மக்களவைத் தேர்தலில் யார் யாரை, எந்தெந்தத் தொகுதியில் நிறுத்துவது என்று தீர்மானித்துப் பட்டியல் தயாரித்து வருகிறதாம் அறிவாலய அடுத்த வாரிசின் தரப்பு. மதுரை, தஞ்சை, பெரம்பலூர், மத்திய சென்னை ஆகிய தொகுதிகளில் இப்போதைய வேட்பாளர்கள் மாற்றப்படுவார்கள் என்று அந்தப் பட்டியலைப் பார்த்தவர்கள் கூறுகிறார்கள். வட சென்னையிலும் வேட்பாளர் மாற்றப்படுகிறாராம். வட சென்னை வேட்பாளர் கனிமொழி என்று சொன்ன கையோடு, கூடுதலாக இன்னொரு தகவலும் தருகிறார்கள். நிறுத்தப்படப் போவது பெண் வாரிசுதான் என்றாலும், தலைவர் குடும்பப் பெண் வாரிசு அல்லவாம்!
8-வது மக்களவையிலும், 11-வது மக்களவையிலும், திமுக வேட்பாளராக வட சென்னையில் போட்டியிட்டு வெற்றிபெற்றவரின் மகள்தான் அடுத்த வாரிசின் தேர்வாக இருக்கப் போகிறார் என்கிறார்களே, மெய்யாலுமா?
===
அந்தக் காவல்துறை உயரதிகாரி கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை அலுவலகத்திற்கு ஏன் வந்து போனார் என்கிற விவாதம் காக்கிச் சட்டை வட்டாரங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. ஒருவர் மீது விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, விசாரணை நடத்தும் அதிகாரிகளைக் காரணமில்லாமல் வலியப்போய் யாராவது சந்திப்பார்களா? சந்தித்திருக்கிறாரே, ஏன்? யார் அந்த உயரதிகாரி என்று கேட்டால், அந்தக் காவல்துறை உயரதிகாரியின் பெயர் "ஜா' வில் தொடங்குகிறது. மூன்றெழுத்து "ஜா'வா, நான்கெழுத்து "ஜா'வா, ஐந்தெழுத்து "ஜா'வா? என்று கேட்டால் வித்தியாசமான தொப்பி வைத்திருப்பவர் என்று சொல்கிறார்கள். அவர் தன் மீதான விசாரணையை கிடப்பில் போட்டு இழுத்தடிக்கச் சொன்னாராமே, மெய்யாலுமா?
===
சுதந்திர இந்தியா 25 நிதியமைச்சர்களைச் சந்தித்திருக்கிறது. இதுவரை தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிதிநிலை அறிக்கைகள் 81. அவற்றில் 65 வழக்கமாக ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கைகள். 12 இடைக்கால நிதிநிலை அறிக்கைகளும், நான்கு "மினி பட்ஜெட்' என்று அழைக்கப்படும் சிறப்பு நிதிநிலை அறிக்கைகளும் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.
மிக அதிகமான நிதிநிலை அறிக்கைகளைத் தாக்கல் செய்திருப்பவர் மொரார்ஜி தேசாய். எட்டு வருடாந்திர பட்ஜெட்டுகளும், இரண்டு இடைக்கால பட்ஜெட்டுகளுமாக அவர் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கைகள் 10. இதுதான் இப்போதைக்கு ரெக்கார்டு. அடுத்தபடியாக, எட்டு நிதிநிலை அறிக்கைகளைத் தாக்கல் செய்திருப்பது குடியரசுத் தலைவராக இருக்கும் பிரணாப் முகர்ஜியும், நிதியமைச்சராக இருக்கும் ப. சிதம்பரமும். தேர்தல் அடுத்த ஆண்டு வழக்கம்போல நடைபெறுவதாக இருந்தால், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யும் வாய்ப்பு இன்றைய நிதியமைச்சருக்குக் கிடைக்கும்.
