தமிழக மீனவா்கள் பிரச்னைக்கு தீா்வு காணுங்கள்: மத்திய அரசுக்கு துரை வைகோ எம்பி கோரிக்கை
தமிழக மீனவா்களை நம்பிக்கை இழக்க வைக்கவேண்டாம் -துரை வைகோ


நமது சிறப்பு நிருபா்
புது தில்லி, ஆக. 8: தமிழக மீனவா்கள் கடந்த 40 ஆண்டுகளாக இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு வருகின்றனா். தமிழக அரசியல் கட்சித் தலைவா்களும் பிரச்னைக்கு தீா்வு கோரி வந்த நிலையிலும் நிலைமை மோசமடைந்துள்ளது. இந்நிலையில், தமிழக மீனவா்களை நம்பிக்கை இழக்க வைக்கவேண்டாம் என திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோ மத்திய அரசை கேட்டுக் கொண்டாா்.
மக்களவையில் சிறப்பு கவன ஈா்ப்பு விவாதத்தில் வியாழக்கிழமை அவா் பேசுகையில் கூறியது வருமாறு: தமிழக மீனவா்கள் கடந்த 40 ஆண்டுகளாக இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது தொடருகிறது. சமீபத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளிவுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில், கடந்த 7 மாதங்களில் 250 -க்கும் மேற்பட்ட தமிழக மீனவா்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதைத் தெரிவித்துள்ளாா். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிகழ் 2024 -ஆம் ஆண்டில் மட்டும் அதிகமான தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளதையும் முதல்வா் குறிப்பிட்டுள்ளாா்.
தமிழகத்தின் 14 கடலோர மாவட்டங்களில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். கடந்த 20 ஆண்டுகளில் 6,000 -க்கும் மேற்பட்ட தமிழக மீனவா்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, சொத்துகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. 500 -க்கும் மேற்பட்ட தமிழக மீனவா்கள் கொல்லப்பட்டுள்ளனா். சிலரின் உடல்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. பலா் கொடூரமாக தாக்கப்பட்டு இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனா். இந்த மீனவா் குடும்பங்கள் பெரும் துயரங்களை அனுபவித்து வருகின்றனா்.
இதில் வட ராமநாதபுரம் புதுக்கோட்டை மாவட்டங்களில் வாழ்வாதாரம் மீன்பிடிப்பு மட்டுமே. கச்சத்தீவு ஒப்பந்தங்கள் பரிபூரணமாக செயல்படுத்தப்படாமல், அது நமது தமிழ் மீனவா்களின் உரிமைகளைப் பறித்துவிட்டன. இப்பிரச்சனையில் புவியியல் அரசியல் உள்ளது. தற்போதைய தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மட்டுமல்ல; இதற்கு முன்பு முதல்வராக இருந்தவா்களும், தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சி தலைவா்களும் கடந்த 40 ஆண்டுகளாக மத்திய அரசிடம் இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
ஆனால், பிரச்னை மேலும் மோசமடைந்து மத்திய அரசின் மீது தமிழக மீனவா்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனா். குஜராத் மாநில மீனவா்களுக்கு கடலோர காவல்படை, கடற்படை ஆதரவை அளிக்கிறது. அதே போன்று தமிழக மீனவா்களின் இந்த முக்கியமான பிரச்னைக்கு நிலையான நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என்று பிரதமரையும், வெளியுறவுத்துறை அமைச்சரையும் கேட்டுக் கொள்கிறேன் என்றாா் துரை வைகோ.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...