தேவி சாகம்பரீ நீ எங்கிருக்கிறாய்? வந்து கொஞ்சம் இந்த பூவுலகைப் பாரேன்!

சாகம்பரி தேவியை வணங்குவதால் மனதின் சோகங்கள் அனைத்தும் நீங்கி சந்தோஷமான, நிறைவான வாழ்வு கிட்டும். நன்மை நினைப்போர்க்கு தீமை உண்டாக்க நினைக்கும் துஷ்டர்களை இவள் அடக்கி ஒடுக்குவாள்.
தேவி சாகம்பரீ நீ எங்கிருக்கிறாய்? வந்து கொஞ்சம் இந்த பூவுலகைப் பாரேன்!
Published on
Updated on
4 min read

காலையில் தினமணி முன்னாள் ஆசிரியர் கே என் சிவராமனின் பத்திரிகை உலகம் என்றொரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தேன். எங்கள் அலுவலக நூலகத்தில் கிடைத்தது. அதில் ஓரிடத்தில் தமிழக விவசாய மற்றும் விவசாயிகளின் பிரச்னைகளைப் பற்றி பேசுமிடத்து அவர் சாகம்பரீயைப் பற்றி எழுதியிருந்த வரிகளை வாசிக்க நேர்ந்தது. இதுவரையிலும் சாகம்பரீ எனும் பெயரைக் கேள்விப்பட்டிருந்த போதிலும் அதன் அர்த்தம் குறித்துப் பெரிதாகச் சிந்தித்ததில்லை. சாகம்பரி என்ற பெயருக்குப் பின் இத்தனை அழகான அர்த்தம் இருக்கும் என்று தெரிந்து கொள்கையில் மனதுக்குள் ஏதோ ஒரு சந்துஷ்டி. இப்போதும் கூட நவராத்திரி 9 நாட்களில் அம்மனுக்கு அலங்காரம் செய்விக்கும் போது பழங்கள், காய்கறிகளால், தானியங்களால் அலங்காரம் செய்வது உண்டு. அப்படி அலங்காரம் செய்வதன் நோக்கம் அன்னை பராசக்தி சதாஷியாகி (1000 கண்ணுடையாளாகி) அத்தனை கண்களிலும் நீர் சொரிந்து மாமழையாய்ப் பொழிந்து பூமியில் வளம் மிளிர்ந்து விவசாயம் செழிக்க வரம் அருளுவாள் என்றொரு நம்பிக்கை. இந்த நம்பிக்கை வெறும் நம்பிக்கை அல்ல, இதற்கொரு ஐதீகக் கதையும் சொல்லப்படுகிறது. 

சாகம்பரீ குறித்து இணையத்தில் தேடும் போது இந்து ஆன்மீகத் தளமொன்றில் இந்தக் கதை கிடைத்தது. படிக்க சுவாரஸ்யமாக இருந்ததோடு சாகம்பரீ குறித்தும் நிறையத் தெரிந்து கொள்ள முடிந்ததால் தினமணி வாசகர்களுடன் பகிர்கிறேன்.

இதை லலிதா சகஸ்ரநாமத்தின் துணைகொண்டு புரிந்துகொள்ள வேண்டுமெனில் அவளுக்குப் பெயர் சாகம்பரீ.

ஒருவேளை உங்களுக்கு இதில் நம்பிக்கை இல்லையென்றால், நம் மாரியம்மனை சாகம்பரீயாக உருவகம் செய்து கொள்வதிலும் எவ்விதத் தடையும் இல்லை. பூமியில் வறட்சி நீங்கி மழையைப் பொழிவிக்க வல்ல மாரியம்மனும் சாகம்பரீயே தான்.

இனி ஓவர் டு தி ஸ்டோரி

ய இமம் ச்ருணூயான் நித்யம் அத்யாயம் பக்தி தத்பர:
ஸர்வான் காமான் அவாப்னோதி தேவீ லோகே மஹீயதே

- தேவீ பாகவதம் சாகம்பரீ மஹாத்மியம்

எவன் தேவியுடைய (சாகம்பரி அவதார) வரலாற்றை பக்தியுடன் கேட்பானோ அவன் ஆசைப்பட்டது அனைத்தும் அடைந்து வாழ்வின் முடிவில் தேவியின் லோகத்தையும் அடைவான்.

