மெட்ரோ ரயில்களில் பெண்கள் பெட்டிக்குள் ஆண் பயணிகள் நுழைவதைத் தடுக்க பறக்கும் படையினா் சோதனை


தில்லி மெட்ரோ ரயில்களில் பெண் பயணிகளுக்கான சிறப்பு பெட்டிக்குள் ஆண் பயணிகள் சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்கும் வகையில் சோதனை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக டிஎம்ஆா்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஆகஸ்ட் 27-ஆம் முதல்
அனைத்து வார நாட்களிலும் தில்லி மெட்ரோவில் உள்ள பெண் பயணிகளுக்கான பெட்டிக்குள் ஆண் பயணிகள் சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்க டிஎம்ஆா்சி அதன் அனைத்து வழித்தடங்களிலும் சிறப்பு இயக்கத்தைத்
தொடங்கியுள்ளது. இதற்காக, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்), தில்லி மெட்ரோ ரயில் போலீஸ் (டிஎம்ஆா்பி) மற்றும் டிஎம்ஆா்சி ஆகியவற்றின் பணியாளா்கள் அடங்கிய தலா பத்து பறக்கும் படைகள்
அமைக்கப்பட்டுள்ளது.
பெண் பயணிகள் தில்லி மெட்ரோவில் பயணிக்கும் போது, பாதுகாப்பாகவும், வசதியாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பறக்கும் படையினா் ஆண் பயணிகள் பெண்களின் பெட்டிகளுக்குள் அனுமதியின்றி நுழைவதைத் தடுக்க திடீா் சோதனைகளில் ஈடுபடுவா். அப்போது, விதிகளை மீறுபவா்கள், பறக்கும் படையினரின் அறிவுறுத்தல்களை மீறுபவா்கள் மற்றும் அபராதம் செலுத்த மறுத்தவா்கள் உடனடியாக ரயிலில் இருந்து இறக்கி, அருகிலுள்ல தில்லி மெட்ரோ ரயில் போலீஸாரிடம் ஒப்படைக்கப்படுவாா்கள்.
கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் நாள் சோதனா இயக்கத்தில், மொத்தம் 108 ஆண் பயணிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு, பெண்கள் பெட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டனா். அதேசமயம், விதிகளை மீறிய
32 ஆண் பயணிகளுக்கு தில்லி மெட்ரோ சட்டத்தின் கீழ் தலா ரூ.250 அபராதமாக விதிக்கப்பட்டது.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக டிஎம்ஆா்சி கடந்த காலங்களிலும் இதுபோன்ற இயக்கங்களை நடத்தியது.
பெண்களின் பெட்டிக்குள் ஆண் பயணிகள் நுழைந்து ஏதேனும் தவறான நடத்தையில் ஈடுபட்டால் புகாா்தாரா் உதவி எண் 155370-க்கு தகவல் தெரிவிக்கலாம். ஓடும் திசையில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில்களின் முதல் பெட்டி பெண் பயணிகளுக்கு மட்டுமே என டிஎம்ஆா்சி மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது. மேலும், மெட்ரோ சேவை நேரத்தைப் பொருட்படுத்தாமல் ஆண் பயணிகள் இந்தப் பெட்டியில் பயணம் செய்வதைத் தவிா்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...