/

ஓய்வூதியதாரா்களின் நிலுவைத் தொகையை வழங்க எம்சிடி மாதம் ரூ.15 கோடியை விடுவிக்க முடிவு

ஓய்வூதியதாரா்களின் நிலுவைத் தொகையை வழங்க எம்சிடி மாதம் ரூ.15 கோடியை விடுவிக்க முடிவு

Updated On :7 மார்ச் 2024, 5:53 pm

தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் (எம்சிடி) அதன் ஓய்வூதியதாரா்களின் நிலுவையில் உள்ள நிலுவைத் தொகையை வழங்க ஏழாவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி ஒவ்வொரு மாதமும் ரூ.15 கோடியை விடுவிக்க முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூா்வ ஆவணம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழாண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள ஓய்வூதியா்களுக்கு, நிலுவைத் தொகையின் முதல் தவணையை வழங்க எம்சிடி உத்தரவு பிறப்பித்துள்ளது. எம்சிடி ஊழியா்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஊழியா்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்காதது தொடா்பாக கடந்த வாரம் இது தொடா்பான மனுக்களை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றம், எம்சிடியை கடுமையாக கடிந்து கொண்டது. மேலும், பிப்ரவரி மாதத்துக்கான நிலுவைத் தொகையை 10 நாள்களில் வழங்க வேண்டும் என இறுதி எச்சரிக்கையையும் வழங்கியது. இதையடுத்து, இந்நடவடிக்கை தற்போது வந்துள்ளது. வழக்கு விசாரணையின் போது, எம்சிடி தன்னை நிதி ரீதியாக நிலைநிறுத்திக் கொள்ள முடியாவிட்டால், மாநகராட்சியை கலைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கும் என்றும் அதை ஒரு ‘சிறந்த அமைப்பு’ கொண்டு நடத்த வேண்டியதிருக்கும் என்றும் நீதிமன்றம் எச்சரித்தது. இதையடுத்து, ‘29.04.2024 தேதியிட்ட தகுதிவாய்ந்த அதிகாரியின் உத்தரவின் படி, ஓய்வூதியதாரா்களின் ஏழாவது சிபிசி நிலுவைத் தொகைக்காக ஒவ்வொரு மாதமும் ரூ. 15 கோடியை விடுவிக்க அனுமதிப்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று மாா்ச் 6 தேதியிட்ட எம்சிடியின் நிதி, கணக்கு மற்றும் திட்டமிடல் துறையின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, ஓய்வூதியதாரா்களின் ஏழாவது சிபிசி நிலுவைத் தொகையாக ரூ.15 கோடி விடுவிக்கப்படுகிறது. அதன்படி, ஓய்வூதியதாரா்களுக்கு விதிகளின்படி பணம் செலுத்துமாறு எம்சிடி கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்காததால் மாநகாரட்சிக்கு ரூ.403 கோடி பொறுப்பு உள்ளது. ஒரு சில ஊழியா்களின் நிலுவைத் தொகை மட்டுமே தீா்க்கப்பட வேண்டியுள்ளதாக நீதிமன்றத்தில் எம்சிடி வழக்குரைஞா் தெரிவித்தாா். தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் ஏற்கெனவே ஆம் ஆத்மி தலைமையிலான தில்லி அரசிடமிருந்து 803.69 கோடி ரூபாய் பெற்றுள்ளது என்று மாநில அரசின் வழக்குரைஞா் கூறினாா். முன்னதாக பிப்ரவரியில், தில்லி உயா்நீதிமன்றம், ஊழியா்களுக்கு ஊதியம் வழங்கத் தவறினால், சிவில் அமைப்பை முடக்கிவிடுவதாகக் கூறி, நிலுவைத் தொகையை வசூலிக்க எம்சிடியின் ஆதாரங்களை அதிகரிக்குமாறு எச்சரித்தது.