Enable Javscript for better performance
professor k.gnanasambandhan series -28|பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்- Dinamani

சுடச்சுட

  

  தீப்பொறியில்  ஆறுமுகமா? 

  By பேராசிரியர் கு. ஞானசம்பந்தன்  |   Published on : 03rd July 2017 10:21 AM  |   அ+அ அ-   |  

  unnoodu_potti_pooduu_28

  உன்னோடு  போட்டிபோடு - 28

  "சான்றோரே, சபையோரே புலவர் பெற்ற ஆணையால் சிறையிலிருந்த மன்னன் சிறை மீண்டானா? தன் நாடு சென்றானா? என்ன நடந்தது தெரியுமா? '' என்று கேட்டான். 

  "என்ன நடக்கும் விளம்பர இடைவேளை விடுவீர்கள். அல்லது பாகுபலி இரண்டுல்ல மாதிரி "பாகுபலிய கட்டப்பா ஏன் கொன்னான்னு? கேட்பீங்க' என்று சொல்லிக்கொண்டே கோமாளி மேடைக்கு வர இரண்டு பேர் ஓடிவந்து கோமாளியைக் குண்டுக்கட்டாகத் தூக்கிச் செல்ல மெல்லிய இசையோடு நாடகம் தொடர்ந்தது.

  சோழமன்னனிடத்தில் தன் மன்னனுக்கான விடுதலை ஆணையைப் பெற்றுக்கொண்டு "என் மன்னனை என் தமிழால் காக்கப் போகிறேன் மன்னர் வாழ்க, நாடு வாழ்க'' எனச் சொல்லிக் கொண்டே சிறைச்சாலையை நோக்கி விரைந்து செல்லத் தொடங்கினார் புலவர். 

  அதே நேரத்தில் சிறைக்குள்ளிருந்த சேர மன்னன் மனம் வெதும்பி, "சிறைக்கோட்டத்துக் காவலரே கேளும்,  நம் தமிழரின் வீர மரபில் குழந்தை பிறந்து இறந்தாலும், சிறு பிண்டமாக இறந்தே பிறந்தாலும், அதன் மார்பில் வாளால் கீறிப் புதைப்பது வழக்கம். இத்தகைய மரபிலே வந்த நான், போர்க்களத்தில் வீர மரணம் அடையாது சங்கிலியால் பிணைக்கப்பட்ட  நாய் போல இழுத்து வரப்பட்டுக், கைதியாகச் சிறைப்பட்டுக் குடிக்கும் தண்ணீரைக் (வேளான் சிறுபதம்) கூட  பிச்சையெடுப்பதைப் போலக் கேட்டும் கிடைக்காத சூழலில் அத்தண்ணீரை நான் அருந்த வேண்டுமா? இனியும் உயிர் வாழ வேண்டுமா? எனத் தனக்குத்தானே வருந்திப் பேசி மனம் குமுறித்  தரையில் சாய்கிறான். 

  சிறைக்கு  வெளியே நீர் கொண்டுவந்த  காவலன் அழைத்தபடி இருக்க விடுதலை ஆணையைப் பெற்று வந்த புலவர் மன்னனின் நிலை கண்டு கதறி அழ மென்மையான சோக கீதம் ஒன்று காற்றில் தவழ்ந்து வந்தது.
  "குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்,
  ஆள் அன்று என்று வாளின் தப்பார்
  தொடர்ப்படு ஞமலியின் இடர்படுத்து இரீஇய
  கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்,
  மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணியத்,
  தாம் இரந்து  உண்ணும் அளவை
  ஈன்ம ரோ, இவ் உலகத் தானே?'
  இந்நாடகக் காட்சியின் இறுதியில் மீண்டும் அந்த வலிமையுள்ள இளைஞன் தோன்றி "சபையோரே சிறையில் இறந்த மன்னனின் பெயர் கணைக்காலிரும்பொறை.  அவர் பாடிய பாடல் புறநானூற்றில் 74ஆம் பாடல் இம்மன்னரைச் சிறை மீட்கப் பாடுபட்ட தமிழ்ப்புலவரின் பெயர் பொய்கையார்'  என்று வீரத்துடன் சொல்லி முடிக்க,
  எங்களோடு அமர்ந்திருந்த மீசைக்காரர்,  "அந்தப் பொய்கையார் அப்படிங்கிற அந்தப் புலவர் ஏதோ பாட்டுப்பாடி விடுதலைக் கேட்டாரே, அது பேரு என்னன்னு நீங்க சொல்லலையே?''  என்று கேட்க, அந்த வாலிபன் புன்னகையோடு, "தங்கள் ஆர்வத்துக்கு நன்றி,  அந்த நூல் தான் அவர் பாடிய களவழி நாற்பது என்னும் நூலாகும்'' என்று கூறினார். 

