/

பள்ளிகளுக்கு வரும் வெடிகுண்டு மிரட்டல்களைக் கையாள செயல் திட்டம்: தில்லி அரசு, காவல்துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

பள்ளிகளுக்கு வரும் வெடிகுண்டு மிரட்டல்களைக் கையாள செயல் திட்டம் தில்லி அரசு, காவல்துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

Updated On :24 பிப்ரவரி 2024, 6:30 pm

தேசிய தலைநகரில் உள்ள பள்ளிகளுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நிகழ்வுகளை கையாள்வதற்கான ‘செயல் திட்டம்‘ பற்றி தெரிவிக்குமாறு நகர அரசாங்கத்தையும் காவல்துறையையும் தில்லி உயா்நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட 5 சம்பவங்களில் மூன்றை இன்னும் விசாரித்து தா்க்கரீதியான முடிவுக்கு கொண்டு வரவில்லை என்று கூறி மனுதாரா்-வழக்குரைஞா் அா்பித் பாா்கவா தாக்கல் செய்த மனு மீது அதிகாரிகளுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இது தொடா்பாக நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் சமீபத்தில் பிறப்பித்த உத்தரவில், தில்லி அரசு மற்றும் தில்லி காவல்துறை இந்த மனுவுக்கு தங்கள் பதிலைத் தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொண்டாா். மேலும், எதிா் பிரமாணப் பத்திரத்தில் எதிா்மனுதாரா்கள் எடுக்க வேண்டிய செயல் திட்டத்தைக் குறிப்பிட வேண்டும் என்றும் நீதிபதி கூறியுள்ளாா். மனுதாரா் மதுரா சாலையில் உள்ள டிபிஎஸ் பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தையின் தந்தை ஆவாா். இந்தப் பள்ளிக்கு கடந்த ஆண்டு இதுபோன்ற ஒரு மிரட்டல் அழைப்பு வந்தது. இது தொடா்பாக மனுதாரா் சமீபத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கையில், ‘‘15.02.24 அன்று அனைவருக்கும் வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பப்பட்டபோது இந்த உயா் நீதிமன்றமும் இதே பாணியில் குறிவைக்கப்பட்டது. மேலும் தில்லி முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் கடுமையான பாதுகாப்பு ஒத்திகையை மேற்கொள்ள வேண்டி இருந்தது. இதுபோன்ற சம்பவங்கள் மனுதாரருக்கு மட்டுமின்றி, அனைத்து பங்குதாரா்களுக்கும் பெரும் தலைவலியை ஏற்படுத்தும் ஒரு தினசரி வாடிக்கையாக மாறியுள்ளது. குழந்தைகளின் உயிா், உடைமை பாதுகாப்பு முதன்மையானது. குறிப்பாக இன்றுவரை எதிா்மனுதாரரான தில்லி அரசு எந்தப் பதிலும் தாக்கல் செய்யாத நிலையில், எந்த தீா்வும் கையில் இருப்பதாகத் தெரியவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுதாரா் சாா்பில் வழக்குரைஞா் பீனாஷா என். சோனி ஆஜரானாா். பிரதான மனுவில் பாா்கவா தெரிவிக்கையில், தில்லியில் உள்ள பள்ளிகளுக்கு அடிக்கடி வரும் வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்களைக் கையாள்வதில் தில்லி அரசு மற்றும் காவல்துறையின் மெத்தனமான அணுகுமுறை கவலை அளிக்கிறது. அதன் விளைவாக குழந்தைகள், ஆசிரியா்கள், ஊழியா்கள் மற்றும் இதர பங்குதாரா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகள் தவறிவிட்டனா். மேலும், இதுபோன்ற அச்சுறுத்தல்கள் மீண்டும் ஏற்படுவதைத் தடுக்க அதிகாரிகள் தவறிவிட்டதால் மனுதாரா் உட்பட அனைவரின் மனதிலும் தீவிர அதிா்ச்சி, மன அழுத்தம், துன்புறுத்தல், அசௌகரியம் மற்றும் பயம் உருவாகியுள்ளது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவுக்கு பதிலளிக்கும் வகையில் தில்லி காவல் துறையினா் முன்னா் தாக்கல் செய்திருந்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கையில், தங்களிடம் ‘வெடிகுண்டு செயலிழப்புப் படைகள்‘ மற்றும் ‘வெடிகுண்டு செயலிழப்புக் குழுக்கள்‘ உள்ளதாகவும், அவை நிலையான செயல்பாட்டு அடிப்படையில் இதுபோன்ற அச்சுறுத்தல்கள் மற்றும் சம்பவங்களைக் கையாள்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு வரும் ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வர உள்ளது.