அம்பிகையின் அவதார வடிவங்களில் இந்த அவதாரத்தைக் குறித்து பலரும் கேள்விப்பட்டு இருப்போம். பல திருக்கோயில்களில் அம்பிகைக்கு ‘சாகம்பரி’ என்ற அலங்காரம் செய்வது உண்டு. காய்கனிகளைக் கொண்டும், தானியங்களைக் கொண்டும் அன்னைக்கு அலங்காரம் செய்திருப்பதைக் காணலாம்.

சாகம்பரி என்றும் சதாக்ஷி என்றும் அழைக்கப்படும் அம்பிகையின் இந்த அவதாரத்துக்கு தனிச்சிறப்பு உண்டு. அம்பிகையின் கருணையையும், கர்ம வினையையும் மீறி அவள் புரியும் அனுக்ரஹத்தையும் காட்டும் அவதாரம் இது.

ஜனங்கள் தர்மத்தை மறந்து பாப வழியில் செல்ல ஆரம்பிக்கும்போது இயற்கையும் தன்நிலை மாறி செயல்படத் துவங்கும். அதன்படி ஒரு காலகட்டத்தில் ஜனங்கள் அதர்மத்தை நியாயப்படுத்தத் துவங்கினார்கள்; தங்கள் சுயநலத்துக்காக எதையும் செய்ய தலைப்பட்டார்கள். பாப எண்ணம் கூடியது. இந்த பாப எண்ணம் கூடக் கூட மழையின் அளவு குறைந்து கொண்டே வந்தது. உலகில் பல்லாயிரம் ஆண்டுகள் மழை இல்லாமல் போய் விட்டது.

மழையில்லாத காரணத்தால் பயிரினங்கள் கருகின. எங்கும் வறட்சி தாண்டவமாடியது. தண்ணீருக்கும் உணவுக்கும் கடும் பஞ்சம் உண்டானது. வறட்சியால் மக்கள் சொல்லொணா துயர் அடைந்து தவித்தார்கள். எங்கு நோக்கினும் வறட்சி, பஞ்சம், பசி, பட்டினி. அன்ன ஆகாரம் இன்றி உயிரினங்களெல்லாம் செத்து மடிந்தன.

ஜனங்கள் பாபம் செய்தாலும், பாபத்தினால் இத்தனை துன்பங்களை அடைந்தாலும், அவர்கள் தங்கள் தவறை உணரவில்லை. பாபத்தைக் கண்டு அஞ்சவும் இல்லை. ஆனால், பாபமே அறியாத தவமுனிவர்கள் இந்த ஜனங்கள் படும் துன்பத்தினைக் கண்டு வருந்தினார்கள். உலக மக்களின் துயர் பொறுக்க முடியாமல் இமயமலைச் சாரலில் ஒன்று கூடினார்கள். ஆதிசக்தியை நோக்கி மனம் உருகி ‘கருணைக் கடலே! அனைவருக்கும் அன்னையே! உனக்கு இந்த ஜனங்களின் கஷ்டம் தெரியாதா? எத்தனை தவறுகள் செய்திருந்தாலும் அதை பொறுப்பதல்லவோ தாயின் குணம். மனமிரங்கி அருள் செய்வாய்’ என்று பிரார்த்தனை செய்தார்கள்.

அன்னை பராசக்தி, முனிவர்களின் பிரார்த்தனையைக் கண்டு வியந்தாள். பாபமே வடிவான உலக மக்களுக்காகப் பிரார்த்தனை செய்யும் தன்னலமில்லாத அந்த முனிவர்களைக் கண்டு அம்பிகையின் உள்ளம் உருகியது.

