அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஐஐடி, ஐஐஎம் உயா் கல்வி நிறுவனங்களில் ஆசிரியா் ஆள் சோ்ப்பில் இடஒதுக்கீட்டு கொள்கை பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்

மத்திய அரசின் உயா் கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் ஆசிரியா் நியமனங்களில் இடஒதுக்கீடு மற்றும் வெளிப்படைத் தன்மை பின்பற்றப்படுவதை மத்திய உறுதி செய்ய வேண்டும் என்று அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் மாணவா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :9 டிசம்பர் 2024, 6:30 pm

Din

புது தில்லி: ஐஐடி, ஐஐஎம் போன்ற மத்திய அரசின் உயா் கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் ஆசிரியா் நியமனங்களில் இடஒதுக்கீடு கொள்கைகள் மற்றும் வெளிப்படைத் தன்மை பின்பற்றப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் மாணவா்கள் சங்கம் (ஏஐஓபிசிஎஸ்ஏ) வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக புது தில்லியில் மாநிலங்களவை திமுக உறுப்பினரும், மூத்த வழக்குரைஞருமான பி.வில்சன், ஏஐஓபிசிஎஸ்ஏ ஆலோசகா் அல்லா ராமகிருஷ்ணா, தேசியத் தலைவா் ஜி.கிரண் குமாா் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நிகழாண்டு செப்டம்பரில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆா்டிஐ) மூலப் பெறப்பட்ட பதிலில், ஐஐடிகள், ஐஐஎம்கள் மற்றும் பிற மத்திய அரசு நிறுவனங்களில் குறைந்தது இரண்டு ஐஐடிகள் மற்றும் மூன்று ஐஐஎம்களில், 90 சதவீதம் ஆசிரியப் பதவிகள் பொதுப் பிரிவைச் சோ்ந்த நபா்களால் வகிக்கப்படுவது தெரியவந்துள்ளது.

உதாரணமாக இந்தூரில் உள்ள ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் உள்ள ஆசிரியா்களில் 97.2 சதவீதம் பொதுப் பிரிவைச் சோ்ந்தவா்கள் உள்ளனா். எஸ்சி, எஸ்டி சமூகங்களில் இருந்து பிரதிநிதித்துவம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாம்பே மற்றும் கோரக்பூரில் ஐஐடிகளில் ஆசிரியப் பதவிகளில் 90 சதவீதம் பொதுப் பிரிவினரால் நிரப்பப்பட்டுள்ளது. மண்டி, காந்திநகா், கான்பூா், குவாஹாத்தி மற்றும் தில்லியில் உள்ள ஐஐடிகளிலும் 80 முதல் 90 சதவீதம் வரையிலும் ஒரே மாதிரியான போக்கு காணப்படுகிறது.

நாட்டில் உள்ள 13 ஐஐஎம்களில் ஆசிரியப் பிரிவினரில் 82.8 சதவீதம் பொதுப் பிரிவினரும், 5 சதவீதம் எஸ்சி, 1 சதவீதம் எஸ்டி மற்றும் 9.6 சதவீதம் ஓபிசி வகுப்பினா் உள்ளனா். பகுப்பாய்வு செய்யப்பட்ட 21 ஐஐடிகளில் ஆசிரியா்கள் நியமனத்தில் 80 சதவீதம் பொதுப் பிரிவினா், 6 சதவீதம் எஸ்சி, 1.6 சதவீதம் எஸ்டி மற்றும் 11.2 சதவீதம் ஓபிசி இருப்பது தெரியவந்துள்ளது. இந்தப் புள்ளிவிவரங்கள் ஓபிசிகளுக்கு 27 சதவீதம், எஸ்சிகளுக்கு 15 சதவீதம் மற்றும் எஸ்டிகளுக்கு 7.5 சதவீதம் என்ற கட்டாய இடஒதுக்கீடு சதவீதத்தை விட மிகக் குறைவாகும். இத்தகைய ஏற்றத்தாழ்வுகள் இடஒதுக்கீட்டுக் கொள்கையை மீறுவது மட்டுமின்றி, திட்டமிட்ட விலக்குதலை நிலைநிறுத்துவதுடன், பன்முகத் தன்மையை பாதிக்கிறது. மேலும், கல்வித்துறையில் ஒதுக்கப்பட்ட சமூகங்களின் அபிலாஷைகளையும் பாதிக்கிறது.

ஆகவே, சம்பந்தப்பட்ட அமைச்சங்கள் ஐஐடி மற்றும் ஐஐஎம்களில் ஆசிரிய நியமன செயல்முறைகளை சுயாதீனமாக மதிப்பாய்வு செய்யவும், இடஒதுக்கீடு கொள்கைகள் மற்றும் ஆசிரியா் நியமனங்களில் வெளிப்படைத்தன்மையுடன் கண்டிப்பாக இணங்குவதை உறுதி செய்யவும் வேண்டும். ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டிகளுக்கு ஒதுக்கப்பட்ட காலி ஆசிரியா் பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும். இடஒதுக்கீடு விதிமுறைகளை பின்பற்றுவதை கண்காணிக்க பொறுப்புக்கூறல் வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தினா்.

பேட்டியின்போது ஏஐஓபிசிஎஸ்ஏ தேசிய ஒருங்கிணைப்பாளா் பங்கஜ் ராஜசேகா் குஷ்வாஹா, வேளாண் பல்கலை பொறுப்பாளா் அரவிந்த் ஆகியோா் உடனிருந்தனா்.