நட்சத்திர தொகுதியை கைப்பற்றப் போவது யார்?
தமிழக அரசியல் வரலாற்றில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்த திராவிட கட்சிகளின் தலைமகன் அறிஞர் அண்ணாவை மக்களவைக்கு அனுப்பி பெருமைக்கு உரியத் தொகுதி தென் சென்னை.


தமிழக அரசியல் வரலாற்றில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்த திராவிட கட்சிகளின் தலைமகன் அறிஞர் அண்ணாவை மக்களவைக்கு அனுப்பி பெருமைக்கு உரியத் தொகுதி தென் சென்னை.
அந்த வரிசையில் குடியரசு முன்னாள் தலைவர் ஆர்.வெங்கட்ராமன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டிடிகிருஷ்ணமாச்சாரி, நாஞ்சில் மனோகரன், முரசொலிமாறன், வைஜெயந்தி மாலா பாலி உள்ளிட்ட பிரபலங்களை வெற்றி பெறச் செய்த பெருமைக்குரிய நட்சத்திரத் தொகுதியாகவும் விளங்குகிறது.
கடந்த 1957-ஆம் ஆண்டு தென்சென்னை மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது. அன்றைய ஆண்டிலிருந்து 2014-ஆம் ஆண்டு வரை ஒரு இடைத்தேர்தல் உள்பட 16 தேர்தல்களை இத்தொகுதி சந்தித்துள்ளது.
இதில், திமுக 8 முறையும், காங்கிரஸ் 5 முறையும், அதிமுக 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
கடந்த 2008-ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பில் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் இணைக்கப்பட்டன. இத்தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 9,79,480 பேரும், பெண் வாக்காளர்கள் 9,93,446 பேரும், திருநங்கைகள் 389 பேரும் என மொத்தம் 19,73,315 வாக்காளர்கள் உள்ளனர்.இதில், அதிகபட்சமாக சோழிங்நல்லூர் தொகுதியில் மட்டும் 6,18,695 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர்கள்: தமிழகத்தில் அதிகம் படித்தவர்களைக் கொண்ட இத்தொகுதியின் மயிலாப்பூர், தியாகராய நகர், வேளச்சேரி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் பிராமணர்கள் அதிகம் வசிக்கின்றனர். வேளச்சேரி, சோழிங்கநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதிகளில் தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள், மீனவர்கள், அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் அதிகம் வசிக்கின்றனர். விருகம்பாக்கம், சைதாப்பேட்டை தொகுதிகளில் தலித், வன்னிய சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கின்றனர். வணிக நிறுவனங்கள் நிறைந்த தியாகராய நகர் பகுதியில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் உள்ளனர். இதில், பெரும்பாலானோர் வாக்குரிமை பெற்றவர்கள் ஆவர்.
பிரச்னை: தென் சென்னை தொகுதியில் போக்குவரத்து நெரிசல் மிக முக்கியப் பிரச்னையாகும். மேடவாக்கம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை, திருவான்மியூர் சாலை, பழைய மகாபலிபுரம் சாலை ஆகிய சாலைகள் சந்திக்கும் டைடல் பார்க் நான்கு முனைச் சந்திப்பில் மேம்பாலம், கிழக்கு கடற்கரைச் சாலை விரிவாக்கம், தியாகராய நகர் பேருந்து நிலைய விரிவாக்கம், நடைபாதை கடைகள் அகற்றம், குடிநீர்ப் பிரச்னை, மழைநீர் வடிகால் போன்றவை இத்தொகுதிகளின் தீர்க்கப்படாத நீண்டகாலப் பிரச்னைகளாக உள்ளன.
வேட்பாளர்கள்: இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் தற்போதைய மக்களவை உறுப்பினரும், மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரின் மகனுமான டாக்டர் ஜெ.ஜெயவர்தன் மீண்டும் போட்டியிடுகிறார். திமுக சார்பில் மறைந்த முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் மகளும், முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சகோதரியுமான கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், அமமுக சார்பில் முன்னாள் சட்டத் துறை அமைச்சர் இசக்கி சுப்பையா, மக்கள் நீதி மய்யம் சார்பில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆர்.ரங்கராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் ஷெரின் என 34 ஆண் வேட்பாளர்கள், 5 பெண் வேட்பாளர்கள், ராதா என்ற திருநங்கை என மொத்தம் 40 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தொகுதி நிலவரம்: சென்னையின் வடசென்னை, மத்திய சென்னையை தொகுதிகளைக் காட்டிலும், தென் சென்னையில் அதிமுக, பாஜக கூட்டணி பலமாக உள்ளது. படித்தவர்கள், பணக்காரர்கள் அதிகம் உள்ள தொகுதி என்றபோதும், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள், வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளும் இந்தத் தொகுதியில் அதிகம் உள்ளன.
கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் இல.கணேசன் 2,58,262 வாக்குகள் பெற்றார். இது அந்தத் தொகுதியில் பதிவான வாக்குகளில் 24 சதவீதமாகும்.
அதுமட்டுமில்லாமல் விருகம்பாக்கம், தியாகராய நகர், மயிலாப்பூர் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகள் அதிமுக வசம் உள்ளதும், பாமக கூட்டணியில் இருப்பதால் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை பகுதியில் கணிசமான எண்ணிக்கையில் வன்னியர் சமூகத்தினர் வசிப்பது அதிமுகவுக்கு பலமாக உள்ளது. இத்தொகுதியில் மக்களுக்கு அறிமுகமானவர் என்பது ஜெ.ஜெயவர்த்தனுக்கு கூடுதல் பலமாக கருதப்படுகிறது.
திமுகவைப் பொருத்தவரை தென் சென்னை மக்களவைத் தொகுதி அக்கட்சியின் கோட்டையாகவே இருந்துள்ளது. இந்தத் தொகுதியில் 8 முறை திமுகவும், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. தற்போதைய திமுக வேட்பாளரான தமிழச்சி தங்கபாண்டியன் பெண், புதுமுக வேட்பாளர் என்ற முறையில் பெண்கள், இளைஞர்கள் ஆதரவு அவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.
சைதாப்பேட்டை, வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகள் திமுக வசம் உள்ளதும், கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவும் திமுகவுக்குப் பலமாக உள்ளது. விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் தொழிலாளர்கள், தலித்துகள், அரசு ஊழியர்கள், பிற சமூகத்தினரின் ஆதரவு திமுகவுக்கு பெரும்பான்மையாக உள்ளது.
பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி காரணமாக தியாகராய நகர் தொகுதியில் உள்ள வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களும், சிறு தொழில் முனைவோர்களுக்கு பாஜக, அதிமுக மீதான வெறுப்பு திமுகவுக்கு சாதகமாக உள்ளது. பிரதமர் மோடி, தமிழக அரசுக்கு எதிரான அலை திமுகவுக்கு சாதகமாக அமைய வாய்ப்புள்ளது.
அமமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா இத்தொகுதிக்கு அறிமுகம் இல்லாதவர் என்பது அக்கட்சிக்கு பலவீனமாகக் கருதப்படுகிறது. இருப்பினும், தினகரனின் பிரசாரம், தென் மாவட்ட மக்களுக்கு அறிமுகமானவர் என்பதால் இந்தத் தொகுதியில் பரவலாக வசிக்கும் தென்மாவட்ட மக்களின் வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளது. இது அதிமுகவுக்குப் பலவீனத்தை ஏற்படுத்தலாம்.
மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆர்.ரங்கராஜன் நிறுத்தப்பட்டுள்ளார். கமலின் பரிச்சயமான முகம், பிரசாரம் இவருக்கு கை கொடுக்கும். தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் அதிகம் வசிக்கும் வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய தொகுதிகளிலும், படித்தவர்கள், இளைஞர்கள் மத்தியிலும் அவர் கணிசமான வாக்குகள் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் தங்களது தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளது.
இத்தொகுதியைப் பொருத்தவரை இழந்த தொகுதியை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் திமுகவும், தொகுதியை மீண்டும் தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் அதிமுகவும், இந்த இரு கட்சிகளிடம் இருந்து தொகுதியைக் கைப்பற்ற வேண்டும் என முனைப்பில் மற்ற கட்சிகளும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் பிரசாரம் நாளுக்கு நாள் சூடு பிடித்துள்ளதைத் தொடர்ந்து, நட்சத்திரத் தொகுதியான தென் சென்னையை யார் கைப்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
வாக்காளர் விவரங்கள்
ஆண் வாக்காளர்கள் 9,79,480
பெண் வாக்காளர்கள் 9,93,446
திருநங்கைகள் 389
மொத்தம் 19,73,315
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...