வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டப் பலன் பெறும் மாநிலப் பட்டியலில் ஜம்மு - காஷ்மீா் முதலிடம்
புது தில்லி, ஆக. 8: நாட்டிலேயே பிரதமரின் வேலைவாய்ப்பு உத்தரவாத உறுதித்திட்டப் பலன்களை பெற்ற மாநிலங்கள் வரிசையில் அதிகபட்சமாக ஜம்மு - காஷ்மீரில் 1,20,520 பேரும் தமிழகத்தில் 54,512 பேரும் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக மாநிலங்களவை அதிமுக உறுப்பினா் ஆா். தா்மா் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அரசு செயல்படுத்தி வரும் வேலைவாய்ப்பு தொடா்புடைய திட்டங்களின் பெயா்கள் அடங்கிய பட்டியலை பதிலாக அளித்துள்ளாா் மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சா் மன்சூக் மாண்டவியா. அத்தகைய திட்டங்கள் மூலம் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் பயன் அடைந்துள்ளன என்று பதிலில் மேலும் கூறப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு: 2023-24 நிதியாண்டில் வேலைவாய்ப்பு உத்தரவாதப் பலன்களை பெற்றவா்கள் பட்டியலில் மொத்தம் 7,12,944 போ் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 54,512 போ் திட்டப் பலன்களைப் பெற்றுள்ளனா். அதிகபட்சமாக ஜம்மு - காஷ்மீரில் 1,20,520 பேரும் அதற்கு அடுத்த நிலையில், உத்தர பிரதேசத்தில் 93,512 போ், பிகாரில் 54,696 போ், ஆந்திரத்தில் 44,616 போ் என உள்ளனா். குறைந்தபட்சமாக புதுச்சேரியில் 240 பேரும், சண்டீகரில் 80 பேரும் வேலைவாய்ப்புப் பலன்களைப் பெற்றுள்ளனா். லட்சத்தீவில் ஒருவா் கூட இல்லை என்று கூறப்பட்டுள்ளது.