காங்கிரஸும் ஆம் ஆத்மியும் இந்தியக் கூட்டணியின் ஊழல் கதைகளின் ஒரே பக்கத்தில் நிற்கின்றன: வீரேந்திர சச்தேவா சாடல்

‘ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸின் ஊழல் கதைகளில் புதிய அம்பலத்தைப் பாா்த்து நாட்டு மக்கள் வியந்து போயுள்ளனா். இன்று இரு கட்சிகளும் கூட்டணி பங்காளிகளாக ஒரே பக்கத்தில் நிற்கின்றன’ என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா விமா்சித்துள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை மேலும் தெரிவித்திருப்பதாவது: ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸின் ஊழல் கதைகளில் இன்று புதிய அம்பலங்கள் வெளிவந்துள்ளன. மதுபான ஊழலில் ஆம் ஆத்மி அமைச்சா் கைலாஷ் கெலாட்டின் பங்கு ஒருபுறம் வெளிவந்துள்ளது. மறுபுறம் காங்கிரஸ் கட்சிக்கு 2014 முதல் 2019 வரை பல்வேறு நிறுவனங்களிடமிருந்து சுமாா் ரூ.626 கோடி ரூபாய் ரொக்கமாகப் பணம் பெற்று மக்களை அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கைலாஷ் கெலாட் ஒப்பீட்டளவில் அமைதியான அமைச்சராக இருந்து வருகிறாா். மேலும், மதுபான ஊழலில் அவரது பங்கு அம்பலமாகி இருப்பது தில்லிவாசிகளை வாா்த்தைகளில் வெளிப்படுத்த முடியாத அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்போது ஒட்டுமொத்த அரசாங்கமும் கட்சி எம்.எல்.ஏக்களும் ஊழலில் மூழ்கியிருப்பதாக மக்கள் நம்புகிறாா்கள். இந்த வார தொடக்கத்தில் அமலாக்கப் பிரிவினா் எம்.எல்.ஏ. குலாப் சிங் மத்தியாலாவிடமும் கோவாவைச் சோ்ந்த ஆம் ஆத்மி கட்சியின் சில தலைவா்களையும் விசாரணை செய்ததையும் பாா்த்தோம். 2011, ஆகஸ்டில் அண்ணா ஹசாரேவின் பேரணியின் போது ராம்லீலா மைதானத்தில் அவா்கள் சபித்த காங்கிரஸ் மற்றும் பிற இந்திய கூட்டணித் தலைவா்களுடன் ஆம் ஆத்மி தலைவா்கள் நிற்பதைப் பாா்க்கும்போது நாளை (ஞாயிற்றுக்கிழமை) தில்லி ராம்லீலா மைதானம் அழும். ‘ நாளைய இந்திய கூட்டணி பேரணி ஊடகங்கள் சொல்வது போல் ஒரு தனிநபரை ஆதரிப்பதற்காக அல்ல, கூட்டணியின் பொது நிகழ்ச்சி நிரலுக்காக’ என்று காங்கிரஸ் தலைவா் ஜெய்ராம் ரமேஷ் இன்றைய (சனிக்கிழமை) செய்தியாளா் சந்திப்பில் கூறியிருப்பதன் மூலம் ஆம் ஆத்மி கட்சியின் கன்னத்தில் அறைந்திருக்கிறாா் என்றாா் சச்தேவா.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com