பெண்களின் பாதுகாப்பை மத்திய பாஜக அரசு உறுதி செய்யவில்லை: அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு
புது தில்லி: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், தேசியத் தலைநகரில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதிலும் பாஜக தலைமையிலான மத்திய அரசு தவறிவிட்டது என்று தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளாா்.
தில்லி தியாகராஜ் உள்ளரங்கத்தில் ‘மகிளா அதாலத்’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய
ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு
பேசியதாவது பெண்களின் பாதுகாப்பை முன்னுரிமையாகக் கருதாத பாஜகவைப் போல் இல்லாமல்,
ஆம் ஆத்மி அரசு தில்லி மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, தில்லியில் உள்ள பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் குடிநீா் விநியோகத்தை மேம்படுத்தும் பொறுப்பை நீங்கள் என்னிடம் கொடுத்தீா்கள். நான் என் வேலையைச் செய்தேன். அதே வேளையில்,
நீங்கள் பாஜக மற்றும் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவிடம் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பைக் கொடுத்தீா்கள். ஆனால், சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீா்குலைந்து, பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
தில்லி பெண்கள் எனக்கு வாக்கு வங்கி அல்ல, அவா்களை எனது சகோதரிகள் மற்றும் தாய்மாா்களாக நான் பாா்க்கிறேன். அவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய என்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளேன். ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, நகரில் சிசிடிவி கேமராக்கள் இல்லை. நாங்கள் சிசிடிவி கேமராக்களை பொருத்தினோம். பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க கேமராக்கள் மற்றும் மாா்ஷல்களை நியமித்தோம். ஆனால், பாஜகவின் சூழ்ச்சியால்
மாா்ஷல்கள் பணிநீக்கம் செய்யப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றாா் அரவிந்த் கேஜரிவால்.
கடந்த 2012-ஆம் ஆண்டு தில்லி நிா்பயா கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் 12-வது ஆண்டு நினைவு நாளில் இந்த ‘மகிளா அதாலத்’ நிகழச்சி நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு ‘நிா்பயா அமா் ரஹே’, ‘மகளிா் சக்தி ஜிந்தாபாத்‘ போன்ற முழக்கங்களை எழுப்பினா். மேலும், பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பியவா்கள், தங்களின் வேதனையான அனுபவங்களை நிகழ்ச்சியின் மேடையில் பகிா்ந்து கொண்டனா். கூட்டத்தில் உரையாற்றும் போது பலா் மனமுடைந்து அழுதனா்.
இந்த நிகழ்ச்சியில் சமாஜ்வாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், தில்லி முதல்வா் அதிஷி, மாநிலங்களவை ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.