ரோஜர் மூர் மறைந்தார்... ஆனால் 007 பாண்ட்... ஜேம்ஸ் பாண்ட்க்கு எப்போதும் மரணமே இல்லை!

தனது தொடர்களை முடித்துக் கொண்டு ஜேம்ஸ் பாண்ட் யூனிட்டுடன் ரோஜர் மூர் இணைந்தது சரியாகச் சொல்ல வேண்டுமெனில் 1972 ஆம் ஆண்டில் தான். அப்போது தொடங்கியது மூரின் ஜேம்ஸ் பாண்ட் பயணம்...
ரோஜர் மூர் மறைந்தார்... ஆனால் 007 பாண்ட்... ஜேம்ஸ் பாண்ட்க்கு எப்போதும் மரணமே இல்லை!

உலகப் புகழ் பெற்ற ஜேம்ஸ்பாண்ட் 007 சீரிஸ் திரைப்படங்களில் 70 களில் பாண்டாக நடித்த பிரபல நடிகர் ரோஜர் மூர் நேற்று உடல்நலக் குறைவால் அவரது மகனது இல்லத்தில் காலமானார். சுவிட்ஸர்லாந்தில் தனது மகனுடன் வசித்து வந்த ரோஜர் மூருக்கு கடந்த சில ஆண்டுகளாகவே புற்றுநோய் பாதிப்பு இருந்து வந்ததாகவும் அதற்காக அவர் தொடர் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் வயோதிகத்தின் காரணமாக சிகிச்சை பலனளிக்காமல் ரோஜர் மூர் நேற்று தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டார் என்கின்றன ஆங்கில செய்தி ஊடகங்கள். 

பிரிட்டிஷ் உளவு அமைப்பின் ரகசிய உளவுப் பிரிவு அதிகாரியாக ஜேம்ஸ் பாண்ட் என்ற கற்பனை கதாபாத்திரம் உருவாக்கப் பட்டு அதை மையமாக வைத்து பல திரைப்படங்கள் இன்றளவும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதுவரை சீன் கானரி, ரோஜர் மூர், வுடி ஆலன், திமோத்தி டால்டன், பியர்ஸ் பிராஸ்னன், டேனியல் க்ரெய்க், உட்பட பல நடிகர்கள் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் சீன் கானரிக்குப் பிறகு ஜேம்ஸ் பாண்டாக 72 ஆம் ஆண்டு வாக்கில் பாண்ட் படங்களில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி கலக்கத் தொடங்கிய ரோஜர் மூருக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. ரோஜர் மூரை அக்கால கட்டத்தில் மக்கள் நிஜ ஜேம்ஸ்பாண்டாகவே கருதினார்களாம்.  

ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் நடித்த நடிகர்களைப் பெரியவர்களைக் காட்டிலும் உலகம் முழுக்க குழந்தைகளும் அதிகம் கொண்டாடினார்கள். இதற்கு காரணம் திரைப்படங்களில் மட்டுமல்ல ஜேம்ஸ்பாண்ட்கள் சிறுவர்களுக்குப் பிடித்த  காமிக்ஸ் புத்தகங்கள் வழியாகவும் இன்றளவும் உலகம் முழுவதும் உள்ள அனைத்துக் குழந்தைகளையும் சென்றடைந்து கொண்டிருக்கிறார்கள் என்பதால் தான். இதன் காரணமாகவே ஜேம்ஸ் பாண்ட்டாக நடித்த ரோஜர் மூரை யூனிசெஃப் நிறுவனம் தனது பிராண்ட் அம்பாஸிடராகத் தேர்ந்தெடுத்தது.

தற்போது அவர் காலமானதைத் தொடர்ந்து யுனிசெஃப் செயல் இயக்குனர் ஆண்ட்டனி லேக் வெளியிட்டுள்ள இரங்கல் கடிதத்தில்; “குழந்தைகளின் சாம்பியன்களுள் மகத்தான ஒருவரை நாம் இன்று இழந்து விட்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார். குழந்தைகளுக்காக வாதாடி அவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தருவதில் ரோஜர் மூர் யுனிசெஃப் விளம்பரத் தூதராக மிகத் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தார். தனது சக உறுப்பினரும் 4 ஆவது மனைவியுமான லேடி கிறிஸ்டினாவுடன் இணைந்து ரோஜர் மூர் குழந்தைகளின் எதிர்கால நலனுக்கான யூனிசெஃப் திட்டங்களைச் செயல்படுத்த மிகக் கடுமையாக உழைத்தார். குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு அமைதியான வளமான எதிர்காலத்தை உருவாக்கித் தருவது நமது கடமை என்பதே அவரது எண்ணமாக இருந்தது. இதை அவர் எங்களிடமும் சொல்லத் தவறியதில்லை.

குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்ட அவர்களுக்கு மிகப் பிடித்த ஜேம்ஸ் பாண்ட் இன்று நம்மிடையே இல்லை. அந்த வகையில் யுனிசெஃப் இன்று தனது குழந்தைகளுக்கான சாம்பியன்களில் மகத்தானவராகத் திகழ்ந்தவர்களில் ஒருவரான ரோஜர் மோரை இழந்து விட்டது. யுனிசெஃப் மட்டுமல்ல இந்த ஒட்டுமொத்த உலகமும் தான் இன்று தனது சாம்பியன்களில் ஒருவரை இழந்து விட்டதாகக் கருதுகிறது. என யுனிசெஃப் தனது வருத்தத்தைப் பதிவு செய்திருப்பதாக Xinhua நியூஸ் ஏஜன்ஸி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த உலகில் ஒரு மனிதர் படு பிரபலமாக வேண்டுமெனில் முதலில் ஈர்க்க வேண்டியது ஆண்களையோ, பெண்களையோ, வயதானவர்களையோ அல்ல; அன்றும் இன்றும் என்றும் குழந்தைகளையும், சிறுவர்களையும் பெருவாரியாக ஈர்க்க முடிந்தால் நிச்சயம் அவர்கள் அகில உலகப் பிரபலங்கள் ஆகியே தீர்வார்கள் என்பது உலக நியதி. அப்படி ஜேம்ஸ் பாண்டாக மட்டுமல்லாமல் தமது வாழ்வின் இறுதி மூச்சிலும் கூட குழந்தைகளை ஈர்க்கும் ஒரு அடையாளமாக தனது சமூக சேவைப் பணிகளின் தடங்களை விட்டுச் சென்றிருக்கிறார் குழந்தைகளின் சாம்பியனான ஜேம்ஸ் பாண்ட் ரோஜர் மூர்.

அடைப்படையில் ஒரு மனிதன் இருக்கும் போது அவனைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டாத உலகம், அவன் இறந்த பின் அவனை அறிந்து கொள்ள ஆர்வம் கொள்ளும். அப்படித்தான் நேற்றும், இன்றும் ரோஜர் மூரை உலகம் முழுக்க கூகுளிலும் மற்ற தேடு பொறிகளிலும் தேடிக் கொண்டே இருக்கும் மக்கள் அனேகம் பேர். அவர்களைப் போலவே ரோஜரின் கதையை அறிய நாமும் தான் கொஞ்சம் தேடிப் பார்ப்போமே...

ரோஜரின் கதை சுருக்கமாக...

பிறப்பு, வளர்ப்பு, கல்வி...

லண்டன் ஸ்டாக்வெல்லில் 1927 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 14 ஆம் நாள் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் காவல்துறை அதிகாரியாக இருந்த ஜார்ஜ் ஆல்ஃப்ரெட் மூருக்கும், லில்லி போப்புக்கும் பிறந்த ஒரே செல்ல மகன் ரோஜர் மூர். மூரின் அம்மா லில்லி இந்தியாவில் பிறந்த பிரிட்டிஷ் பெண்மணி. ஆம் அவர் பிறந்தது நமது கொல்கத்தாவில் தானாம். ஆனால் பாண்ட் பிறந்ததும் , படித்ததும் லண்டனில் தான். ஆரம்பத்தில் பாட்டர்ஸீ கிராமர் ஸ்கூலில் பயின்ற மூர் பின்னர் ஹோல்ஸ்வொர்த்திக்கு இடம் பெயர்ந்தார். இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்து கொண்டிருந்த சமயம் மூர் லான்செஸ்டன் கல்லூரி மாணவராக இருந்தார். அங்கிருந்து பக்கிங்காம்ஷையரில் இருக்கும் மற்றொரு கல்லூரிக்கு இடம் பெயர்ந்த மூர் கடைசி வரை தனது கல்லூரிப் படிப்பைத் முடித்து பட்டம் மட்டும் பெறவே இல்லை என்கிறது அவரது சிறு வயது பிறப்பு வளர்ப்பு பற்றிய குறிப்புகள்.

எக்ஸ்ட்ரா ஆர்டிஸ்ட்...

தொடர்ந்து தனது கல்லூரிப் படிப்பை முழுதாக முடிக்காமலே மூர், ஒரு அனிமேஷன் ஸ்டுடியோவில் தொழில்நுட்பம் கற்றுக் கொள்ள வேலைக்குச் சேருகிறார். அங்கே சில மாதங்களில் அனிமேஷன் செல் உருவாக்கத்தில் மிகப்பெரிய தவறைச் செய்து மிகக் கடுமையாக கடிந்து கொள்ளப்பட்டு வெளியேற்றப் படுகிறார். ஆனாலும் மூரின் அதிர்ஷ்டம் அவரது தந்தை வடிவில் மூரின் தோளைத் தட்டி அரவணைத்துக் கொள்ளும் காலம் வந்தது. மூரின் தந்தை காவல்துறை அதிகாரி என்று முன்னரே சொன்னோமில்லையா? அவர் அப்போது ஹாலிவுட்டின் பிரபல இயக்குனராக இருந்த பிரையன் தேஸ்மண்ட் ஹர்ட் வீட்டில் நடைபெற்ற ஒரு திருட்டு வழக்கை விசாரித்துக் கொண்டிருந்தார். வழக்கு பற்றிய விசாரணைகளுக்காக ஜார்ஜ் மூர் இயக்குனர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்ததில் அவரது மகனான ரோஜர் மூருக்கு அந்த இயக்குனரின் சீஸர் அண்ட் கிளியோபாத்ரா திரைப்படத்தில் எக்ஸ்ட்ரா வேடத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. பார்த்துக் கொள்ளுங்கள் இப்படித் தான் மூரின் ஹாலிவுட் பிரவேஷம் நிகழ்ந்திருக்கிறது.

ரோஜரின்  ‘ராயல் அகாதெமி ஆஃப் டிராமாடிக் ஆர்ட்’  நாட்கள்...

ஆரம்பத்தில் எக்ஸ்ட்ரா ஆர்டிஸ்டாக பட வாய்ப்புகளை பெற்றாலும் கூட படப்பிடிப்பு கேமராக்களை ஆஃப் செய்த பின்னும் கூட மூரை சுற்றிச் சூழ்ந்து கொண்டிருந்த எண்ணற்ற ரசிகையர் பட்டாளத்தைக் கண்ட இயக்குனர் பிரையன் பெண் ரசிகைகளைடையே மூருக்கு இருந்த பிரமாதமான வரவேற்பைக் கண்டு கொண்டார். கண்டு கொண்டதோடு பொறாமைப் பட்டு அப்படியே போனால் போகட்டும் எனக் கழட்டி விட்டிருந்தால் நமக்கு இப்படி ஒரு ஜேம்ஸ் பாண்ட் கிடைத்திருக்க மாட்டார் தானே?! ஆனால் பிரையன் அப்படிச் செய்யவில்லை மூரை Royal Academy of Dramatic Art சுருக்கமாக RADA கல்லூரியில் சேர்த்து விட்டதோடு அங்கே அவரது கல்விக்கான முழுச் செலவையும் தானே ஏற்றுக் கொண்டார். இங்கே தான் மூர் தனது பிறகால பாண்ட் திரைப்படங்களில் தான் கையாண்ட மத்திய அட்லாண்டிக் ஆங்கில உச்சரிப்பு மற்றும் கேஷுவலான சீரியஸ் நகைச்சுவை நடிப்பை படிப்படியாக கற்றுக் கொண்டு பரீட்சித்துப் பார்த்தார். இங்கே பாண்ட்டின் சக வகுப்புத் தோழி யார் தெரியுமா? ஜேம்ஸ்பாண்ட் படங்களில் மூருடன் பிற்காலத்தில் இணைந்து நடித்த லூயிஸ் மேக்ஸ்வெல் தான் அவர். அவரே தி வொரிஜினல் ரியல் Miss. momeypenny.

ராணுவ சேவை... 

அதன் பின்னர் தனது 18 வயதில் இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த காலத்தை ஒட்டி மூர் நேஷனல் சர்வீஸ் செய்ய ராயல் ஆர்மியில் இணைந்தார். 1946 ஆம் ஆண்டு வாக்கில் தனது ராயல் அகாதெமி சர்வீஸ் காப்ஸ் பதவியில் இருந்து செகண்ட் லெப்டினெண்டாக பதவி உயர்வு பெற்றார். அப்போது அவருடைய சர்வீஸ் நம்பர் 372394. அங்கே அவர் பிற்காலத்தில் கேப்டனாகவும் இருந்து கொண்டு கம்பைண்டு சர்வீஸஸ் எண்டர்டெயின்மெண்ட் அதிகாரியாகவும் இரட்டைப் பொறுப்பு வகித்தார்.

விளம்பர மாடலாக சில காலம்...

இப்படித் தொடங்கிய மூரின் பயணம் அடுத்து மாடலிங் துறையில் அவரைத் தள்ளியது. 1950 ல் பின்னலாடை விளம்பரங்களில் நடிக்கத் தொடங்கி டூத் பேஸ்ட் விளம்பரம் வரை நடித்தார். இப்படிச் சின்னச் சின்னதாக மாடலிங் செய்யத் தொடங்கி பின்னர் படிப்படியாக வளர்ச்சி அடைந்த மூரின் திரைப்பயணம் குறித்து பல்வேறு விமரிசனங்கள் இருந்தாலும் மூர் தனது நூலான, லாஸ்ட் மேன் ஸ்டேண்டிங்கில் தனது முதல் திரைப்பிரவேஷமாக குறிப்பிட்டிருப்பது 1949 இல் பாட்ரிக் ஹாமில்ட்டன் இயக்கத்தில் லைவ் ஆக வெளிவந்த ‘தி கவர்னஸ்’ தொலைக்காட்சித் தொடரைத் தான்.

தொலைக்காட்சி மெகா சீரியல் நாயகனாக சில காலம்...

இப்படி முதலில் திரைப்படங்களில் எக்ஸ்ட்ரா நடிகர், அதன் பின்னர் ராயல் ஆர்மி வேலை, அதைத் தொடர்ந்து விளம்பர மாடல் அப்படியே கொஞ்சம் முன்னேறி தொலைக்காட்சி தொடர்களின் நாயகன் என மூரின் திரையுலக கிராஃப் மேலேறிக் கொண்டே இருந்தது. ஒரு காலகட்டத்தில் ஜேம்ஸ்பாண்ட் சீரிஸ் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த சீன் கானரிக்கு வயதாகி விட அவருடனான காண்ட்ராக்ட்டை முடித்து விட்டு ரோஜர் மூரை ஒப்பந்தம் செய்ய விரும்பினார்கள் பாண்ட் பட யூனிட்டார். ஆனால் அப்போது உடனே ரோஜர் மூரால் அவர்களது பெருமைக்குரிய வாய்ப்பை ஒப்புக் கொள்ள முடியாத அளவுக்கு தொலைக்காட்சி தொடர் வேலைகளில் வகையாக மாட்டிக் கொண்டிருந்தார் மூர். அனைத்து தொடர்களுமே மூருக்கு வெகுஜன மக்களிடையே குறிப்பாக பெண் ரசிகைகளிடையெ மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்றுத் தந்தவை என்பதால் இடையில் அந்த வேலைகளில் இருந்து பிய்த்துக் கொண்டு வெளியேற மூரால் இயலவில்லை.

ஜேம்ஸ் பாண்டாகக் களமிறங்கிய நாட்கள்...

தனது தொடர்களை முடித்துக் கொண்டு ஜேம்ஸ் பாண்ட் யூனிட்டுடன் ரோஜர் மூர் இணைந்தது சரியாகச் சொல்ல வேண்டுமெனில் 1972 ஆம் ஆண்டில் தான். அப்போது தொடங்கியது மூரின் ஜேம்ஸ் பாண்ட் பயணம். தொடர்ந்து 7 படங்களில் ஜேம்ஸ் பாண்டாக மூர் நடித்தார். இதில் சுவாரஸ்யமான விசயம்... ஜேம்ஸ் பாண்டாக நடிக்க படக்குழுவினர் எப்போதும் மிக இளமையான நடிகர்களையே தேர்வு செய்து ஒப்ப்ந்தம் செய்து கொள்வது வழக்கம். ஆனால் மூர் மட்டும் அந்தக் கொள்கைக்கு விதி விலக்கு. ஏனெனில் ஜேம்ஸ் பாண்ட் சீரிஸ் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகும் போதே மூருக்கு வயது 45, அதன் பின்னர் 1985 ல் மூர் தனது ரிடையர்மெண்ட்டை அறிவிக்கும் வரை அதாவது அவரது 58 ஆம் வயது வரை மூர் தான் ஜேம்ஸ்பாண்ட். வயதான பின்னரும் ஜேம்ஸ்பாண்டாகக் கலக்கிய நடிகர் மூர் ஒருவரே என்றால் அது உண்மையே!

