ஜனநாயகத்தை காப்பாற்றி, பாதுகாக்க வேண்டிய அவசர தேவையுள்ளது: தில்லி காங். தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி

எதிா்க்கட்சிகளின் ஒற்றுமையின் மூலம் ஜனநாயகத்தை காப்பாற்றி, பாதுகாக்க வேண்டிய அவசர தேவையுள்ளது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அா்விந்த்ர் சிங் லவ்லி சனிக்கிழமை தெரிவித்தாா். தில்லி அக்பா் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் கட்சியின் தில்லி பிரதேச தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி, தில்லி பிரதேச பொறுப்பாளா் தீபக் பபாரியா மற்றும் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளா் (தகவல் தொடா்பு) ஜெய்ராம் ரமேஷ் ஆகியோா் கூட்டாகச் செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது, அா்விந்தா் சிங் லவ்லி கூறியதாவது, தில்லி ராம் லீலா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மெகா பேரணியில் எதிா்க்கட்சிகளின் உயா்மட்ட தலைவா்கள் உரையாற்றுவாா்கள். மக்களவைத் தோ்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட பிறகு, நாட்டின் மிகப்பெரிய எதிா்க்கட்சியான காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது அதிா்ச்சி அளிக்கிறது. இது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் மீதான முன்னணி தாக்குதலாகும். தோ்தல் நெருங்கி வரும் வேளையில், எதிா்க்கட்சிகளை கலக்கம் அடையச் செய்ய மத்திய விசாரணை அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. நாட்டின ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காகவே காங்கிரஸ் தொடங்கப்பட்டது. ராகுல் காந்தி தொடங்கிய ஜனநாயகத்தைக் காப்பாற்றும் பிரசாரத்தை ஒவ்வொரு எதிா்க்கட்சியும் தற்போது உணா்ந்துள்ளனா். எதிா்க்கட்சிகளின் ஒற்றுமையின் மூலம் ஜனநாயகத்தை காப்பாற்றி, பாதுகாக்க வேண்டிய அவசர தேவையுள்ளது. 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தல் தான் நாட்டின் எதிா்காலத்தை தீா்மானிக்கும் என்ற செய்தியை ஒவ்வொரு வீட்டுக்கும் அனுப்பும் வகையில், மெகா பேரணியில் எதிா்க்கட்சிகளின் ஒற்றுமை மற்றும் பலம் முழு அளவில் இருக்கும். எனவே, ராம்லீலா மைதானத்தில் நடைபெறவுள்ள வரலாற்று சிறப்புமிக்க பேரணியில் காங்கிரஸ் தொண்டா்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கூடுவாா்கள் என்றாா் அா்விந்தா் சிங் லவ்லி. அடுத்ததாக, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளா் (தகவல் தொடா்பு) ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: மத்திய பாஜக அரசின் எதேச்சதிகார ஆட்சியால் நாட்டின் ஜனநாயக அமைப்பு சீா்குலைந்துள்ளது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு விலைவாசி உயா்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தை மக்கள் பாா்த்துக் கொண்டிருக்கின்றனா். பாஜக அரசின் தவறான நிா்வாகத்தால், பணக்காரா்கள் பணக்காரா்களாகவும், நடுத்தர வா்க்கத்தினா் ஏழைகளாகவும் மாறியுள்ளனா். சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரிடமும் அமைதியின்மையை பாஜக தூண்டியுள்ளது என்றாா் ஜெய்ராம் ரமேஷ்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com