சுதந்திரத்துக்கு முன் இந்தியர்கள் அமைத்த இடைக்கால அரசு
சுதந்திரப் போராட்டக் காலத்தில், இந்தியர்களின் உரிமையை மீட்டெடுக்கவும், நாட்டை இந்தியர்களே ஆள வேண்டும் என்பதிலும்,

சிம்லா கூட்டத்தில் ராஜாஜி உள்ளிட்டோர்.

சிம்லா கூட்டத்தில் ராஜாஜி உள்ளிட்டோர்.
சுதந்திரப் போராட்டக் காலத்தில், இந்தியர்களின் உரிமையை மீட்டெடுக்கவும், நாட்டை இந்தியர்களே ஆள வேண்டும் என்பதிலும், அப்போதைய தலைவர்களும், கட்சிகளும் உறுதியாக இருந்தனர். இதன் நடுவே, 1939-ஆம் ஆண்டு தொடங்கிய இரண்டாம் உலகப் போரின் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் பேரிழப்பைச் சந்தித்தன. இது இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் எதிரொலித்தது. இந்தியர்களின் நீண்டகால கோரிக்கையான ஆட்சியில் பங்குபெறுவது என்ற கனவு, இடைக்கால அரசு மூலம் நிறைவேறியது. 1946-ஆம் ஆண்டு செப்டம்பர் 2-ஆம் தேதி அமைந்த இடைக்கால அரசு, இந்தியா சுதந்திரம் பெற்ற 1947-ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 வரை ஆட்சியில் இருந்தது.
உலக மக்களின் ரத்தங்களையும், சதைகளையும் கண்ட இரண்டாம் உலகப் போர், 1945-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அதே ஆண்டு ஜூலை மாதம், பிரிட்டனில் தேர்தல் நடைபெற இருந்தது. இதனால், பிரிட்டன் மக்களிடம் நம்பிக்கையைப் பெறும் நோக்கில், இந்தியர்களின் நீண்டகால கோரிக்கையான அரசமைப்புச் சட்டத்தை அமைப்பதற்கான வழிமுறைகளை இந்தியாவின் அப்போதைய வைஸ்ராய் வேவல் மேற்கொண்டார். அவரது தலைமையில் 1945-ஆம் ஆண்டு ஜூன் மாதம், சிம்லாவில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் வைஸ்ராய் வேவல் முன்வைத்ததாவது:
வைஸ்ராயின் நிர்வாகக் குழுவில், வைஸ்ராய் மற்றும் ராணுவத் தளபதி தவிர மற்ற அனைவரும் இந்தியர்களாக இருப்பர். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், இடைக்கால அரசாக செயல்படுவர்.
ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் வழங்கப்படும்.

இரண்டாம் உலகப் போர் முழுவதுமாக முடிவுக்கு வந்தவுடன், இந்தியாவுக்கான அரசமைப்புச் சட்டத்தை அமைப்பது குறித்து விவாதிக்கப்படும்.
வேவலின் திட்டத்துக்கு இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் இந்திய முஸ்லிம் லீக் ஆகியவை எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, ஜூலை மாதம் பிரிட்டனில் நடைபெற்ற தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியைத் தோற்கடித்து, தொழிலாளர் கட்சி அமோக வெற்றி பெற்றது. அக்கட்சியின் சார்பில் கிளமண்ட் அட்லீ பிரிட்டன் பிரதமராகப் பொறுப்பேற்றார்.
இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு ஆதரவான கண்ணோட்டத்தைக் கொண்ட கிளெமண்ட் அட்லீ, பிரிட்டன் பிரதமராகப் பொறுப்பேற்றதும் இந்தியத் தலைவர்களிடையே புது நம்பிக்கை பிறந்தது. அதே வேளையில், இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்கக் கோரி அமெரிக்கா, அப்போதைய ஒருங்கிணைந்த ரஷியா உள்ளிட்ட நாடுகள் பிரிட்டனுக்கு அழுத்தம் கொடுத்தன. மேலும், போரின் காரணமாக பிரிட்டனின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. இவற்றோடு, சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலான இந்திய தேசிய ராணுவத்துக்கும் ஆதரவு அலை தொடர்ந்து பெருகிக் கொண்டு வந்தது.