‘அவ்யாஜ கருணா மூர்த்தி‘ என்றல்லவா லலிதா ஸஹஸ்ரநாமம் இவளைப் போற்றுகிறது? காரணம் ஏதுமின்றியே கருணை செய்யும் கிருபா சமுத்திரம். அந்தக் கருணை அம்பிகைக்கு பெருக்கெடுத்தது. உலக மக்களின் துன்பத்துக்காக உருகும் முனிவர்களை இரண்டு கண்களால் பார்த்தால் போதாது என்று கணக்கில்லாத கண்களைக் கொண்டு அவர்களை நோக்கினாள்.
அம்பிகையின் வடிவத்தைப் பார்த்ததுமே முனிவர்கள் ‘சதாக்ஷி’ என்று அவளை அழைத்துப் போற்றினர். (சதம் என்றால் நூறு; அக்ஷி என்றால் கண்கள். நூற்றுக் கணக்கான கண்களை உடையவள். அதாவது, கணக்கில்லாத கண்களை உடையவள் என்று அர்த்தம்.)

அம்பிகையின் மனம் உருகியது. அம்பிகையில் அனைத்து கண்களிலும் கண்ணீர் சிந்தியது. அன்னையின் கண்ணீர் பெருகியதும் உலகெங்கும் ஆறுகள் பெருகி ஓடத் துவங்கின. அடுத்த கணம் அம்பிகை தன் உடலிலிருந்தே உலகுக்கு பசுமையை உருவாக்கினாள். பயிர்களும், காய்களும், கனிகளும், தாவரங்களும், மூலிகைகளும் அன்னையின் சரீரத்திலிருந்து உற்பத்தி ஆகத் துவங்கின.

சாகம் என்றால் காய்கனி. உலகம் முழுமைக்கும் சாக வகைகளை உருவாக்கிக் கொடுத்ததால் அம்பிகைக்கு ‘சாகம்பரி‘ என்ற பெயர் உண்டானது.

‘குழந்தைகளே! கவலை வேண்டாம். இயற்கையாகவே மழை பொழிந்து உலகில் பஞ்சம் தீர்ந்து, பசுமை தோன்றும் வரையில் என் உடலிலிருந்தே உணவினை உருவாக்கித் தருகிறேன்’ என்று வாக்களித்தாள்.

இங்கே அம்பிகையின் வார்த்தைகளை கவனமாக கவனிக்க வேண்டும். ‘இயற்கையாக மழை பொழியும் வரை தான் உணவளித்துக் காப்ப’தாக கூறுகிறாளே, இவள் நினைத்தால் மழை பெய்ய வைக்க முடியாதா? நம் கர்மவினை எனும் கணக்கு மிகவும் புதிரானது.

லலிதோபாக்யானத்தில் ஹயக்ரீவர் கூறுகிறார்: ‘அம்பிகை பிறப்பும் இறப்பும் இல்லாதவள். மெய்யறிவால் அறியத்தக்கவள். ஞானமும், ஞானத்தை அடையும் வழியும் ஆனவள். எங்கும் நிறைந்த அவளே பிரம்மதேவனின் தவத்தின் பயனா வெளிப்பட்டாள். அப்போது அவள் இயற்கை என்று அழைக்கப்பட்டாள்’ என்று.

அம்பிகையின் முதல் அவதாரம் ‘ப்ரக்ருதி’ என்ற இயற்கைதான். தானே இயற்கை வடிவான அன்னை, உலக மக்கள் பாப வசப்படும்போது அவர்களை தண்டிக்கும் பொருட்டு மழை பொய்த்துப் போகும்படி செய்கிறாள். அதே அன்னை கண்ணாமூச்சி ஆட்டம் ஆடி, தானே தன் உடலிலிருந்து உணவளித்துக் காக்கவும் செய்கிறாள்.

மழையில்லாமல் பஞ்சத்தால் உலக மக்கள் அவதியுற வேண்டும் என்பது கர்மவினையினால் வந்த துன்பம். ஒரு அதிகாரியாக விதிகளை நடைமுறைப்படுத்தி விட்டு, அவளே கருணை மிக்க அன்னையாக தன் உடலிலிருந்து உணவினை உற்பத்தி செய்தும் கொடுக்கிறாள்.