  உடனே நம் தமிழையா எழுந்து, "நம் இளைய சமுதாயத்தைச் சேர்ந்த இந்த இளைஞர்கள்  எத்தனை அருமையான நாடகத்தை நமக்குத் தந்தார்கள் பாருங்கள். அவர்களுக்கு வாழ்த்துகள். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகிய களவழி நாற்பது ஓர் உயிரின் விடுதலை வேண்டிப் பாடப்பட்ட நூல் என்பதை அறியும் போது மேனி சிலிர்க்கிறது'' எனப் பெருமிதத்தோடு சொன்னார்.

  அவரைத் தொடர்ந்து நானும்,  "சிறைப்பட்ட சேர மன்னன் கணைக்காலிரும்பொறை தமிழரின் மான உணர்விற்கு, வீர உணர்விற்கு ஓர் எடுத்துக்காட்டு.  அவர்  பாடி வைத்த கடைசிப் பாடலான புறநானூற்றுப் பாடலையும் இவர்கள் பாடியும், நடித்தும் காட்டிய போது நம் மேனி சிலிர்த்தது என்பது உண்மையே என நெகிழ்வோடு கூறினேன். 

  அப்போது ஹெட் போன் பாட்டி, "இந்த நாடகத்தில் சில வார்த்தைகள் எனக்குப் புரியவில்லையே என்று என் பேத்தி கேட்கிறாளே?''  என்று சொல்லிவிட்டு,  "வாட் இஸ் தட் வேர்ட்ஸ்?'  என்று தன் பேத்தியைக் கேட்க, பேத்தியும் மிகவும் முயன்று  "ஞ..ம..லி..,? மீன்ஸ்?'' என்று கேட்க, உடனே மீசைக்காரர், "அது ஓரு மரத்தோட பேரா இருக்கும்'' என்றார். உடனே தமிழையா, அவரை அமரச் சொல்லிவிட்டு,  "ஐயா, ஞமலி என்பது நாய். மகாகவி பாரதி கூட தன் புதிய ஆத்தி சூடியில், "ஞமலிபோல் வாழேல்' எனக்கூறி இருப்பார்'' என்று சொல்லப் பேத்தியும் புரிந்து கொண்டு, "தென்'...  வேளான் சிறுபதம் மீன்ஸ்?''  என்று கேட்டது.  "வேளான்' - என்றால் உதவி,  "சிறுபதம்'  என்பது குடிநீர் என நான் விடை சொன்னேன்.

  "தமிழ்நாட்டுல அப்பவே தமிழருக்குள்ளே  ஒத்துமை இல்லை போலிருக்கு .
  அதுதான் ஒருத்தரோடு ஒருத்தர் சண்டைபோட்டிருக்காங்க' என்று மீசைக்காரர் சொன்னார்.

  உடனே, தமிழ்மணி, "அப்படியில்லை ஐயா, உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் அவ்வப்பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்குள் போரும், புறப்பகையும் இருக்கத்தான் செய்திருக்கின்றன. வேற்று நாட்டில் இருந்த படையெடுத்து வருபவரோடு போர் செய்வது ஒருமுறை என்றால் தங்களுக்குள்ளேயே எல்லைகளைப் பாதுகாக்க நாட்டை விரிவுபடுத்தப் போர்கள் தேவையாய் இருந்திருக்கின்றன'' என்று விளக்கம் கொடுத்தார்.

  அதற்குள் இன்னொருவர், "களவழி நாற்பதுஎன்றால் என்ன?'' எனக் கேட்டார். 

  "நாற்பது என்பது எண்ணிக்கை . அக்காலப்புலவர்கள் பாடல்களைப் பாடும்போது பத்துப்பத்துப்  பாடல்களாய் நூறு பாடல்கள் பாடுவார்கள். சிலர் 150 பாடல் பாடி தினைமாலை நூற்றைம்பது எனப் பெயர் வைப்பார்கள். 400 பாடல்களைத் தொகுத்து அகநானூறு, புறநானூறு என்றும் அழைப்பதுண்டு. இதே மாதிரித்தான் இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது என்று நீதி நூல்களில் பல நாற்பது பாடல்கள் வரும். இதில், களவழி நாற்பது என்பது போர்க் களத்தைப் பற்றிப் பாடுகின்ற 40 பாடல்கள்.  சோழமன்னன் செங்கன்னான் என்பவனின் வீரத்தைப் புகழ்ந்து 40 பாடல்களில் பாடிய பொய்கையார்,  இந்த நூலைக் கொண்டே விடுதலையைப்  பெற்றுத் தர விரைந்து வந்தார்'' எனத் தமிழையா சொல்லிமுடித்தார். 

  "நாங்க, அங்க நடக்குற நாடகத்த பார்க்குறதா? அல்லது இங்க நீங்க பேசுற பேச்சக் கேட்கிறதா? இல்ல கேட்டுக்கிட்டே பார்க்குறதா?  இல்ல பார்த்துக்கிட்டே கேக்கிறதா?'' என்று ஒருவர் கேட்க, எல்லோரும் சிரித்தார்கள். 

  "சினிமா கொட்டைகையில் மட்டும் இப்படி ஒரு வாய்ப்பு இருந்தா படத்த நிறுத்தி நிறுத்தி விளக்கம் கேட்டுக்கிட்டே பார்க்கலாம்.  ஏன்னா இப்ப வர்ற படத்த பார்த்த உடனே புரிஞ்சுக்க முடியல. விமர்சனம் எழுதுகின்ற ஆளுகளும் ஒன்னு ஓகோனுன்னு எழுதுறாங்க, இல்லைன்னா கேவலமா எழுதுறாங்க . உண்மையைத்  தெரிஞ்சு  படம் பார்க்க போறதுக்குள்ள படம் தியேட்டர விட்டே போயிடுது'' என்று ஓருவர் அலுத்துக்கொண்டார். 

  அப்போது குவித்து வைத்த மண்ணுக்குள்ளிருந்து குபீரென்று வெளியில் வந்த கோமாளி, "அடுத்ததா நீங்க கேட்கப் போறது "தப்போசை' ஆடுறது தப்பாட்டம். ஆனா அது ரைட் ஆட்டம், சரி ஆட்டம்'' என்று சொல்லிவிட்டு மூன்று பல்டி அடித்துக்கொண்டு நெருப்பைச் சுற்றி ஓடினான்.

  அணிக்கு 6 பேராக இரண்டு பக்கத்திலும் ஒரே மாதிரிச் சீருடை அணிந்த 12 பெண்கள் தங்கள் கையில் தோலால் செய்யப்பட்ட  "தப்பு' என்னும் கொட்டுக் கருவியை ஏந்தியபடி சிறு குச்சிகளை அதில் தட்டி ஓசை எழுப்பியவாறு நிதானமாக ஆடத் தொடங்கினர்.  அவர்களுக்கு நடுவில் ஒரு பெண்மணி பிரம்மாண்டமான "டிரம்'  ஒன்றை வைத்துக்கொண்டு  "தொம் தொம்'  என்று அடிக்கத் தொடங்க,  நேரம் ஆகஆக ஆட்டத்தின் வேகம் அதிகரித்தது. 

  "அவர்களது கால்களைப் பாருங்கள்.  ஒவ்வொரு முறையும் சேர்ந்தாற்போல் மாறிமாறி ஸ்டெப்  போடுகின்ற அழகு ஆச்சரியமாய் இருக்கின்றது'  என்றார் தமிழ்மணி.

  ஹெட் போன் பாட்டி மிகுந்த மகிழ்ச்சியோடு ,  "பெண்கள்  கோரஸா  பாடிக் கேட்டிருக்கிறேன்,  குரூப்பா  ஆடிப் பார்த்திருக்கிறேன். ஆனா, இன்னிக்குத்தான் ஆண்கள் மாதிரி மியூசிக் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ்ஸ வாசித்துக்கிட்டே வேகமா ஆடுறத பாக்கிறேன். இட்ஸ், மார்வலஸ்' என்று பாராட்டினார். 

  உடனே, தமிழய்யாவும், "அம்மா  நம் நாட்டில் பெண்கள் குழுவாகச் சேர்ந்து பாடிக் கொண்டே ஆடுகின்ற செய்தியைச் சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகள் குறிப்பிடுவார். "வேட்டுவவரி', "ஆய்ச்சியர்குரவை', "குன்றக்குரவை'  போன்ற பகுதிகளில் பெண்கள் குழு நடனம் செய்வதையும், பாடல்கள் பாடுவதையும் மிக அற்புதமாகச் சொல்லியிருப்பார்'  என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கிற போதே  "தப்பாட்டம்' ஆடிக்கொண்டிருந்த பெண்கள் சட்டென்று வளையம் போல் அமர, அவர்களுக்கு நடுவிலே வந்த ஒரு வாலிபர் கையில் தீப்பந்தத்தோடு வந்து வாயிலிருந்து எதையோ கொப்பளித்து துப்ப, அது நெருப்பாக மாறி அத்தனை பேரையும் சிலிர்க்க வைத்தது. 

  முதலில் அவர் நெருப்பைத்தான் கக்குகிறாரோ என்று அத்தனை பேரும் ஆச்சரியமாய்ப்  பார்த்தார்கள்.  ஆனால், அது நீர் போல வெளியே வந்து நெருப்பாக ஜொலித்தது. 

  "சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறந்த போது இப்படித்தானே நெருப்பு வந்திருக்கும்?''  என்று ஒருவர் தமிழையாவிடம் கேட்டார், அவர் விளக்கம் சொல்வதற்கு முன்பாக மீசைக்காரர் முந்திக் கொண்டார். 

  "ஆமையா, அவரு..  அதான் நம்ம சிவபெருமான் நெத்திக் கண்ண திறந்துதான் நக்கீரரை  எரிச்சாரு, அதுக்கு முன்னாடி மன்மதனை எரிச்சேபுட்டாரு . நமக்கெல்லாம் ரெண்டு கண்ணே போதுமப்பா!'' என்று ஒருவித கேலியோடு கூறினார். உடனே, தமிழ்மணி, "அப்படி ஒரேயடியா முடிவு பண்ணாதீங்க. கடவுளோட எல்லா செயல்களுக்கும்  ஒரு காரண காரியம் இருக்கும்''  என்று சொன்னபடி தமிழையாவையும், என்னையும் பார்த்தார்.

  உடனே  ஹெட்போன் பாட்டி, "அந்த நெத்திக்கண்ணுலதானய்யா முருகப்பெருமான் பிறந்தாரு . அத மறந்துட்டீங்களா?'' என்று சடாரென்று கேட்க, நாங்களே அசந்து போனோம். 

  "தீப்பொறியில்தான் முருகன் பொறந்தாரா?' என்று மீசைக்காரர் கேட்க,  "ஆமா அதுவும் ஒரு முகத்தோட  இல்ல ஆறு முகத்தோட''  என்று ஹெட்போன் பாட்டியும் சொல்ல. "தீப்பொறியில் ஆறுமுகமா?''  என்று அவர் அதிர்ச்சியாய் கேட்டார்.
  (தொடரும்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai