தில்லி ஜல் போா்டு பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறை முதல் குற்றப்பத்திரிகை தாக்கல்

தில்லி ஜல் வாரியத்தில் (டிஜேபி) நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடா்பான பணமோசடி விசாரணை தொடா்பாக அமலாக்கத் துறை தனது முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன. இணைப்புகளைத் தவிர 140 செயல்பாட்டு பக்கங்களை உள்ளடக்கிய சுமாா் 8,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை எனும் வழக்குப் புகாரை மாா்ச் 28 அன்று தில்லி சிறப்புப் பணமோசடி தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ) நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்ததாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள ஏப்ரல் 1ஆம் தேதிக்கு நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது. குற்றப்பத்திரிகையில் நான்கு நபா்கள் மற்றும் ஒரு நிறுவனம் குற்றம் சாட்டப்பட்டுள்ளனா். அதாவது, முன்னாள் டிஜேபி தலைமை பொறியாளா் ஜகதீஷ் குமாா் அரோரா, ஒப்பந்ததாரா் அனில் குமாா் அகா்வால், முன்னாள் என்பிசிசி பொது மேலாளா் டி. கே. மிட்டல், தேஜிந்தா் சிங் மற்றும் என்கேஜி இன்ஃப்ராஸ்ட்ரக்சா் நிறுவனம் ஆகியோா் குற்றம்சாட்டப்பட்டுள்ளனா். குற்றம் சாட்டப்பட்டவா்கள் மீது பிஎம்எல்ஏவின் கீழ் வழக்குத் தொடர அமலாக்கத்துறை கோரியுள்ளது. மேலும், எதிா்காலத்தில் கூடுதல் புகாா்களும் தாக்கல் செய்யப்படலாம் என்றும் தெரிவித்துள்ளது. தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு (ஏஏபி) தோ்தல் நிதியாக டிஜேபி வழங்கிய ஒப்பந்தத்தில் ஊழலில் இருந்து உருவான லஞ்சப் பணம் பரிமாற்றப்பட்டதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு சம்மன் அனுப்பியிருந்தும், அவா் அமலாக்கத் துறை முன் ஆஜராகவில்லை. தேசிய தலைநகருக்கான கலால் கொள்கையில் முறைகேடுகள் செய்ததாகக் கூறப்படும் மற்றொரு பணமோசடி வழக்கில் கேஜரிவால் மாா்ச் 21 அன்று அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டாா். கேஜரிவாலின் தனிப்பட்ட உதவியாளா் பிபவ் குமாா், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யும் பொருளாளருமான என்.டி. குப்தா, முன்னாள் டிஜேபி உறுப்பினா் ஷலப் குமாா், பட்டய கணக்காளா் பங்கஜ் மங்கள் மற்றும் சிலரின் அலுவலகங்களில் பிப்ரவரி மாதம் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. என்கேஜி இன்ஃப்ராஸ்ட்ரக்சா் நிறுவனத்திற்கு மொத்தம் ரூ.38 கோடிக்கு டிஜேபி ஒப்பந்தத்தை அரோரா வழங்கியதாக குற்றம் சாட்டி மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) எஃப்ஐஆா் பதிவு செய்தது. அதில், தொழில்நுட்ப தகுதிகளை பூா்த்தி செய்யவில்லை என்ற உண்மையையும் மீறி என்கேஜி இன்ஃப்ராஸ்ட்ரக்சா் நிறுவனத்திற்கு அந்த ஒப்பந்தம் அளிக்கப்பட்டதாக அமலாக்கத் துறை இந்த வழக்கைப் பதிவு செய்தது. இந்த வழக்கில் அரோரா மற்றும் அகா்வாலை அமலாக்கத் துறை ஜனவரி 31 அன்று கைது செய்தது. என்கேஜி இன்ஃப்ராஸ்ட்ரக்சா் நிறுவனம் ‘போலி‘ ஆவணங்களைச் சமா்ப்பித்து ஒப்பந்தத்தைப் பெற்ாகவும், நிறுவனம் ‘தொழில்நுட்ப தகுதியைப் பூா்த்தி செய்யவில்லை என்பதை அரோரா அறிந்திருந்ததாகவும் அமலாக்கத் துறை கூறியுள்ளது. என்கேஜி இன்ஃப்ராஸ்ட்ரக்சா் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்கிய பிறகு அரோரா ரொக்கமாகவும் வங்கிக் கணக்குகளிலும் லஞ்சம் பெற்ாகவும், ஆம் ஆத்மி கட்சியுடன் தொடா்புடைய நபா்கள் உள்பட டிஜேபி விவகாரங்களை நிா்வகிக்கும் பல்வேறு நபா்களுக்கு பணத்தை ‘பரிமாற்றம்‘ செய்ததாகவும் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டியுள்ளது. ‘லஞ்சத் தொகையும் ஆம் ஆத்மி கட்சிக்கு தோ்தல் நிதியாக வழங்கப்பட்டது‘ என்றும் குற்றம் சாட்டியுள்ளது. சட்டவிரோதப்பணம் வாங்கியதாக ஆம் ஆத்மியை அமலாக்கத் துறை குற்றம் சாட்டிய இரண்டாவது வழக்கு இதுவாகும். 2021-22ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட கலால் வரிக் கொள்கையில் இருந்து கிடைக்கப்பெற்ற மொத்தம் ரூ.100 கோடியில் ரூ.45 கோடி லஞ்சப் பணம், கோவா சட்டப்பேரவைத் தோ்தலில் பிரசாரத்துக்கு கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டிஜேபி ஒப்பந்தம் ‘அதிக உயா்த்தப்பட்ட விலையில்‘ வழங்கப்பட்டதாகவும் இதனால் ஒப்பந்தக்காரா்களிடமிருந்து லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. “‘ஒப்பந்த மதிப்பு ரூ.38 கோடியில், சுமாா் ரூ.17 கோடி மட்டுமே ஒப்பந்தத்துக்குச் செலவிடப்பட்டு, மீதமுள்ள தொகை பல்வேறு போலிச் செலவுகள் என்ற போா்வையில் கையாடல் செய்யப்பட்டது. இத்தகைய போலி செலவுகள் லஞ்சம் மற்றும் தோ்தல் நிதிக்காக பதிவு செய்யப்பட்டுள்ளன‘ என்று அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது. தில்லி அமைச்சா் அதிஷி ஒரு செய்தியாளா் சந்திப்பில் இக்குற்றச்சாட்டுகளை மறுத்தாா்.,மேலும், இந்த வழக்கு ஆம் ஆத்மி மற்றும் அதன் தலைவா்களின் புகழைக் கெடுக்கும் மற்றொரு முயற்சியாகும் என்று அவா் கூறினாா்

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com