சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளின் பசியைத் தூண்டுவது எப்படி?

எம்பொண்ணு நாள் தவறாம காலைச் சாப்பாட்டை ஸ்கிப் பண்றா. அவளையே சாப்பிடச் சொன்னா அவ்வளவு தான். சுத்தம். வச்ச சாப்பாடு அப்படியே கிடக்கும். எடுத்து அப்புறம் மாட்டுக்குத்தான் போடனும். அதான் என் கையாலயே 
How to stimulate kids appetite
How to stimulate kids appetite
Published on
Updated on
2 min read

‘என்னாச்சு காலை நேரத்துல உங்க வீடே ஒரு போர்க்களமாகிடுது போல இருக்கே? வீட்டுக்குள்ள இருந்து ஒரே சத்தம். அப்புறம் பார்த்தா கையில சாப்பாட்டுக் கிண்ணத்தைத் தூக்கிக்கிட்டு  சாப்பாடு ஊட்டிக்கிட்டே உங்க பொண்ணு பின்னால நீங்களும் ஸ்கூல் வேன் வரைக்கும் ஓடியாறீங்களே அஷ்மிதா. நாள் தவறாம நானும் பார்க்கறேன். உங்க வீட்ல இதான் நடக்குது. ஏன் இப்படி?’

- என்று பக்கத்து வீட்டுப் பெண்மணி நலம் விசாரிக்கவே... அஷ்மிதாவுக்கு முகம் வாடிப்போகிறது.

அதையேன் கேட்கறீங்க? எம்பொண்ணு நாள் தவறாம காலைச் சாப்பாட்டை ஸ்கிப் பண்றா. அவளையே சாப்பிடச் சொன்னா அவ்வளவு தான். சுத்தம். வச்ச சாப்பாடு அப்படியே கிடக்கும். எடுத்து அப்புறம் மாட்டுக்குத்தான் போடனும். அதான் என் கையாலயே கொஞ்சம் சாப்பிட வச்சு அனுப்பிட்டா தேவலாம்னு தான் இந்த முயற்சி.

எப்படியாவது குழந்தைகளை சாப்பிட வச்சே ஆகனுமே! அதான் இப்படி ஓடியாற வேண்டியதா இருக்கு. அலுத்துக் கொண்டே அஷ்மிதா உள்ளே போனாள்.

அஷ்மிதாவின் கவலையை அண்டை வீட்டுக்காரம்மாள் தீர்க்கிறாரோ இல்லையோ நம்மால் நிச்சயம் தீர்க்க முடியும்.

இதோ கீழே உள்ளவை அதற்கான வழிகாட்டல்கள்;

1. காலை உணவை ஒருபோதும் தவிர்க்க அனுமதிக்காதீர்கள்

சில குழந்தைகள் காலையில் பள்ளிக்கு கிளம்பும் அவசரத்தில் சரியாகச் சாப்பிடாமல் காலை உணவை தவிர்த்து விட்டோ அல்லது அரைகுறையாகச் சாப்பிட்டு விட்டோ ஓடுவார்கள். இப்படிச் செய்வதால் நாள் முழுவதும் சோர்வாகவே உணர்வார்கள். அதனால் பெற்றோர்களான நாம் செய்ய வேண்டிய முதல் காரியம், எப்பாடுபட்டாவது நமது குழந்தைகளை காலை உணவை சரியாக உண்ண வைப்பது.

2. குழந்தைகளின் உடலில் போதுமான அளவு இரும்புச் சத்து உள்ளதா என்று சோதியுங்கள் 

குழந்தைகளின் உடலில் இரும்புச் சத்து குறைந்தால் அது குழந்தையின் பசியைக் குறைக்கும் கூறுகிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.  உலகில் எட்டு குழந்தைகளில் ஒருவராவது 2 வயதுக்கு முன்பே இரத்த சோகைக்கு ஆளாகின்றன என்று உலகளாவிய மருத்துவ ஆய்வுக் கட்டுரைகள் சான்று பகர்கின்றன.  9 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு சுமார் 7 முதல் 10 மில்லிகிராம் இரும்புச் சத்து தேவைப்படுகிறது, மேலும் 9 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தினமும் சுமார் 8 மில்லிகிராம் இரும்புச்சத்து தேவைப்படுகிறது. இரும்புச் சத்துக்காக கீரை, முட்டை, பயறு போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை குழந்தைகளின் உணவில் சேர்க்கலாம். இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை வைட்டமின் சி உடன் இணைந்து எடுத்துக் கொள்ளும் போது அவை உடலின் விட்டமின் மற்றும் ஆற்றல் உறிஞ்சுதலையும் பயன்பாட்டையும் அதிகரிக்கின்றன என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

