Enable Javscript for better performance
onion oil - to reduce hair fall and inc|வெங்காயத் தைலம்... தலைமுடி உதிரும் பிரச்னை தீர எளிய உபாயம்!- Dinamani

சுடச்சுட

  

  வெங்காயத் தைலம்... தலைமுடி உதிரும் பிரச்னை தீர எளிய உபாயம்!

  By கஸ்தூரி ராஜேந்திரன், தேனி.  |   Published on : 18th September 2018 12:12 PM  |   அ+அ அ-   |    |  

  onion-hair-grow

   

  வீட்டு வேலைக்கு வரும் ப்ரியாவுக்கு... எங்கள் மேல் ஆகச்சிறந்த மனத்தாங்கல் எப்போதும் உண்டு. எங்கள் மேல் மட்டுமல்ல அவள் வேலைக்குச் செல்லும் எல்லா வீடுகளிலும் இந்தப் பிரச்னை இருப்பதால் எல்லோர் மேலும் அவளுக்கு இந்த மனத்தாங்கல் முற்றி வந்த வேலையில், ஒருநாள் எங்கள் வீட்டில், வீட்டு வேலைகளின் நடுவே மனம் பொறுக்க முடியாமல் சற்றே புலம்பி விட்டாள்.

  ‘ ம்மா... தோ பார்... அடுத்த மாசத்துல இருந்து நீ 500 ரூபா சேர்த்துக் குடு... இல்லாங்காட்டி மூலைக்கு மூலை சிக்கிக் கிடக்கிற முடிக்குவியலை சுத்தம் பண்றதாங்காட்டியும் எனிக்கு தாவு தீருது கண்டியோ! 

  - என்றாள்.

  என்னடா இது புது பூதம் என்கிற கதியில், நான் திரும்பி நின்று அவளை முறைக்க,  

  ‘சொம்மா கோச்சுக்காத கண்ணு, தோ நீயே பாரேன் இப்பத்தான் ஒரு பந்து எடுத்து தூரப் போட்டேன். தோ பார் பாப்பாக்கு தலை சீவி, நீயும் தலையைக் கட்டிக்கினியா... மறுக்கா ஒரு பந்து ஹால் மூலைல சுத்தி சுத்தி என்னை டபாய்க்குது. முட்டு வலி தாங்கலை இதும் பின்னால ஓடி!’

  அவள் சுட்டிக் காட்டிய இடத்தில் கற்றையாக முடி ஃபேன் காற்றுக்கு அங்கும் இங்கும் ஓடி விளக்குமாற்றுக்குச் சிக்காமல் அவளை அலைகழித்துக் கொண்டிருந்தது. 

  ‘சரி தான் போ.. நானே எடுத்துப் போட்டுக்கறேன். நீ அடுத்த வேலையைப் பார்’

  - என்று அவளை அத்துடன் கத்தரித்து அனுப்பிய பின் எனக்கு ஐயோடா என்றிருந்தது.

  ஏனெனில் எங்கள் வீட்டில் பெண்களின் எண்ணிக்கை அதிகம். இப்போது சுத்தம் செய்தாலும் மாலையில் வந்து பார்த்தால் அறை மூலைகளில் நிச்சயம் கூந்தல் இழைகள் கேட்பாரற்று விச்ராந்தியாக காற்றில் ஆடிக் கொண்டும் கூட்டணி சேர்த்துக் கொண்டு இந்த மூலைக்கும் அந்த மூலைக்குமாகப் பேரணி நடத்திக் கொண்டும் தான் இருக்கும். இந்தப் பிரச்னையை எப்படித் தீர்ப்பது?

  எப்படியாவது தீர்த்துத் தான் ஆக வேண்டும். இன்று அதற்கு ஒரு முடிவு கட்டலாம் என்று யோசித்த போது கிடைத்தது தான் இந்த ஐடியா. குறைந்த பட்சம் எங்கள் பிரச்னை தீர்வதற்காக இல்லாவிட்டாலும் ப்ரியாவின் பிர்ச்னையாவது தீர்ந்தே ஆக வேண்டும். பாவம் அவள் இன்னும் நான்கைந்து வீடுகளில் வேலை செய்பவள். அவளை இபடியோர் அல்ப விஷயத்துக்காக தொடர்ந்து துன்புறுத்தக் கூடாது தான் இல்லையா?!

  வெங்காயச் சாற்றுத் தைலம்...

  தேவையான பொருட்கள்...

  • கறிவேப்பிலை - 1 கப் (
  • மருதாணி இலைகள்- 1/2 கப் 
  • சின்ன வெங்காயம் - 4 முதல் 5 (வெங்காயத்தை தோல் நீக்கி நறுக்கி கல் அல்லது உலோகத்தால் ஆன ஒரு சிறு கை உலக்கையில் இட்டு நசுக்கிக் கொள்ளவும்.)
  • நெல்லிக்காய் - 1/2 கப் (நன்கு காய வைத்து எடுத்தது) 
  • வெந்தயம் - 1/2 கப்
  • செம்பருத்திப் பூ- 4 அல்லது 5 பூக்கள்
  • நல்லெண்ணெய் - 200 மில்லி லிட்டர் 
  • தேங்காய் எண்ணெய் - 200 மில்லி லிட்டர் 

  மேற்கண்ட மூலப் பொருட்களின் பலன்கள்...

  கறிவேப்பிலையில் பீட்டா கரோட்டினும் விட்டமின் C யும் நிறைந்தது) இது முடி வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் கூந்தல் இழைகள் அடர்த்தியாகவும், உடையாது நீளமாக  இருக்கவும் உதவுகின்றன. மருதாணி இயற்கையான ஹேர் கண்டீஷனராகப் பயன்படுவதோடு முடிக்கு நிறத்தையும் அளிக்கிறது. அதோடு ஃப்ரெஷ் ஆக கூந்தல் வளரவும் உதவுகிறது. வெங்காயத்தில் அதிக அளவில் இருக்கும் சல்ஃபர் முடி வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஏனெனில் கூந்தலின் அடிப்படை அலகுகளில் சல்ஃபரும் ஒன்று எனவே இது வழுக்கைப் பிரச்னையைப் போக்கவும் கூந்தல் திக்காக வளரவும் உதவுகிறது. நெல்லிக்காய் நரை முடி பிரச்னையைத் தீர்ப்பதோடு ஆரோக்யமான முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது. முடி அடர்த்தியாக வளர விரும்புபவர்கள் தேவையெனில்  செம்பருத்திப்பூக்களைச் சேர்த்துக் கொள்ளலாம். நல்லெண்ணெய் கூந்தல் இழைகளின் வேர்ப்பகுதிகளில் ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது. அதோடு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உடல் சூட்டையும் தணிக்கிறது.
  தேங்காய் எண்ணெய் கண்டீஷனராகப் பயன்படுவதோடு கூந்தலின் வடிவமைப்பையும் நேர்த்தியாக்குகிறது.

  செய்முறை:

  ஒரு கனமான அடிப்பாகமுள்ள வாணலியை எடுத்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பிலேற்றி தீயை மீடியமாக வைக்கவும். முதலில் நல்லெண்ணெயையும் பின்னர் தேங்காய் எண்ணெயையும் வாணலியில் விட்டு எண்ணெய் மிதமான சூட்டில் இருக்கும் போது அதில் முதலில் வெந்தயத்தை இடவும். வெந்தயம் சிவக்க பொறிந்ததும் அதில் அடுத்ததாக நசுக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும். வெங்காயம் கருகக் கூடாதா அளவில் அதையும் மிதமாக வறுக்கவும். வெங்காயம் சிவக்க வறுபட்டதும் அடுத்ததாக காய்ந்த நெல்லிக்காய்த் துண்டுக்களைச் சேர்க்கவும். நெல்லிக்காய் பொறிந்ததும் அடுத்து கறிவேப்பிலை மற்றும் மருதாணி இலைகளைச் சேர்க்கவும். இலைகள் மொறு மொறுவென வறுபட்டதும் கடைசியாக செம்பருத்திப் பூக்களை இடவும். 5 அல்லது 6 நிமிடங்களுக்கு இதுவரை இட்ட பொருட்கள் அனைத்தும் சூடான எண்ணெய்க்குள் நன்கு மூழ்கி இருக்கட்டும். அப்போது தான் அவற்றிலிருக்கும் எசன்ஸ் மொத்தமும் எண்ணெய்க்குள் இறங்கும். இப்போது அடுப்பை சிம்மில் வைத்து மேலும் 5 நிமிடங்கள் கழித்து எண்ணெய் மஞ்சள் நிறத்திலிருந்து இளம்பச்சை நிறத்திற்கு மாறியதும் அடுப்பை அணைக்கவும்.

  எண்ணெயில் சூடு முழுவதுமாகத் தணிந்ததும். ஈரப்பதமற்ற ஒரு சுத்தமான கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்துக் கொண்டு குறைந்த பட்சம் மூன்று மாதங்களுக்கு இந்த வெங்காயச் சாறு கலந்த கூந்தல் தைலத்தைப் பயன்படுத்தலாம்.

  வெங்காயச் சாற்றுத் தைலம் பயன்படுத்தும் முறை...

  கூந்தல் உதிராமல் இருக்க மேற்கண்ட வெங்காயச் சாற்றுத் தைலத்தை தலைமுடியின் வேர் முதல் நுனி வரை மென்மையாகத் தடவி மசாஜ் செய்ய வேண்டும். குறைந்த பட்சம் வாரம் இருமுறை முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் இப்படி மசாஜ் செய்து மறுநாள் கூந்தலை ஷாம்பூவில் அலசினால் நல்ல பலன் கிடைக்கும். வெங்காயச் சாறு கலந்ததால் சற்றே அந்த வாசம் எண்ணெயில் இருந்தாலும் கூட அது ஷாம்பூ குளியலில் நீங்கி விடும். அப்போதும் நீங்கவில்லை என்று நினைத்தால் 14 நாட்களுக்கு ஒருமுறை ஆப்பிள் சைடர் வினிகரை தலைக்கு அப்ளை செய்து தலைமுடியை அலசினால் முற்றிலும் வாசம் நீங்கும். தலை முடி உதிர்தல் பிரச்னை இருப்பவர்கள் இந்த வெங்காயச் சாறு கலந்து தைலம் பயன்படுத்திப் பார்த்து விட்டு உங்கள் அனுபவங்களை எங்களுக்கு எழுதுங்கள்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai