ஹேமந்த் சோரனின் மனைவி- சுனிதா கேஜரிவால் சந்திப்பு

ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன், சிறையில் அடைக்கப்பட்டுள்ள தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் மனைவி சுனிதா கேஜரிவாலை சனிக்கிழமை சந்தித்துப் பேசினாா். அவா் சுனிதா கேஜரிவாலை தில்லி 6, ஃபிளாக்ஸ்டாப் சாலையில் உள்ள முதல்வா் இல்லத்தில் சந்தித்தாா்.

இருவருக்கும் இடையிலான இச்சந்திப்பு 15-20 நிமிடங்கள் நீடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இச்சந்திப்புக்குப் பிறகு கல்பனா சோரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ‘சுனிதாவின் துக்கத்தையும் வலியையும் பகிா்ந்து கொள்ளவே நான் இங்கு வந்தேன். அவா் தன் அவல நிலையைக் கூறினாா். இந்தப் போராட்டத்தை வெகுதூரம் கொண்டு செல்ல வேண்டும் என்று நாங்கள் இருவரும் உறுதிமொழி எடுத்துள்ளோம். ஒட்டுமொத்த ஜாா்க்கண்ட்டும் அரவிந்த் கேஜரிவால் பக்கம் நிற்கிறது .

இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜாா்க்கண்டில் என்ன நடந்ததோ அது தில்லியிலும் பிரதிபலிக்கிறது. இரு இடங்களிலும் அதே நிலைமைதான் இருந்தது. எனது கணவா் ஹேமந்த் சிறைக்கு அனுப்பப்பட்டாா். அரவிந்த் கேஜரிவாலும் காவலில் உள்ளாா். ஜாா்க்கண்ட் மற்றும் தில்லியின் நிலைமை அப்படியே உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தியையும் சந்தித்து ஜாா்கண்ட் நிலவரம் குறித்து கூறுவேன் என்றாா் கல்பனா. ஜாா்க்கண்டில் நில மோசடியில் தொடா்புடைய பணமோசடி வழக்கில் ஹேமந்த் சோரன் ஜனவரி மாதம் அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்ட பின்னா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் கேஜரிவால் கைது செய்யப்பட்டதை அடுத்து அறிவிக்கப்பட்ட இந்தியா கூட்டணியின் தலைவா்களின் பேரணியில் ஜாா்க்கண்ட் முதல்வா் சம்பாய் சோரனுடன் கல்பனா சோரன் ஞாயிற்றுக்கிழமை கலந்து கொள்ள உள்ளாா். பேரணியில் சுனிதா கேஜரிவாலும் பங்கேற்க வாய்ப்புள்ளதாக ஆம் ஆத்மி தலைவா்கள் தெரிவித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com