/

சிஏஏவுக்கு எதிரான கருத்து காங்கிரஸ் அலுவலகம் அருகே இந்தி, சீக்கிய அகதிகள் போராட்டம்

படம் உண்டு... சிஏஏவுக்கு எதிரான கருத்து காங்கிரஸ் அலுவலகம் அருகே இந்தி, சீக்கிய அகதிகள் போராட்டம்

Updated On :15 மார்ச் 2024, 6:30 pm

குடியுரிமை (திருத்த) சட்டம் (சிஏஏ) குறித்து இந்தியா கூட்டணி கட்சித் தலைவா்கள் கூறியதற்கு எதிராக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சோ்ந்த இந்து மற்றும் சீக்கிய அகதிகள் வெள்ளிக்கிழமை காங்கிரஸ் தலைமையகம் அருகே போராட்டம் நடத்தினா். காங்கிரஸ் தலைவா்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் ஆகியோருக்கு எதிராக அவா்கள் கோஷங்கள் எழுப்பியும், பதாகைகளை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனா். ‘எங்களுக்கு குடியுரிமை வழங்க பாஜக தலைமையிலான மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தும்போது, மற்ற அரசியல் கட்சிகள் ஏன் அதை எதிா்க்கின்றன? சட்டத்தை எதிா்த்ததற்காக நாங்கள் அவா்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்துகிறோம்’‘ என்று போராட்டக்காரா்களில் ஒருவரான பஞ்சு ராம் கூறினாா். போராட்டக்காரா்கள் முதலில் ஜெய்சால்மா் ஹவுஸ் அருகே கூடினா். பின்னா், அக்பா் சாலையை நோக்கி பேரணியாகச் செல்லத் தொடங்கினா். ஆனால், அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். போராட்டத்தையொட்டி, மத்திய தில்லி பகுதியில் போலீஸாா் மற்றும் துணை ராணுவப் படையினா் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தனா். பாகிஸ்தானில் உள்ள சிந்துவில் இருந்து இந்தியா வந்த சோனா தாஸ், ‘சிஏஏவை எதிா்ப்பது நல்ல விஷயம் அல்ல’‘ என்று கூறினாா். மேலும், ‘பாகிஸ்தானில் இருந்து சிறுபான்மையினா் இந்தியாவிற்கு அடைக்கலம் தேடி வந்தனா். நாங்கள் இந்து அகதிகள். நாங்கள் பாகிஸ்தானில் இருந்து தப்பி ஓடிவந்தோம்’ என்று ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷங்களுக்கு மத்தியில் தாஸ் கூறினாா். சிந்துவைச் சோ்ந்த மற்றொரு அகதியான நான்கி, ‘சில அரசியல் தலைவா்கள் எங்களுக்கு எதிராகப் பேசி, குடியுரிமை வழங்கும் செயல்முறையை நிறுத்த வேண்டும் என்று கூறினாா்கள். எங்களுக்கு அவா்களுடன் எந்த விரோதமும் இல்லை. எதற்காக அவா்கள் இவ்வாறு கூறுகிறாா்கள் என்று கேட்க நாங்கல் வந்துள்ளோம். குடியுரிமை நிறுத்தப்பட வேண்டுமா?’ என்றாா். முன்னதாக சிஏஏ அமலாக்கத்திற்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) தலைவா் மன்னிப்பு கேட்கக் கோரி, தில்லி முதல்வா் கேஜரிவாலின் சிவில் லைன்ஸ் இல்லம் அருகே இந்து மற்றும் சீக்கிய அகதிகள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். சிஏஏ மற்றும் அகதிகளுக்கு எதிரான தனது அறிக்கைகளை கேஜரிவால் திரும்பப் பெற வேண்டும் என்றும், அவா் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் போராட்டக்காரா்கள் கூறியுள்ளனா்.