அதிகாரம் செலுத்தும் பழக்கத்தை குழந்தைகளிடம் வளர்க்கிறதா 'அலெக்ஸா'?

அலெக்ஸாவைப் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு அதிகாரம் செலுத்தும் பழக்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கின்றது. 
அதிகாரம் செலுத்தும் பழக்கத்தை குழந்தைகளிடம் வளர்க்கிறதா 'அலெக்ஸா'?

அலெக்ஸாவைப் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு அதிகாரம் செலுத்தும் பழக்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கின்றது. 

அலெக்ஸா... செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவான நவீன வகை சாதனம். மனிதனுக்கு மின்னணு குரல் ஆலோசகராக செயல்படுகிறது. ஒரு குட்டி ரோபா என்றுகூட சொல்லலாம். 

அலெக்ஸா மூலமாக இசையைக் கேட்கலாம். செய்திகள், வானிலை நிலவரத்தை அறிந்துகொள்ளலாம். அலாரம் வைத்துக்கொள்ளலாம். உங்களுடைய வீட்டில் உள்ள ஸ்மார்ட் சாதனங்களை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம். அதாவது, ஸ்மார்ட் சாதனங்களை இதனுடன் இணைத்துவிட்டால் அந்த சாதனங்களை உங்களின் கட்டளைக்கு இணங்க செயல்பட வைக்கும். முக்கிய நிகழ்வுகளை உங்களுக்கு நியாபகப்படுத்தும்.

அலெக்ஸாவுடன் உரையாடலாம், சந்தேகங்களைக் கேட்கலாம், கேள்விகளுக்கு தீர்வு காணலாம்...ஒரு நண்பர் 24 மணி நேரமும் கூடவே இருப்பது போலவே. ஆனால், அது மனிதனல்ல. மெஷின்!

முதல்முதலாக கடந்த 2013ல் அலெக்ஸா உலகுக்கு அறிமுகமானது. அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸ் முதன்முதலாக இதன் அடிப்படை கருவியை (அமேசான் எக்கோ) கடந்த 2011ல் உருவாக்கியுள்ளார். 

தற்போது அலெக்ஸா, பெரியவர்களைவிட குழந்தைகளிடம் அதிகம் பயன்பாட்டில் உள்ளது. நகரங்களில் உள்ள குழந்தைகள் வீட்டில் தனிமையில் இருக்கும்போது பெரும்பாலான பொழுதுபோக்காகவும் உற்ற துணையாகவும் அலெக்ஸாவே உடன் இருக்கிறது. 

பிடித்தமான கதைகளைக் கூற, கணக்குகளுக்குத் தீர்வு காண, நகைச்சுவைகளை சொல்வதற்கு, பொது அறிவு கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்கு, பிடித்த பாட்டுகளை கேட்பதற்கும், விளையாடுவதற்கு, வீட்டுப்பாடங்களை செய்வதற்கு என குழந்தைகளுக்குப் பயன்படுகிறது. நகரங்களில் பெரும்பாலான பெற்றோர்கள் வேலைக்குச் சென்றுவிடக் கூடிய சூழலில் குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு இந்த அலெக்ஸாதான். 

இப்போது கரோனா தொற்றுநோயால் குழந்தைகள் வீட்டுக்குள் முடங்கியிருக்கும் சூழலில், குழந்தைகளிடையே அலெக்ஸாவின் பயன்பாடு அதிகரித்துள்ளது . 

இந்நிலையில், அலெக்ஸாவை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் குழந்தைகள் வைத்திருப்பதால், தான் எது சொன்னாலும் கட்டளைக்கு இணங்க அலெக்ஸா செயல்படுவதால் குழந்தைகள் மேலதிகாரிகளின் தன்மைக்கு மாறக்கூடும் என்று ஓர் புதிய ஆய்வு எச்சரிக்கரிறது. அதாவது, குழந்தைகளிடையே கட்டளையிடும் தொனி ஏற்பட வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கின்றது. 

அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகம் அமேசானின் அலெக்ஸா அல்லது ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான 'சிரி' யுடன் பழகும் குழந்தைகள், சக மனிதர்களுடன் தொடர்புகொள்ளும் விதம் குறித்து ஆய்வு மேற்கொண்டது. 

5 முதல் 10 வயதுக்குள்பட்ட 22 குழந்தைகளுக்கு அலெக்ஸா மூலமாக ஒரு வார்த்தை சொல்லித் தரப்பட்டது. தொடர்ந்து, அலெக்ஸாவுடனான உரையாடல்களில் அந்த வார்த்தை இடம்பெறும் அளவில் பார்த்துக்கொள்ளப்பட்டது. 

இதில், பெரும்பான்மையான குழந்தைகள் அதாவது 64 சதவிகிதம் பேர், அலெக்ஸாவுடனான உரையாடலில் அந்த குறிப்பிட்ட வார்த்தையைப் பயன்படுத்தத் தொடங்கினர். 

அதாவது, ஒரு வார்த்தையை குழந்தைகளிடம் அதிகம் பிரயோகப்படுத்தும்போது அது குழந்தைகளின் மனதில் பதிவதுடன் அவர்களும் அந்த வார்த்தையைப் பயன்படுத்தத் தொடங்கிவிடுகின்றனர். இது அலெக்ஸாவிடமும் பொருந்தியது. 

இதன் தொடர்ச்சியாக ஆய்வாளர் ஒருவர் குழந்தைகளிடம் பேசும்போது, 22 பேரில் 18 குழந்தைகள் அந்த வார்த்தையைப் பயன்படுத்தினார்கள்.

மனிதனுக்கும் ஒரு ரோபோவுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை குழந்தைகள் அறிந்துவைத்திருப்பதாகவே கருதுவதாக ஆய்வாளர் அலெக்சிஸ் ஹினிகர் கூறுகிறார். 

'தற்போதுள்ள சூழ்நிலையில் கணிதம் போன்ற ஒரு குறிப்பிட்ட திறனை கற்பிக்க குழந்தைகளுக்கு தனிப்பட்ட ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். குழந்தைகளின் பொழுதுபோக்கைத் தாண்டி இது அவர்களுக்கு அவசியமானது. 

மனிதர்களிடம் நடந்துகொள்ளும் முறைக்கும் அலெக்ஸாவிடம் நடந்துகொள்ளும் முறைக்கும் குழந்தைகளுக்கு வித்தியாசம் தெரிந்தாலும் அலெக்ஸாவின் பயன்பாடு அதிகரிக்கும்பட்சத்தில், குழந்தைகளிடம் கட்டளையிடும் மேலதிகத் தன்மையை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம். குறிப்பாக அலெக்ஸாவுடன் பேசும் மொழி, தொனியை மனிதர்களிடம் வெளிப்படுத்தலாம் என்று கூறுகிறார். 

ஆனால், புதிதாக முயற்சி செய்ய விரும்பும் பல குழந்தைகளுக்கும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளவும் இதுபோன்ற அலெக்ஸாக்கள் பயன்படும் என்றும் ஆய்வு கூறுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com