இவற்றின் காரணமாக, இந்தியாவுக்கென தனி அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க பெதிக் லாரன்ஸ், ஸ்டஃபோர்டு கிரிப்ஸ், ஏ.வி. அலெக்ஸாண்டர் ஆகியோர் அடங்கிய கேபினட் குழுவை அமைத்துள்ளதாக பிரிட்டன் பிரதமர் அட்லீ 1946-ஆம் ஆண்டு மார்ச் 15-ஆம் தேதி அறிவித்தார். அக்குழு மார்ச் 24-ஆம் தேதி இந்தியா வந்தடைந்தது. 1946-ஆம் ஆண்டு மே மாதம், கேபினட் குழு தனது திட்ட அறிக்கையை வெளியிட்டது.
1946-ஆம் ஆண்டு ஜூலை மாதம், இடைக்கால அரசின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கவும், அரசமைப்புக் குழுவின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கவும் தேர்தல் நடத்தப்பட்டது. இத்தேர்தலில், ஒவ்வொரு மாகாணத்திலும் இருந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் மட்டுமே வாக்களித்தனர். மக்கள் நேரடியாக வாக்களிக்கவில்லை.
கேபினட் குழுவின் முக்கிய நோக்கங்கள்
பிரிட்டிஷ் இந்தியாவின் ஆட்சிப் பகுதிகள் மற்றும் சுதேச அரசுகளை ஒருங்கிணைத்து ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்குதல்.
வெளியுறவு விவகாரங்கள், நாட்டின் பாதுகாப்பு, தொடர்புத் துறை ஆகியவற்றை மட்டும் மத்திய அரசிடம் ஒப்படைத்தல். மற்ற விவகாரங்களை அந்தந்த மாகாண அரசுகள் மேற்கொள்ள வகை செய்தல்.
இந்தியாவுக்கென தனி அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குதல்.
அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் வரை, நாட்டின் நிர்வாகத்தை கவனித்துக்கொள்ள இடைக்கால அரசை நியமித்தல்.
காங்கிரஸும், இந்திய முஸ்லிம் லீக்கும் கேபினட் குழுவின் நோக்கங்களை வரவேற்றன. அதேவேளையில், இந்தியாவைப் பிரித்து, தனி பாகிஸ்தான் நாட்டை உருவாக்க கேபினட் குழு மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து, 1946-ஆம் ஆண்டு ஜூலை மாதம், இடைக்கால அரசின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கவும், அரசமைப்புக் குழுவின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கவும் தேர்தல் நடத்தப்பட்டது. இத்தேர்தலில், ஒவ்வொரு மாகாணத்திலும் இருந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் மட்டுமே வாக்களித்தனர். மக்கள் நேரடியாக வாக்களிக்கவில்லை.
இத்தேர்தலில் 214 பொது இடங்களில், 208 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. வகுப்புவாரி பிரதிநிதித்துவம் மூலம் முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட்ட 78 இடங்களில், இந்திய முஸ்லிம் லீக் 73 இடங்களையும் கைப்பற்றின. நாட்டில் அப்போது இருந்த சுதேச அரசுகளுக்கு 93 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அந்தந்த அரசுகள் அவர்களுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து மக்களவைக்கு அனுப்ப வழிவகை செய்யப்பட்டிருந்தது.
