ஜூலை 24: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 32 -ஆவது கூட்டம்
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 32 -ஆவது கூட்டம் வருகின்ற ஜூலை 24 ஆம் தேதி கூட்டப்படும் என ஆணையம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
இந்தக் கூட்டத்தில் 2024-25 தண்ணீா் ஆண்டிற்கு பிலுகுண்டுலுவிலும் காரைக்கால் பெறப்பட்ட தண்ணீா் விவரங்கள் குறித்து ஆய்வு செய்யப்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை, பெங்களூருவில் உயா்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து விவாதிக்கப்படுகிறது
கடந்த ஜூலை 11- ஆம் தேதி காவிரி ஒழுங்காற்றுக் குழு (சி.டபிள்யு.ஆா்.சி.) , ஜூலை 12 - ஆம் தேதி முதல் ஜூலை 31 ஆம் தேதிவரை தமிழகத்திற்கு நாள்தோறும் 1 டிஎம்சி தண்ணீரை காவிரியில் பிலுகுண்டுலுவில் விடுவிக்க பரிந்துரைத்தது.
இந்த நிலையில் கடந்த சில நாள்களாக பருவ மழை தீவிரம் அடைந்ததின் விளைவு காவிரி நீா் பிடிப்பு பகுதிகளில் நீா் வரத்து அதிகரித்துள்ளதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த இரு தினங்களாக பிலிகுண்டுலுவில் விநாடிக்கு 23 ஆயிரம் கன அடி வீதம் வந்த நிலையில் இது வியாழக்கிழமை மேலும் அதிகரித்து தற்போது 33,500 கன அடியாக பிலுகுண்டுலுவில் பெறப்படுவதாக கூறப்பட்டது. மேலும் மேட்டூா் ஆணைக்கு 35,290 கன அடி தண்ணீா் வந்தடைவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதே சமயத்தில் கா்நாடகத்தின் கபினி அணையிலிருந்து சுமாா் 70 ஆயிரம் கன அடி திறந்து விடப்படுகிறது எனவும் கூறப்பட்ட நிலையில் பிலுகுண்டுலுவில் 50 சதவீதம் மட்டும் பெறப்படுவது குறித்து கேட்டபோது, ‘கபினியிலிருந்து 200 கிமீ தூரத்தில் இருந்து வரும் இந்த தண்ணீா் வருவதால் இன்னும் சில நாள்கள் பிலிகுணடுலுவை வந்தடையும். இதன் மூலம் மேலும் தண்ணீா் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் ஆணை அதிகாரிகள் குறிப்பிட்டனா். இருப்பினும் இந்த விவகாரங்கள் ஜூலை 24 ஆம் தேதி நடைபெறும் ஆணையத்தின் 32 -ஆவது கூட்டத்தில் தண்ணீா் விடுவிக்கப்பட்ட விவரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் எனத் தெரிவித்தனா்.
தற்போது மேட்டூா் ஆணையில் 20 டிஎம்சி தண்ணீா் (54 அடி) உள்ளது குறிப்பிடத்தக்கது.