ரோஜர் ஜேம்ஸ் பாண்டாக நடித்த திரைப்படங்கள்...

  • Live and let die
  • The man with the golden gun
  • The spy who loved me
  • Moon raker
  • For your eyes only
  • Octopussy
  • A view to a kill

தனிப்பட்ட வாழ்க்கை...

முதல் மனைவி வான் ஸ்டெய்ன்...

திரை வாழ்க்கை தவிர தனது தனிப்பட்ட வாழ்வில் ரோஜர் நான்கு முறை திருமணம் செய்து கொண்டவர். முதல் முறை திருமணம் செய்து கொண்ட போது மூருக்கு வயது 18. RADA கலைப்பள்ளியில் பயிலும் போது தனது சக வகுப்புத் தோழியான டோர்ன் வான் ஸ்டெய்னைத் திருமணம் செய்து கொண்டார் ரோஜர் மூர். ஆனால் இவர்களது திருமணம் வெற்றியடையவில்லை. மூருக்கு சரியான வருமானமில்லாததால் மனைவியான வான் ஸ்டெய்ன் வீட்டினரோடு சேர்ந்து வசிக்க நேர்ந்தது. அங்கே மூருக்கு துளி மரியாதை இல்லாததால் வீட்டு வேலைகளைச் செய்யப் பணிக்கப் பட்டார். இதனால் மனமுடைந்த மூர் தன் முதல் மனைவியை விவாகரத்து செய்யும் நிலைக்குப் போனார். 

இரண்டாம் மனைவி டோரத்தி...

வான் ஸ்டெய்னை அடுத்து மூர் மணந்து கொண்டது டோரத்தி எனும் வேல்ஸ் பாடகியை. இவர் மூரை விட 12 வயது மூத்தவர். இவர்களது திருமணத்தில் ஆரம்பம் முதலே பல்வேறு தடங்கல்கள் இருந்து வந்தன. அதிலொன்று அந்த வயது வித்யாசம். அது மட்டுமில்லாமல் மூர் அடுத்தபடியாக இத்தாலிய நடிகையான லூயிஸா மாட்டியோலியுடன் காதலாகி இருப்பதும் டோரத்திக்கு தெரிய வந்தது. பிறகென்ன இருவருக்குமிடையே தினமொரு சண்டை தான். சண்டையின் உச்சத்தில் ஒருமுறை மூரின் தலையில் கிடாரை மோதி உடைத்தார் டோரத்தி. அது மட்டுமல்ல மூர், லூயிஸாவைத் திருமணம் செய்து கொள்ளப் போவதை சகித்துக் கொள்ள முடியாமல் ஒருமுறை லூயிஸாவின் வீட்டில் மூர் இருக்கும் போது ஜன்னல் கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே இறங்கி மூரின் சட்டையைப் பிடித்து உலுக்கி தனது நியாயத்தைக் கேட்டிருக்கிறார். எந்த எல்லைக்குச் சென்று போராடியும் கூட டோரத்தியால் மூர், லூயிஸா காதலை உடைக்க முடியவில்லை. அடுத்தடுத்த பெண்களைத் திருமணம் செய்து கொண்ட போதிலும் மூரும் டோரத்தியை முழுதாகக் கைவிட்டு விடவும் இல்லை. டோரத்தி கேன்ஸரால் மரணிக்கும் வரை அவரது அனைத்து மருத்துவச் செலவுகளையும் மூர் தான் ஏற்றுக் கொண்டார் என்கின்றன அப்போதைய ஆங்கில ஊடகச் செய்திகள். வயது வித்யாசத்தினால் இருவரும் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாமல் போனதும் கூட இவர்களுக்கிடையிலான விலகலுக்கும், பிரிவுக்கும் காரணங்களாக இருக்கலாம் என கருதப் படுகிறது. பிற மனைவிகளை விட டோரத்திக்கு மூரின் மீதிருந்த உரிமையுணர்வு அதிகம் தான் போலும்!