முதலில் கேபினட் குழுவின் திட்டத்துக்கு ஒப்புதல் தெரிவித்திருந்த முஸ்லிம் லீக், பின்னர் தனது ஒப்புதலை வாபஸ் பெற்றது. தனி பாகிஸ்தானைப் பெறுவதற்கு, 1946-ஆம் ஆண்டு ஆகஸ்டு 16-ஆம் தேதியை நேரடி நடவடிக்கை நாள்ஆகக் கடைப்பிடிக்கப்படும் என இந்திய முஸ்லிம் லீக் அறிவித்தது. அந்நாளன்று, ஹிந்து-முஸ்லிம் இடையே பெரும் கலவரங்கள் ஏற்பட்டன. இந்தக் கலவரங்களால், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். முக்கியமாக கல்கத்தா, பாம்பே, நவகாளி, பிகார் ஆகிய பகுதிகளில் வன்முறை அதிக அளவில் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, 1946-ஆம் ஆண்டு செப்டம்பர் 2-ஆம் தேதி ஜவாஹர்லால் நேரு தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றுக் கொண்டது. இடைக்கால அரசின் உறுப்பினர்கள் அனைவரும், வைஸ்ராயின் நிர்வாகக் குழு உறுப்பினராகவே அங்கீகரிக்கப்பட்டனர். அந்தக் குழுவின் தலைவராக வைஸ்ராயே இருந்தார். ஜவாஹர்லால் நேரு, அந்தக் குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். நாட்டின் பிரதமராகவும் நேருவை பிரிட்டிஷ் அரசு அங்கீகரித்தது. முதலில் இடைக்கால அரசில் இடம்பெற மறுத்த இந்திய முஸ்லிம் லீக்குடன், வைஸ்ராய் வேவல் பேச்சுவார்த்தை நடத்தினார். பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்த முஸ்லிம் லீக், 1946-ஆம் ஆண்டு அக்டோபர் 26-ஆம் தேதி இடைக்கால அரசில் பங்குபெற்றது.

மவுண்ட்பேட்டன் திட்டம்
1948-ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ் அதிகாரிகள் அனைரும் வெளியேறி விடுவர் என்று 1947-ஆம் ஆண்டு பிப்ரவரி 20-ஆம் தேதி பிரிட்டன் மக்களவையில் பிரதமர் அட்லீ அறிவித்தார். இந்தியாவின் சுதந்திரம் குறித்து தீர்க்கமான முடிவெடுக்கும் நோக்கில், வேவலுக்குப் பதிலாக மவுண்ட்பேட்டனை இந்தியாவின் புதிய வைஸ்ராயாக அட்லீ நியமதித்தார். மவுண்ட்பேட்டனுக்கு அதிக அதிகாரங்களையும் அட்லீ அளித்திருந்தார்.
இதையடுத்து, இந்தியா வந்தடைந்த மவுண்ட்பேட்டன், நாட்டின் நிலைமை எல்லை மீறி சென்றுகொண்டிருப்பதை உணர்ந்தார். தனி பாகிஸ்தான் கோரி, முகமது அலி ஜின்னா பிடிவாதத்துடன் இருந்தார். பிரிவினைக்கு ஆதரவாகப் பல தலைவர்களும் குரல்கொடுக்க ஆரம்பித்தனர். கேபினட் குழு அளித்த திட்டம் முறையாகச் செயல்படவில்லை என்பதையும் உணர்ந்த மவுண்ட்பேட்டன், 1947-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி திட்டம் ஒன்றை அறிவித்தார்.
மவுண்ட்பேட்டன் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
வங்காள மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் இடைக்கால அரசு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹிந்து மற்றும் முஸ்லிம் உறுப்பினர்கள் தனித்தனியே கூடி, பிரிவினை தொடர்பாக ஆலோசனை நடத்த வேண்டும்.
அவர்கள் பிரிவினைக்கு ஆதரவு தெரிவித்தால், பிரிட்டிஷ் ஆட்சி செய்து வந்த பகுதிகள், இந்தியா-பாகிஸ்தான் என்று இரு நாடுகளாகப் பிரிக்கப்படும்.
இரு நாட்டு அரசமைப்புச் சட்டங்களையும் உருவாக்க தனித்தனியே அரசமைப்புக் குழு அமைக்கப்படும்.
வடமேற்கு மாகாணத்தை (தற்போதைய ஜம்மு-காஷ்மீர் பகுதி) பிரிப்பது குறித்து, அந்தப் பகுதி மக்களிடேயே வாக்கெடுப்பு நடத்தப்படும்.
இரு நாடுகளுக்கு இடையேயான எல்லையை உருவாக்கக் குழு ஒன்று அமைக்கப்படும்.
சுதேச அரசுகளின் மீதான பிரிட்டிஷ் அரசின் கட்டுப்பாடு நீக்கப்படும். பிரிவினைக்குப் பிறகு, இந்தியாவுடன் இணைந்து கொள்ளவோ அல்லது பாகிஸ்தானுடன் இணைந்து கொள்ளவோ அல்லது இரு நாடுகளுடனும் இணையாமல் சுதந்திரத்துடன் செயல்படவோ சுதேச அரசுகள் தானாக முடிவெடுத்துக் கொள்ளலாம்.
மவுண்ட்பேட்டன் திட்டத்துக்கு இந்திய தேசிய காங்கிரஸும், இந்திய முஸ்லிம் லீகும் ஒப்புதல் தெரிவித்தன. இதையடுத்து, 1947-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ஆம் தேதி, பிரிட்டனிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெறும் என்று மவுண்ட்பேட்டன் அறிவித்தார். இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான எல்லைப் பகுதிகளைப் பிரிக்க, சிரில் ராட்கிளிஃப் தலைமையில் குழுவையும் அவர் அமைத்தார். அந்தக் குழு 1947-ஆம் ஆண்டு ஆகஸ்டு 12-ஆம் தேதி தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. அதன்படி, மேற்கு பஞ்சாப், சிந்து மாகாணம், பலூசிஸ்தான், கிழக்கு வங்காளம் உள்ளிட்டவை பாகிஸ்தான் நாட்டுடன் இணையும் என்று தெரிவிக்கப்பட்டது. மவுண்ட்பேட்டன் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, 1947-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி இந்திய சுதந்திரச் சட்டம், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்திய சுதந்திரச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள்
1947-ஆம் ஆண்டு, ஆகஸ்டு 14-ஆம் தேதி நள்ளிரவோடு பிரிட்டிஷ் ஆட்சி முடிவு பெற்று, சுதந்திர, இறையாண்மை பெற்ற இந்திய நாடு உருவாகும்.
இந்தியா-பாகிஸ்தான் என்ற இருநாடுகள் தனித்தனியே சுதந்திரம் பெறும்.
இந்தியாவின் வைஸ்ராய் பதவி நீக்கப்படுகிறது. இந்திய கேபினட் அமைச்சர்களின் ஆலோசனையின் அடிப்படையில், இந்தியாவுக்கான கவர்னல் ஜெனரலை பிரிட்டிஷ் அரசு நியமிக்கும். கேபினட் அமைச்சர்களின் ஆலோசனையின்படியே அவர் செயல்படுவார். தன்னிச்சையாக எந்தவொரு முடிவையும் அவர் எடுக்க மாட்டார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கான அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க தனித்தனி அரசமைப்புக் குழுக்கள் அமைக்கப்படும்.
பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கீழ் இயற்றப்பட்ட எந்தச் சட்டத்தையும் அரசமைப்புக் குழுக்கள் நீக்கலாம்.
நாட்டில் உள்ள சுதேச அரசுகளின் மீதான பிரிட்டிஷ் அரசின் கட்டுப்பாடு இந்திய சுதந்திரத்தோடு முடிவுக்கு வருகிறது.
புதிய அரசமைப்புச் சட்டம் இயற்றப்படும் வரை, 1935-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய அரசுச் சட்டத்தின் அடிப்படையில் இடைக்கால அரசு ஆட்சி நடத்தும். அந்தச் சட்டத்தில் தேவையான மாற்றங்களையும் அரசு செய்து கொள்ளலாம்.
அரசுப் பணியாளர்களை இந்திய அரசே தன்னிச்சையாக நியமித்துக் கொள்ளலாம். அதே வேளையில், பிரிட்டிஷ் அரசாங்கம் நியமித்த பணியாளர்கள் அனைவரும் பணியில் தொடருவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...