்டது. பின்னர் மைசூர் அரண்மனையில் படப்பிடிப்புக்காக எம்.ஜி.ஆர். சென்றுவிட்டார்.

  அப்போது "மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்' படப்பிடிப்பு மைசூர் அரண்மனையில் நடந்துகொண்டிருந்தது. கர்நாடக மாநில அரசிடமிருந்து மைசூர் அரண்மனையை மத்திய அரசு எடுத்துக் கொண்ட நேரம் அது.

  எம்.ஜி.ஆரின் படப்பிடிப்பிற்காக இரண்டு மாதம் விட்டுக் கொடுத்தது மத்தியஅரசு. அது முடிவதற்கு இன்னும் ஒருவாரம்தான் இருக்கிறது. அதற்குள் நான் எழுதும் பாடல் காட்சியும், பி.எஸ்.வீரப்பாவுடன் எம்.ஜி.ஆர் மோதும் ஒரு சண்டைக் காட்சியும் அங்கு எடுக்க வேண்டும்.

  அப்படிப்பட்ட நேரத்தில் ஒரு நாள் ஐந்து டியூன்கள் போட்டு வைத்துக்கொண்டு அண்ணன் விசுவநாதன் என்னை அழைத்துப் பாடல் எழுதச் சொன்னார்.
  அதில் "கானடா ராகத்தில் அமைந்த பல்லவி நன்றாக இருக்கிறது. இதை எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொள்வார்'' என்று கூறினேன்.

  எல்லாவற்றையும் எம்.எஸ்.வி. டேப்பில் பதிவு செய்து "நீங்களே மைசூருக்கு இதை எடுத்துச் சென்று அவரிடம் காட்டி அவர் எந்தப் பல்லவியைத் தேர்ந்தெடுக்கிறாரோ அதற்கேற்ப சரணத்தை அவரிடமே எழுதிக் காட்டி ஓ.கே. வாங்கிக் கொண்டு வாருங்கள்''என்று என்னை அனுப்பி வைத்தார்.

  நானும் மைசூர் பயணமாகி எம்.ஜி.ஆரிடம் போட்டுக் காட்டிய போது "எல்லாமே நன்றாக நான் நினைத்த கருத்தோடு இருக்கிறது. அதிலும் கடைசியில் வருகிற வீரமுண்டு வெற்றியுண்டு என்ற பல்லவி எல்லாவற்றையும் விட நன்றாக இருக்கிறது'' என்று சொல்லிவிட்டு மூன்று பல்லவியை மட்டும் தேர்ந்தெடுத்து, "இவை எல்லாவற்றையுமே ஒரே பாட்டாக ஆக்கிவிடுங்கள்'' என்றார்.

  "ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையில் வேறு தாளத்தில் இருக்கிறதே எப்படி ஒன்றாக்குவது'' என்றேன். அவர் சிரித்துக் கொண்டே  "மாண்டேஜ் சாங் என்று சொல்லு... விசுவநாதனுக்குத் தெரியும்''  என்றார்.

  "யாரைப் பாடவைக்கலாம்'' என்றேன். "ஜேசுதாசைப் பாட வையுங்கள்'' என்றார். நான் தயங்கி நின்றேன். என்ன என்று கேட்பது போல் காலைச் சிற்றுண்டி அருந்திக் கொண்டிருந்த அவர் என்னை நிமிர்ந்து பார்த்தார்.

  "ஜேசுதாஸ் குரல் மிக இனிமையாக மென்மையாக இருக்கும். டூயட் பாடலென்றால் பரவாயில்லை. இது எழுச்சியோடு பாட வேண்டிய பாடல். அதனால் டி.எம்.செளந்தரராஜன் பாடினால் நன்றாக இருக்கும்'' என்றேன்.

  "விசுவநாதன் அப்படிச் சொல்லிவிட்டாரா?'' என்றார். "விசுவநாதனுக்கு மட்டுமல்ல எங்கள் எல்லோருக்குமே இதுதான் அபிப்பிராயம்'' என்றேன்.

  "அப்படியென்றால் மியூசிக் டைரக்டர் எப்படிப் பாடியிருக்கிறாரோ அப்படியே இருக்கவேண்டும். இல்லையென்றால் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். வேறு பாடகரை வைத்துத்தான் பாடவைக்க வேண்டியிருக்கும்'' என்றார்.

  அப்படிச் சொல்லிவிட்டு, "முதல் சரணத்தில் கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்  என்று இருக்கிறதே நமது கொடிக்குப் பதிலாக என்ன வார்த்தை போடலாம்?'' என்றார். "ஏன்?'' என்றேன்.  "நமது கொடி என்றால் நமது கட்சிக் கொடியென்று நினைத்து சென்சார் கட்பண்ணிவிட்டால் என்ன செய்வது? அதற்குப் பதில் என்ன போடலாம்?'' என்று கேட்டுவிட்டு அவரே "மீன்கொடி என்று மாற்றிக் கொள்'' என்றார்.

  உடனே நான் "தானனா' என்று டியூன் இருந்தால் மீன் கொடி என்று போடலாம். "தனனனன' என்று டியூன் இருக்கிறது. அதனால் மகரக் கொடி என்று போட்டுக் கொள்ளலாமா? என்றேன். "போட்டுக் கொள்'' என்றார் எம்.ஜி.ஆர்.

  "கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும் என்று நீங்கள் பாடும் போது நமது தோழர்கள், தலைவர் நமது கொடியைப் பற்றிப் பாடுகிறார் என்று எழுச்சியுடன் கைதட்டுவார்கள். மகரக்கொடி பறந்திட வேண்டும் என்று பாடினால் ஏதோ ஒரு காட்சிக்காகப் பாடுகிறார் என்ற எண்ணம்தான் ஏற்படும். ஆகவே, நமது கொடி என்று பாடும்போது உள்ள எழுச்சி மகரக் கொடி என்று பாடும்போது இருக்காதே'' என்றேன்.

  "ஆமாம். நீ சொல்வதும் சரிதான். நமது கொடி என்றும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மகரக் கொடி என்றும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நமது கொடியை சென்சார் வெட்டிவிட்டால் மகரக்கொடியை வைத்துக் கொள்ளலாம்'' என்றார். நானும் சரியென்று வந்துவிட்டேன்.

  பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டு எம்.ஜி.ஆர். பார்வைக்குப் போனபோது "மகரக் கொடி' இல்லாமல் நமது கொடி மட்டும் இருப்பதைப் பார்த்து எம்.எஸ்.வி. அவர்களிடம் இது பற்றிக் கேட்டிருக்கிறார்.

  "முத்துலிங்கம் நமது கொடி பறந்திடவேண்டும் என்ற வரியைத்தான் சொன்னார். இதைத்தான் நீங்கள் ஓ.கே. பண்ணினீர்கள் என்றும் சொன்னார். வேறொன்றும் சொல்லவில்லையே'' என்று சொல்லியிருக்கிறார்.
  இதைக் கேட்டதும் எம்.ஜி.ஆருக்குக் கோபம் வந்துவிட்டது.

  உடனே தியாகராய நகர் அலுவலகத்திற்குத் தொலைபேசியில் பேசி, "முத்துலிங்கத்தை என்னிடம் பேசச் சொல்லுங்கள்'' என்று சொல்லியிருக்கிறார் எம்.ஜி.ஆர்.

  நானும் அவர் அலுவலகத்திற்குச் சென்று தொலைபேசியில் அவரிடம் பேசினேன். "சொன்னது போல் ஏன் எடுக்கவில்லை "நமது கொடி' தானே இருக்கிறது. "மகரக் கொடி' என்ற வார்த்தையை ஏன் எடுக்கவில்லை?'' என்று கோபமாகக் கேட்டார்.

  "தலைவரே அதை சென்சார் வெட்டமாட்டார்கள்'' என்றேன். "உனக்குத் தெரியுமா எனக்குத் தெரியுமா?'' என்றார்.

  உடனே நான் "இல்லை தலைவரே மைசூரிலிருந்து நான் வந்ததும் சென்சார்போர்டு அதிகாரியைப் பார்த்தேன். எம்.ஜி.ஆர். இப்படிப் பாடுவது போல ஒரு வரி இருக்கிறது. இதில் ஏதேனும் ஆட்சேபணை இருக்குமா. இருந்தால் சொல்லுங்கள் மாற்றிவிடுகிறோம். எம்.ஜி.ஆர். சார்பிலே இதைக் கேட்கவில்லை.

  பாடலாசிரியன் என்ற முறையில் கேட்கிறேன்'' என்றேன்.  "எம்.ஜி.ஆர்தானே பாடுகிறார் எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை' என்றார். அதனால்தான் இரண்டு விதமாக எடுக்கவில்லை'' என்றேன். ஒன்றும் சொல்லாமல் தொலைபேசியை வைத்துவிட்டார்.

  பிறகு டைரக்டர் கே. சங்கரிடம் இதைப் பற்றிக் கூறி "முத்துலிங்கத்திற்கு நான் ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்று புரிகிறதா? இன்னொரு கவிஞரை எழுத வைத்திருந்தால் நமக்காக இப்படியெல்லாம் போய்க் கேட்பாரா? அவர் கவிஞர் மட்டுமல்ல; என்னுடைய ஆத்மார்த்தமான நண்பர்' என்று சொல்லியிருக்கிறார். இதை டைரக்டர் கே.சங்கரும் மறைந்த நடிகர் ஐசரிவேலனும் என்னிடம் கூறினார்கள். அவரைவிட இருபத்தைந்து வயது இளையவனான என்னை நண்பர் என்று சொன்னார் என்றால் இதைவிட எனக்கென்ன பெருமை வேண்டும்.
  (இன்னும் தவழும்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai