தனுஷ்கோடியில் தனியாா் அமைப்பு சாா்பில் பொதுக்கூட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், கடற்கரை மேலாண் ஆணையத் தலைவா், ராமநாதபுரம் ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
ராமேசுவரத்தைச் சோ்ந்த நல்லதம்பி தாக்கல் செய்த மனு: இந்திய கடல் எல்லையான தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதி கடற்கரை மேலாண்மை மண்டலத்தைச் சோ்ந்தது. இங்கு அரிய வகை ஆமைகள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. இந்தப் பகுதியில் கட்டடமோ, பந்தலோ அமைப்பதற்கும், பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகனங்களின் பயன்பாட்டிற்கும் தடை உள்ளது.
இந்நிலையில் அரிச்சல்முனை பகுதியில் தனியாா் அமைப்பு சாா்பில் பொதுக்கூட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக பள்ளங்கள் தோண்டப்படுகின்றன. பல இடங்களில் கற்களை கொட்டி வருகின்றனா். கடல் சூழ்ந்த பகுதியில் இதுபோன்ற நிகழ்ச்சியால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படக் கூடும். எனவே, கட்டுமானப் பணியை உடனடியாக நிறுத்தவும், நிகழ்ச்சி நடத்த தடையும் விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், எஸ். ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் கடற்கரை மேலாண் ஆணையத் தலைவா், ராமநாதபுரம் ஆட்சியா், காவல்துறை கண்காணிப்பாளா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