முன்பு செய்த புண்ணியத்தின் காரணமாக உருவாவது இன்பம். முன்பு செய்த பாபத்தின் காரணமாக உருவாவது துன்பம். இதுவே கர்மவினைக் கணக்கு.

புண்ணியத்தையும், பாபத்தையும் நாம் செய்து விட்டு பலனை அனுபவிக்கும்போது மற்றவரை குறை சொல்லுவது மனித இயல்பு. இந்தக் கர்மக் கணக்கை உண்டாக்கியவளும் அவள்தானே? அதனால் அம்பிகை இந்த கர்மக் கணக்கில் தலையிடுவதில்லை.

கர்மவினையின்படி நாம் அனுபவிக்க வேண்டிய துன்பமாக இருந்தால் அனுபவிக்கத்தான் வேண்டும். ஆனால், அந்த அனுபவம் நம்மை பாதிக்காதபடி அன்னை காத்து நிற்பாள் என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்?
‘விதிகளை மீற வேண்டாம். மழை பெய்யும் போது பெயட்டும். அதுவரை குழந்தைகளே... நீங்கள் கஷ்டப்பட வேண்டாம், நான் உங்களைக் காக்கிறேன்’ என்கிறாள்.

சாகம்பரியை தேவீ மஹாத்மியம் வர்ணிக்கிறது :
சாகம்பரீ நீலவர்ணா நீலோத்பல விலோசலா
கம்பீர நாபிஸ் த்ரிவலீ விபூஷித தனூதரீ
ஸுகர்க்கச ஸமோத்துங்க வ்ருத்த பீந கனஸ்தனீ
முஷ்டிம் சிலீமுகாபூர்ணம் கமலம் கமலாலயா
புஷ்ப பல்லவ மூலாதி பலாட்யம் சாக ஸஞ்சயம்
காம்யானந்த ரஸைர் யுக்தம் க்ஷுத் த்ருண் ம்ருத்யு ஜ்வராபஹம்
கார்முகஞ் ச ஸ்புரத் காந்தி பிப்ரதீ பரமேச்வரீ
சாகம்பரீ சதாக்ஷி ஸா ஸைவ துர்க்கா ப்ரகீர்த்தி தா

சாகம்பரீ நீல வர்ணமானவள், கருநெய்தல் போன்ற கண்ணழகு கொண்டவள், சாமுத்ரிகா லக்ஷணப்படி ஆழ்ந்த நாபியும், மூன்று மடிப்புகளும் கொண்ட அழகிய குறுகிய வயிற்றினை உடையவள். கடினமான, பருத்து எழுந்த வட்ட ஸ்தனங்களை உடையவள். தாமரை மலரில் வீற்றிருப்பவள். அழகிய நான்கு கைகளை உடையவள். ஒரு கையில் தாமரை மலர், மற்றொன்றில் கைப்பிடி நிறைய அம்புகள், பிறிதொரு கையில் ஒளி வீசும் வில், வேறொரு கையில் பசி, தாகம், சாக்காடுகளைப் போக்கும் புஷ்பம், தளிர், வேர், பழம் ஆகியவற்றை ஒன்றாகவும் பிடித்து சாகம்பரி எனும் சதாக்ஷி காட்சி தருகிறாள்.

சாகம்பரி தேவியை வணங்குவதால் மனதின் சோகங்கள் அனைத்தும் நீங்கி சந்தோஷமான, நிறைவான வாழ்வு கிட்டும். நன்மை நினைப்போர்க்கு தீமை உண்டாக்க நினைக்கும் துஷ்டர்களை இவள் அடக்கி ஒடுக்குவாள். பாவத்தினால் உண்டான கஷ்டங்களையும், எதிர்பாராமல் உண்டாகும் விபத்துக்களையும் இவள் அழித்து விடுவாள்.

இவளை பூஜித்து வணங்குபவனுக்கு எக்காலத்திலும் உணவுக்குக் குறை வாராது, இன்ப வாழ்வினை அருள்வாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com