குளிர்காலமோ, வெயில் காலமோ எந்தக் காலமாக இருந்தாலும் சிலருக்கு எந்த குளியல் சோப்பும் ஒத்துக் கொள்வதே இல்லை. அவர்களும் தொலைக்காட்சி விளம்பரங்களில் காட்டப்படும் அத்தனை நிறங்களிலான சோப்புகளையும் ஒன்று விடாமல் பயன்படுத்தி ஓய்ந்திருப்பார்கள். சிலர் கலர், கலராக சோப் எதற்கு என்று வெள்ளை நிற சோப்புக்கு மாறிய பின்னரும் கூட சருமம் என்னவோ அவர்களது ஆசைப்படி பளபளக்காமல் மேலும் பொலிவிழந்து வறண்டும், வெடித்தும் தோற்றமளிப்பதைக் கண்டு மனச்சோர்வில் வீழ்ந்திருப்பார்கள். அப்படிப் பட்டவர்கள்... சோப்போடு நிறுத்திக் கொள்வதில்லை. சோப்பில் கிடைக்காத சரும மென்மை மாய்ஸைரைஸைர்களில் கிடைக்கிறதா பார்க்கலாம் என பல்வேறு நிறங்களில் மாய்ஸ்ரைஸர்களைப் பயன்படுத்தி சருமத்தை ஈரப்பதமாக வைத்துக் கொள்ள முயன்று கொண்டிருப்பார்கள். ஒருநாள் இவற்றைப் பயன்படுத்த மறந்தாலும் போதும் சருமம் வறண்டும், சுருங்கியும், பாளம் பாளமாக வெடித்தும் காட்சியளித்து மானத்தை வாங்கும்.