மூத்த அரசியல் தலைவர், தமிழறிஞர், பேச்சாளர் எனப் பல்வேறு முகங்கள் இவருக்கு இருந்தாலும், அப்பழுக்கற்ற காந்தியவாதியாகவும், காமராஜரின் உண்மை விசுவாசியாகவும் மட்டுமே தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புபவர் குமரி அனந்தன். அரசியல் அரங்கில் பல தலைவர்களுடன் கரம் கோத்துச் செயல்பட்ட பெருமைக்குச் சொந்தக்காரரான அவர், தனது முதல் தேர்தல் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்...
பதினாறு வயதில் எனது அரசியல் பயணம் தொடங்கியது. கடந்த 1957-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் முதன் முதலாக மதுரையில் வாக்களித்தேன். அரசியல் பாரம்பரியமிக்க குடும்பம் என்பதால் சிறு வயது முதலே அரசியல் பொதுக்கூட்ட மேடைகளில் பங்கேற்று பேசுவது வழக்கம். அதுபோன்று கடந்த 1965-இல் மதுரையில் தெற்கு மாசி வீதியும், கிழக்கு மாசி வீதியும் சந்திக்கும் இடத்தில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில், காமராஜர் வரும் வரை என்னைப் பேசச் சொன்னார்கள். நான் பேசிக்கொண்டு இருக்கும்போதே, காமராஜர் வந்ததால் பேச்சை நிறுத்த முயன்றேன். இதைக் கவனித்த காமராஜர் பேச்சைத் தொடரும்படி கூறினார்.
நான் பேசி முடித்ததும் என்னைப் பாராட்டிய அவர், சென்னைக்கு வந்து தன்னைச் சந்திக்கும்படி காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே. சம்பத் மூலம் அழைப்பு விடுத்தார். ஆர்வத்தோடு சென்று சந்தித்தேன். கட்சியில் சம்பளம் எல்லாம் கொடுக்க முடியாது என்று கூறி தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் பொறுப்பை எனக்கு காமராஜர் வழங்கினார்.
அப்போதெல்லாம் தேர்தல் வந்து விட்டாலே திருவிழா போன்று உற்சாகம் கரை புரண்டோடும். குறிப்பாக கிராமப் புறங்களில் மாலை நேரத்தில் பிரசாரம் களை கட்டும். நடைப் பயணமாகவும், ரிக்ஷாவிலும் தெருத்தெருவாகச் சென்று பிரசாரத்தில் ஈடுபடுவோம். அப்போதெல்லாம் எந்தப் பிரசார பொதுக் கூட்டங்களில் பேசும்போதும் அதற்குச் சிறந்த முன் தயாரிப்பு அவசியம் என்பதில் பேச்சாளர்கள் அக்கறை செலுத்தினர். அதனால் செல்லும் இடங்களில் அந்தப் பகுதியின் தேவை, பொதுமக்களின் எதிர்பார்ப்புகள், கள நிலவரம் ஆகியவற்றை முன்கூட்டியே கேட்டுத் தெரிந்து கொண்டு அவற்றை மையப்படுத்திப் பேசுவர். அதற்கு பொதுமக்கள் மத்தியிலும் பலத்த வரவேற்பு கிடைத்தது.
கூட்டத்தில் பேசுவதற்கு பேச்சாளருக்கு நூறு ரூபாய் கிடைத்தாலே அதிகம். அதே நேரத்தில் பல இடங்களில் கட்சியினர் மலர் மாலைகளுக்குப் பதிலாக கதர் நூல் சிட்டத்தில் மாலையிடுவார்கள். அவற்றை கடையில் சென்று கொடுத்தால் புதிய வேஷ்டி, சட்டை கிடைக்கும்.
பிரசாரத்தின்போது எதிர்க் கட்சியின் நடவடிக்கைகளைக் கண்டித்துப் பேசுவோம். ஆனால் அவை நாகரிகமான விமர்சனமாகவே இருக்கும்.
காமராஜர் மறைவுக்குப் பிறகு, அவர் இரண்டு முறை வெற்றி பெற்ற நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட 1977 மக்களவைத் தேர்தலில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது.
ஸ்தாபன காங்கிரஸ் சார்பில் களமிறங்கிய எனக்கு எதிராக காங்கிரஸை சேர்ந்த மோசஸ் போட்டியிட்டார்.
காமராஜரின் விசுவாசி என்பதால், எனக்கு மக்களிடத்தில் செல்வாக்கு இருந்தது. அதையெல்லாம் தாண்டி, அந்தத் தேர்தலில் எனக்கு வாக்குக் கேட்டு அச்சடிக்கப்பட்ட சுவரொட்டியில் இடம் பெற்றிருந்த வாசகமே எனது வெற்றிக்குப் பிரதான காரணமாக அமைந்தது. காமராஜர் மேல் கடலளவு அன்பு கொண்ட நாகர்கோவில் மக்கள் அவரை அப்பச்சி என்றுதான் மனதார அழைப்பார்கள். அதை அடிப்படையாகக் கொண்டு எனது தேர்தல் சுவரொட்டி வாசகம் அமைந்திருந்தது.
அப்பச்சி காமராஜரைப் போற்றிய தொகுதி, அவர் தொண்டன் என்பதே என் தகுதி என்ற வாசகம் அச்சிடப்பட்ட சுவரொட்டி ஊரெங்கும் ஒட்டப்பட்டது. அந்த வார்த்தைகள்தான் எனது வெற்றிக்கு வித்திட்டன.
சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு கட்சியிலிருந்து பெரிய அளவுக்கு நிதியெல்லாம் தர மாட்டார்கள். வேட்பாளர் தன் சொந்தப் பணத்தை செலவு செய்ய வேண்டும். தேர்தல் நேரத்தில் அதைச் செய்கிறேன், இதைச் செய்கிறேன் என இஷ்டத்துக்கு வாக்குறுதிகளை அள்ளி வீச முடியாது. வீடுகளுக்கு அருகில் நடுநிலைப்பள்ளி, குறித்த காலத்தில் அணை கட்டப்படும், தரமான சாலை வசதி என செயல்படுத்த முடிந்த வாக்குறுதிகளையே அளித்தோம்.
அதனால் அவற்றை சரியாக நிறைவேற்ற முடிந்தது. எனக்குத் தெரிந்தவரை ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் பழக்கமே அப்போது இல்லை.
அந்த கால கட்டத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் இடையேயான உறவு மிகவும் சிறப்பாக இருந்தது.
வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடும் இளைஞர்கள் மக்கள் நலனிலும், நாட்டின் வளர்ச்சியிலும் சிறந்த குறிக்கோளுடன் செயலாற்ற வேண்டும். அத்துடன் ஊழலற்ற ஆட்சி அமைய உழைக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