யஷ்வந்த் சின்ஹா, ஒய்.பி. சவாண், சி.டி. தேஷ்முக் ஆகியோர் ஏழு நிதிநிலை அறிக்கைகளைத் தாக்கல் செய்திருக்கிறார்கள். மன்மோகன் சிங்கும், இந்தியாவின் நான்காவது நிதியமைச்சர் டி.டி. கிருஷ்ணமாச்சாரியும் முறையே ஆறு பட்ஜெட்டுகளைத் தாக்கல் செய்திருக்கிறார்கள். ஆர். வெங்கட்ராமனும், ஹெச்.எம். படேலும் மூன்று பட்ஜெட்டுகளும், ஜஸ்வந்த் சிங், வி.பி. சிங், சி. சுப்பிரமணியம், ஜான் மத்தாய், ஆர்.கே. சண்முகம் செட்டி ஆகியோர் இரண்டு பட்ஜெட்டுகளும் தாக்கல் செய்தவர்கள்.
கூடுதல் பொறுப்பாக நிதித்துறையையும் கையாண்ட பிரதமர்கள் ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரும், சரண் சிங், என்.டி. திவாரி, மது தண்டவதே, எஸ்.பி. சவாண், சச்சீந்திர சௌத்ரி ஆகியோரும் ஒரேயொரு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தவர்கள். சுதந்திர இந்தியா சந்தித்த 25 நிதியமைச்சர்களில், நிதிநிலை அறிக்கையே தாக்கல் செய்யாமல் நிதித்துறையை நிர்வகித்த இரண்டு பேர் இந்தர்குமார் குஜ்ராலும், ஹேமவதி நந்தன் பகுகுணாவும்.
மருது சகோதரர்கள் ஆண்டு அரசாண்ட பூமியின் இப்போதைய மக்களவைப் பிரதிநிதி அவர். கூட்டணி இல்லாமல் அவர் தேர்தலைச் சந்தித்துத் தோல்வியைத் தழுவத் தயாராக இல்லையாம். தொகுதி மாறி வேறு மாநிலத்தில் போட்டியிட்டால் கேலி பேசுவார்கள் என்பதால் அதற்கும் தயாராக இல்லையாம். கட்சிப் பணிக்குப் போகத் தயார் என்று அறிவித்திருக்கிறார். மூப்பனார் வாழப்பாடி போல நேரம்காலம் பார்க்காமல் தொண்டர்களைச் சந்திக்காமல் தொழிலதிபர்களை மட்டுமே சந்திக்கும் அவரால் எப்படி கட்சிப் பணி நடத்த முடியும்? என்று கதர் வேட்டிகள் கேள்வி எழுப்புகிறார்களாமே, மெய்யாலுமா?
===
உறவு வேண்டாம் என்று துண்டித்துக் கொண்ட மாநிலக் கட்சி, வேறு வழியில்லாமல் மீண்டும் தேசியக் கட்சியுடன் "கை' கோத்துக் கொள்ளும் என்று சொல்லப்படுகிறது. தயாள மனதுடன் விசாரணை வளையத்தில் மனைவியை இழுக்காமல் இருக்கக் கருணை காட்டுங்கள் என்று கோரிக்கை வைக்கும் மனநிலையில் இருக்கிறதாம் மாநிலக் கட்சி. மகனுக்கு மீண்டும் மந்திரி பதவி தருகிறோம், மனைவிக்குப் பாதுகாப்பும் தருகிறோம், "மறப்போம், மன்னிப்போம்' பாணியில் இணைந்து விடுவோம் என்று தில்லியிலிருந்து சமிக்ஞை வந்திருப்பதாகச் சொல்லப்படுகிறதே, மெய்யாலுமா?
===
எடுத்த எடுப்பிலேயே எம்.ஜி.ஆரின் ஆசியுடன் சட்டப்பேரவைத் துணைத் தலைவராகத் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர் அவர். சமயக் குரவர்களில் முதலாமவரின் பெயரைக் கொண்டவர். எண் கணிதத்தில் நம்பிக்கை வைத்துப் பெயர் மாற்றம் செய்து கொண்டவர். எம்.ஜி.ஆர். பிரிவுக்குப் பின் கட்சி பிளவுபட்டபோது, சேவல் சின்னத்தில் வெற்றிபெற்று சட்டப்பேரவைக் கட்சித் துணைத் தலைவராகவும் இருந்தவர். நால்வர் அணி அமைத்து அம்மாவின் கோபத்துக்கு ஆளானவர். காவிக் கட்சி, கதர் கட்சி என்று தேசியத்தில் ஐக்கியமாகியும் ஒட்ட முடியாமல் இப்போது மீண்டும் அம்மாவின் அருட்பார்வைக்காக விண்ணப்பித்திருக்கிறாராமே, மெய்யாலுமா?
===
அதிகார மையத்திலேயே அமர்ந்திருக்கும் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த அமைச்சர் செல்போனில் பேசுவதை ஒட்டுக் கேட்கிறார்கள் என்று பயந்து அடுத்தவர்களிடம் செல்போன் வாங்கிப் பேசிக் கொண்டிருந்தாராம். தன்னைச் சந்திக்க வந்திருந்த சுங்க அதிகாரி ஒருவரின் செல்போனில், அவரது துறை நடவடிக்கையை நிறுத்தி, அவருக்கு வருமானம் வரும் பதவியில் நியமிக்கப் பரிந்துரைத்தாராம் அமைச்சர். அந்த அதிகாரி விசாரணை வளையத்தில் இருந்ததால் அமைச்சரின் உரையாடலை மத்திய உளவுத் துறை பதிவு செய்து விட்டதாம். "நாராயணா, நாராயணா' என்று தலையில் அடித்துக்கொண்டு இப்போதெல்லாம் செல்போன் என்றாலே காத தூரம் ஓடுகிறாராமே, மெய்யாலுமா?
===
கடந்த ஆண்டு வெள்ளிவிழா கொண்டாடிய மாவட்டத்தின் ஆட்சியர் அவர். தனக்குப் பிடித்த பெண் குழந்தைக்கு அந்த மாவட்டத்திற்குச் சிறப்பு சேர்க்கும் நவரத்தினங்களில் சந்திரனுக்கு உகந்த இரண்டாவது ரத்தினத்தின் பெயரைச் சூட்டி மகிழ்ந்தவர். அந்தப் பெண் குழந்தையின் முதலாவது பிறந்த நாளை அண்மையில் சிறப்பாகக் கொண்டாடினார். மாவட்ட ஆட்சியரின் இல்லத்தில் நடந்த இந்த விழாவுக்கு உள்ளூர் அமைச்சர் உள்ளிட்ட அத்தனை பிரமுகர்களும் ஆஜரானது மட்டுமல்ல, தங்கம், வெள்ளி என்று பரிசுகள் வந்து குவிந்து விட்டனவாம். ஒரே நாளில் அரைக் கோடிக்கு மேல் வசூல் என்று கேள்வி.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸôரின் பார்வையில் இருந்து தப்பிக்கப் பொருள்கள் அனைத்தையும் மத்தியப் பிரதேசத்திலுள்ள சொந்த ஊருக்கு அனுப்பி விட்டாராமே, மெய்யாலுமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரம்பலூரில் அஞ்சல் வாக்கு செலுத்தும் பணி தொடக்கம்

குன்னம் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக லப்பைக்குடிக்காட்டில் பாரிவேந்தா் பிரசாரம்

கரூரில் பள்ளிவாசல் முன் ஒரேநேரத்தில் திமுக-அதிமுகவினா் வாக்குசேகரிப்பு

பிரத்தியங்கரா தேவிக்கு மிளகாய் சண்டியாகம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