மூன்றாம் மனைவி லூயிஸா மாட்டியோலி...

டோரத்தியுடனான விவாகரத்தின் பின் மூர் லூயிஸாவை மணந்தார். இந்த மண உறவும் நீடிக்கவில்லை. தனக்குப் பின் மூர் தனது நெடுநாள் தோழியும் சமூக சேவகியுமான கிறிஸ்டினாவுடன் ஸ்நேகமானதை விரும்பாத லூயிஸா மூரிடம் இருந்து விவாகரத்துப் பெற்று விலகினார். சும்மா இல்லை பெரும் தொகையை செட்டில்மெண்ட்டாகப் பெற்றுக் கொண்டு விலகினார். 7 வருட தாம்பத்ய வாழ்வில் லூயிஸாவுக்கும், மூருக்கும் மூன்று வாரிசுகள் இருந்தனர். ஒருமகள், இரண்டு மகன்கள். மூவரும் மூரின் பேர் சொல்லும் பிள்ளைகளாக திரைத்துறையில் தான் இருக்கின்றனர். தமது பெற்றோர்களின் பிரிவைக் குறித்துப் பேச இந்தப் பிள்ளைகள் இப்போதும் விரும்புவதில்லையாம். மூரும் தனது குழந்தைகளிடம் மிகுந்த பிரியமுள்ள தகப்பனாகவே இருந்திருக்கிறார். ஏனெனில் லூயிஸாவுடனான தமது விவாகரத்து குறித்த ஊடகங்களின் சர்ச்சைக்குரிய எந்தக் கேள்விகளுக்கும் மூர் பதில் சொல்லவே இல்லையாம். காரணம் தனது குழந்தைகள் இதனால் மனமுடைந்து விடக் கூடாது என்பதால் என மூர் அப்போது தெரிவித்திருக்கிறார்.

நான்காம் மனைவி கிறிஸ்டினா...

தனது நான்கு திருமணங்களிலும் மூர் நிம்மதியாக வாழ்ந்தது கிறிஸ்டினாவுடன் தான் எனக் குறிப்பிட்டிருக்கிறார். கிறிஸ்டினா தன்னை முழுக்க முழுக்க ஒரு குழந்தையாகவே கவனித்துக் கொண்டதாக மூர் குறிப்பிடுகிறார். கிறிஸ்டினாவுடன் தனது மண வாழ்வு தொடங்கும் போதே மூருக்கு புராஸ்டேட் கேன்ஸர் இருந்திருக்கிறது. என்ன தான் ஜேம்ஸ்பாண்ட் நாயகனாக இருந்தாலும் நோயால் பாதிக்கப் பட்ட ஒரு நபரைத் திருமணம் செய்து கொண்டு தொடர்ந்து அவரது நோய் உபாதைகளின் போதெல்லாம் ஆறுதல் கூறி தனது சமூக சேவை செயல்பாடுகளிலும் கணவரையும்உடன் இணைத்துக் கொண்டு கிறிஸ்டினா வாழ்ந்த வாழ்க்கை மிகுந்த அர்த்தமுள்ளது. இதைப் பற்றிப் பேசுகையில் எங்களுக்கிடையிலான வாழ்க்கை ஒரு தெளிந்த நீரோடை போல அமைதியாக இருந்தது என மூர் குறிப்பிடுகிறார்.

சென்று வாருங்கள் பாண்ட்...ஜேம்ஸ் பாண்ட்...

எது எப்படியோ உலகெங்கும் இருக்கும் காமிக்ஸ் ரசிகர்களுக்கும், ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்களுக்கும் ரோஜர் மூரின் இழப்பு மிகுந்த வருத்தத்திற்குரிய ஒன்றே!

ஜேம்ஸ் பாண்டாக நடிக்க பல நடிகர்கள் வரலாம். ஆனால் ரோஜர் மூரின் அந்த ரொமாண்டிக்கும், நகைச்சுவையும் கலந்த தில்லான சாகஷ நடிப்பை நாம் வேறெந்த ஜேம்ஸ் பாண்டிலும் காண முடியாது.

சென்று வாருங்கள் பாண்ட்... ஜேம்ஸ் பாண்ட்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com