காதல், கலப்புத் திருமண விவகாரங்களில் பெற்றோர்கள் சார்பாக ஒரு வார்த்தை பேசினாலும் அது சாதி துவேஷமா?

உண்மையைச் சொல்லுங்கள், உங்களில் எத்தனை பெற்றோர், உங்களது பிள்ளைகள் காதல் என்ற பெயரில் வேற்று மதத்தினரை, அயல் ஜாதியினரை மட்டுமல்ல சொந்த ஜாதியினரையே கூட திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வந்து நிற்கு
காதல், கலப்புத் திருமண விவகாரங்களில் பெற்றோர்கள் சார்பாக ஒரு வார்த்தை பேசினாலும் அது சாதி துவேஷமா?

'பெற்றோர் அனுமதியின்றி திருமணப் பதிவு இல்லை' என்ற இந்து திருமணப் பதிவுத்துறையின் அறிவிப்பு குறித்து நேற்று கனிமொழி ஒரு கருத்து தெரிவித்திருந்தார்! அதை தினமணி இணையதளத்தில் செய்தியாக்கியிருந்தோம். செய்தியை சமூக ஊடகங்களில் பகிரும் போது பகிர்பவர் அந்தச் செய்தி தொடர்பாக தமது கருத்தையும் ஒரு சிறு குறிப்புடன் பகிர்வது வழக்கம். அப்படிப் பகிர்ந்த போது அதற்கு கணிசமாகக் கண்டனங்கள் குவிந்திருந்தன. இதில் அதிர்ச்சியடைய ஏதுமில்லை, இன்று சமூக ஊடகங்களில் கருத்துரைக்கிறோம் என்ற பெயரில் யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் சாடலாம் என்ற வசதி இருக்கிறதே. அதனால் இம்மாதிரியான வசைச்சொற்களுக்கெல்லாம் கட்டுப்பாடென்பதே இல்லாமலாகி விட்டது. அதில் சிலர், எது ஊடக தர்மம் என்று வகுப்பெடுக்காத குறை. 

சரி இப்போது நேற்று அந்தப் பதிவில் சாடியவர்கள், (சாடல் என்பதெல்லாம் நாகரீகமான வார்த்தை) சாடல் என்ற பெயரில் மிகக்கேவலமான சாக்கடைக் கருத்துக்களை அள்ளித்தெளித்தவர்களை என்ன செய்யலாம்? ஊடக தர்மத்தைப் பற்றிப் பேசுபவர்களுக்கு வாசக தர்மத்தைப் பற்றியும் கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டுமில்லையா? மிகச்சாதாரண வார்த்தைகளுக்கு அத்தனை மோசமான எதிர்வினையாற்ற வேண்டிய கட்டாயமென்ன? எது உங்களை அப்படிச் செய்யவைக்கிறது?

இத்தனைக்கும் அதில் சொந்தக் கருத்தாகப் பகிர்ந்திருந்தது;

//பெற்றோரை அனுசரித்துப் புரிந்து கொள்ளச் செய்ய முடியாத காதலுக்கு திருமணத்தில் முடிய மட்டும் தகுதி உண்டா? இதனாலெல்லாம் சாதிமறுப்புத் திருமணங்கள் தடைபடுமென்பது அரசியல் ஆதாயத்திற்காகப் பேசுவதாகாதா?//  - என்ற கருத்து மட்டுமே,

இந்த வார்த்தைகளில் எங்கே மறைந்திருக்கிறது சாதி துவேஷம்? எங்கே துருத்திக் கொண்டிருக்கிறது மேதகு ட்விட்டர் புரட்சியாளர்கள் கர்ம சிரத்தையுடன் சுட்டிக்காட்டிய பார்ப்பானின் கொண்டையும், பூணூலும்?!

அந்த வாக்கியத்தில் தொனிப்பது பெற்றோர் மீதான பரிதாப உணர்வு மட்டுமே தவிர சாதீய துவேஷமல்ல. இதைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் ஒவ்வொருவருக்கும் அவரவர் பெற்றோரின் மீது கொஞ்சமாவது அக்கறையும், நேசமும் இருக்க வேண்டுமே?! அவர்கள் எக்கேடு கெட்டால் என்ன? நான் திருமண விஷயத்தில் என் இஷ்டப்படி மட்டுமே முடிவு செய்வேன். அதனால் பெற்றோரது மனமுடைந்தால் என்ன? மார்பு வெடித்துச் செத்தால் என்ன? என்று தன்னலமே பிரதானமாக சுயநலத்தில் உழல்பவர்களுக்கு எப்படிப் புரியும்?!

இந்த உலகம் பிள்ளைகளின் காதலை எதிர்ப்பதை வாழ்நாள் லட்சியமாகக் கொண்ட பெற்றோர்களால் மட்டுமே நிரம்பியதல்ல.

தங்களது வாழ்நாள் முழுமையையும் பிள்ளைகளின் நல்வாழ்வுக்காகவும், எதிர்கால முன்னேற்றங்களுக்காகவும் அர்ப்பணித்து விட்டு அவர்களது வளர்ச்சியைக் கண்டு இன்புறும், நிம்மதியடையும் பெற்றோர்களாலும் நிரம்பியது தான். அவர்களின் சார்பாக ஒரு வார்த்தை பேசினால் அதை சாதி துவேஷம் என்பீர்களா? அப்படிச் சொன்னால் தானே அவர்கள் மேலே பேச மாட்டார்கள், சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் தம் மீது விழும் சாக்கடை விமர்சனங்களுக்குப் பயந்து கொண்டு ஒதுங்கிச் செல்வார்கள் என்ற விஷமத்தனமான குயுக்தி தானே இது. 

உண்மையைச் சொல்லுங்கள், உங்களில் எத்தனை பெற்றோர், உங்களது பிள்ளைகள் காதல் என்ற பெயரில் வேற்று மதத்தினரை, அயல் ஜாதியினரை மட்டுமல்ல சொந்த ஜாதியினரையே கூட திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வந்து நிற்கும் போது உடனே எந்தக் கேள்வியுமின்றி கை தட்டி வரவேற்று அதை அப்படியே ஏற்றுக் கொண்டவர்களாக இருப்பீர்கள்? இருந்தீர்கள்? என மனசாட்சியுடன் நேர்மையாகப் பதிலளியுங்கள்.

இந்தக் கேள்விக்கு, இந்தியப் பெற்றோரில் பலர் எடுத்ததுமே; நிர்தாட்சண்யமாக ‘இல்லை... ஒருக்காலும் இல்லை’ என்று பதிலளிக்கலாம். உடனே அதற்குக் காரணம் சாதி வெறி, மத வெறி என்று முடிவு கட்டாதீர்கள் அவசரக் குடுக்கைகளே! பயம், இதுவரை தாங்கள் அனுசரித்து வந்த பழக்க வழக்கங்களுக்கு முற்றிலும் வேறான பழக்க வழக்கங்கள், சம்பிரதாயங்கள், சடங்குகளைக் கொண்ட மற்றொரு சாதியை, மதத்தைச் சேர்ந்த மணமகனையோ, மணமகளையோ எப்படி ஏற்றுக் கொள்வது? காதலால் இணைந்தவர்கள் திருமண வாழ்வின் பின் சேர்ந்து வாழும் போது ஒருவரையொருவர் அனுசரித்து சண்டை சச்சரவின்றி மனக்கசப்பின்றி வாழ முடியுமா? என்ற பயமும், சந்தேகமும், தயக்கங்களும் தான் எடுத்த எடுப்பில் பெரும்பாலான பெற்றோரை காதல் திருமணம் என்றதுமே அதற்கு மறுப்புத் தெரிவிக்க வைக்கிறது.

இதை ட்விட்டர் புரட்சியாளர்கள் மறுக்கிறீர்களா?

ஜாதி, மதம் எல்லாம் ரெண்டாம் பட்சம்; 

காதல் என்றாலே பெற்றோர் மனதில் முதற்கட்டமாக எழுவது தயக்கமும் எதிர்ப்பும் தான். காரணம் தங்களது பிள்ளைகள் அவர்களுக்குப் பொருத்தமான இணைகளைத் தாங்களாகத் தேடிக் கொள்ளும் அளவுக்கு பக்குவம் வாய்ந்தவர்களா? மனமுதிர்ச்சி கொண்டவர்களா? அல்லது நாளை மணவாழ்வில் ஏதேனும் பிரச்னை வரும் போது எடுத்தேன், கவிழ்த்தேன் என்று ஏடாகூடமாகச் செய்து வைத்து விட்டு மனமுறிவென்று தங்களது வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொள்வார்களோ என்ற அச்சமும், சஞ்சலமும் தான். திருமண விஷயத்தில் மட்டுமல்ல படிப்பு, வேலை, சொந்தங்கள் மற்றும் நட்புகளுக்குள் உறவுகளை மேம்படுத்திக் கொள்வது என வாழ்வின் பிற விஷயங்களிலும் கூட வயதுக்கேற்ற பக்குவத்துடனும், மன முதிர்ச்சியுடனும் முடிவெடுத்து தாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக நிற்கும் பிள்ளைகளின் முடிவுகளை பெற்றோர் எப்போதும் எதிர்க்க நினைப்பதில்லை. சில குடும்பங்களில் பெற்றோர் ஆரம்பத்தில் குடும்பப் பெருமை, அந்தஸ்து, சாதி என்று அடம்பிடித்தாலும் தங்களது காதலைப் போலவே பெற்றோரது அப்பழுக்கற்ற அன்பையும் புறக்கணிக்க விரும்பாத பிள்ளைகளின் பிடிவாதத்தையும், காத்திருப்பையும் அவர்கள் புரிந்து கொள்ளத்தான முயல்கிறார்கள். இல்லாவிட்டால் பெற்றோர் சம்மதத்துடன் நடக்கும் கலப்பு மணங்களின் விகிதம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்ல வாய்ப்பில்லையே.

பிள்ளைகள் காதலிப்பதில் தவறே இல்லை. காதல் அழகான விஷயம். அது காதலாக இருக்கும் வரை. எப்போது அதில் சாதி உணர்வு நுழையத் தொடங்குகிறதோ அப்போதே அது தனது அழகியல் உணர்வை இழந்து வன்முறையின் பக்கம் சாயத் தொடங்கி விடுகிறது. 

சாதி மாறியோ, மதம் மாறியோ திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள் தத்தமது பெற்றோரின் அனுமதிக்கு காத்திருந்தால் என்ன தவறு? காத்திருந்து கண்ணியமாகத் திருமணம் செய்து கொள்வது காதலுக்கு அழகில்லை என்று சொல்ல முடியுமா? பிள்ளைகளின் மீது அக்கறை கொண்ட, தமது பிள்ளைகளின் நல்வாழ்வின் மீது அக்கறை கொண்ட பெற்றோர் பிள்ளைகளின் காதலில் உண்மையும், நேசமும் நிஜமாகவே இருந்தால் நிச்சயம் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளத்தான் செய்வார்கள், செய்கிறார்கள். இதற்கு சிறந்த வாழ்வியல் உதாரணங்களாகப் பலர் இருக்கின்றனர். எல்லாப் பெற்றோர்களுமே ஆணவக் கொலை செய்ய நினைப்பவர்கள் அல்ல. தங்களது பிள்ளைகள் காதலில் விழுந்திருப்பின் எப்பாடுபட்டாவது அதை உடைத்து உருக்குலைந்து போகச் செய்ய வேண்டும் என நினைப்பவர்களும் அல்ல. காதலுக்கு உரிய மரியாதை செய்து அதை ஏற்றுக் கொள்ள நினைப்பவர்களும் நம்மிடையே கணிசமாக இருக்கிறார்கள்.

பிள்ளைகள் காதல் என்று வந்து நின்றவுடன் உடனே எந்தக் கேள்வியும் கேட்காமல் பெற்றோரால் அந்தக் காதல் ஆரத்தி எடுத்து வரவேற்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று நினைப்பது சுயநலமானதில்லையா? உங்களது காதல் தெய்வீகக் காதல் என்றால், அந்தக் காதலை பெற்றோர் உணர்ந்து கொள்ள அவர்களுக்கு அவகாசம் தர வேண்டும், அதற்காக பிள்ளைகள் காத்திருக்க வேண்டும். தங்களது காதலின் மீதான நியாயத்தைப் பெற்றோருக்குப் புரிய வைக்க வேண்டும். அதற்காக பெற்றோரை அனுசரித்து பொறுமை காக்க வேண்டும் என்று சொன்ன கருத்தில் பிழை இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

தங்களது பிள்ளைகளுக்குப் பொருத்தமான மனைவியையோ, கணவனையோ தேடித்தருவது அவர்களைப் பெற்றெடுத்து இந்த உலகத்துக்கு அறிமுகப்படுத்தியவர்களான தாங்களாகவே இருக்க வேண்டும் என்ற பெற்றோர்கள் நினைப்பதொன்றும் பேராசை இல்லையே. காலம்காலமாக நமது இந்து திருமணமுறைகளில் பின்பற்றப்பட்டு வரும் முறை தானே இது. இதில் சில திருமணங்கள் ஆஹா, ஓஹோவென்ற வெற்றியடைந்திருக்கலாம். சில திருமணங்கள் மிக மோசமாகத் தோல்வியிம் அடைந்திருக்கலாம். அதற்காக பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் திருமணங்கள் இன்றைய காலகட்டத்துக்கு ஒத்து வராதவை என்று முற்றாகக் ஒதுக்கி விட முடியாதே. அது மட்டுமல்ல, பல குடும்பங்களில் இன்று காதல் திருமணங்களுக்கும் வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. தங்கள் மகனோ, மகளோ விரும்பக் கூடிய நபர்கள் நல்லவர்கள், தங்களது குடும்பத்தோடு பொருந்திப் போகக் கூடியவர்கள் என்ற நம்பிக்கை ஏற்படுமாயின் அத்தகைய திருமணங்களை பெற்றோரே ஏற்றுக் கொண்டு சிறப்பாக நடத்தி வைக்கக் கூடிய காட்சிகளையும் நாம் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்.

இங்கே பிரச்னை காதலிலோ, கலப்பு மணங்களிலோ இல்லை. மனிதர்களின் மனங்களில் தான்.

காதல், கலப்புத் திருமணங்களில் மட்டுமல்ல பெற்றோர்கள் பார்த்துச் செய்து வைக்கும் திருமணங்களிலும் கூட... திருமணம் என்பது இரு வீட்டார் உறவை பலப்படுத்துவதாக, திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்கப்போகும் ஜோடிகளுக்கு இரண்டு தரப்பிலுமாகச் சேர்த்து மேலும் பல உறவினர்களையும், நட்புகளையும் ஏற்படுத்தித் தரக்கூடிய ஒன்றாக அமைய வேண்டும். அப்படியின்றி எடுத்த எடுப்பில் கொடும் பகையையும், வன்மத்தையும், நீ பெரிதா? நான் பெரிதா? உன் ஜாதி, மதம் பெரிதா? என் ஜாதி, மதம் பெரிதா? என்று பலப்பரீட்சை செய்து கொள்ள உதவும் ஒன்றாக அமைந்து விடக்கூடாது. அத்தகைய வன்மத்தில் அமையும் திருமணங்களில் கடைசி வரை மணமக்களுக்கு நிம்மதி என்பதே இல்லாமலாகி விடும். திருமணம் வெற்றிகரமாக முடிந்த போதிலும் கூட இருவீட்டார் சம்மதமின்றி இணையும் மணமக்கள் இருவரில் எவரோ ஒருவர் நிச்சயம் கடும் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும்.

இத்தகைய சிக்கல்கள் இருப்பதை சுட்டிக் காட்டும் விதமாக காதலர்கள் காத்திருந்து தங்களது காதலைப் பெற்றோர்களுக்குப் புரிய வைத்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற பொருளில் பெற்றோர் சார்பாகப் பேசியதை தவறெனப் பொங்குவது சுயநலமானது மட்டுமல்ல தவறான புரிதலும் கூட!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.