3. குழந்தைகளை, அவர்கள் சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு மறக்காமல் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தச் செய்யுங்கள்

உங்கள் குழந்தையின் நாளை ஒரு கிளாஸ் தண்ணீரில் தொடங்குங்கள். உண்மையில், அவர்கள் பால் குடிப்பதற்கு முன்பே தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும், காலை உணவை எடுத்துக் கொள்வதற்கு முன்  குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன்பே அவர்களுக்கு தண்ணீர் அருந்தும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இந்த அடிப்படைகள் உண்மையில் உதவுகின்றன. தண்ணீர் வயிற்றுக்குள் சுரக்கும் செரிமானச் சாறு மற்றும் என்சைம்களை செயல்லூக்கப்படுத்தி பசியை அதிகரிப்பதோடு செரிமானத்தையும் அதிகரிக்கும்.

4. குழந்தைகளின் உணவில்  துத்தநாகச் சத்துக்கள் நிறைந்த உணவுகளை சேர்க்கவும்

நீங்கள் இதைப் பற்றி யோசித்திருக்க மாட்டீர்கள், ஆனால் துத்தநாகம் மிக முக்கியமானதொரு கனிமமாகும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, ஆக்ஸிஜனேற்றத்தின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் வளர்ச்சி போன்ற பல உடலியல் செயல்பாடுகளுக்கு இது தேவைப்படுகிறது. துத்தநாகத்தின் லேசான குறைபாடு பசியின்மை, எடை இழப்பு, வயிற்றுப்போக்கு மற்றும் தொற்றுநோய்களுக்கான பாதிப்பை அதிகரிக்கும். பூசணி விதைகள், கொட்டைகள், கீரை, பீன்ஸ் மற்றும் காளான்கள் போன்ற துத்தநாகம் நிறைந்த உணவுகளை ஆரோக்கியமான இடைவெளியில் குழந்தைகளின் உணவில் சேர்க்கத் தயங்காதீர்கள்.

5.ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு முறை அவர்களுக்கு உணவு கொடுங்கள்

குழந்தைகளுக்கு நாள் முழுவதும் படிப்பதற்கும், விளையாடுவதற்கும், வேடிக்கை பார்ப்பதற்கும் அவர்களுக்குப் பூரண சக்தி தேவை. உங்கள் குழந்தைகள் குறைவாக உண்பவர்களாக இருக்கலாம். அவர்களுக்கு ஒருபோதும் பசியோ அல்லது சாப்பிட விருப்பமோ இல்லாதிருந்தால், ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு முறை  சிறிது சிறிதாக உணவைப் பிரித்து குழந்தைகளுக்குச் சாப்பிடத் தந்து பழகலாம். பெரும்பாலான குழந்தைகள் மூன்றுவேளை வயிறு நிறைய உண்பதை வெறுக்கின்றன. காரணம் உடல் எடை அதிகரித்து விடுமோ என்ற பயமாகக் கூட இருக்கலாம். எனவே, அவர்களின் பசியைத் தூண்டுவதற்கு ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு முறை சிறிது சிறிதாக உணவு அளிக்கப் பழகுங்கள். அது மட்டுமல்ல குழந்தைகளுக்கு உணவுக்கு இடையில் லேசான தின்பண்டங்கள் அல்லது கொட்டைகள் கொடுங்கள். வேர்க்கடலை பசியை அதிகரிக்கும் மற்றும் புரதத்தை உருவாக்கும் பண்புகளுக்கு பெயர் பெற்றது. இந்த சிறுதீனிப் பண்டங்கள் குழந்தையின் பசியை மந்திக்கச் செய்யும் அளவுக்கு இருந்து விடாது.

மேலே சொல்லப்பட்டவற்றை சரியாகப் பின்பற்றுங்கள். அப்புறம் பாருங்கள் உங்கள் குழந்தைகள் நீங்கள் வற்புறுத்தாமலே தாங்களே வேலா வேலைக்கு பசி, பசியின்று உங்களைச் சுற்றி சுற்றி வரத் தொடங்கி விடுவார்கள்.

சந்தோஷம் தானே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com