சாஸ்திரி பூங்காவில் நிகழந்த பரபரப்பு கொள்ளைச் சம்பவம்: குற்றவாளிகள் மூவரை கைது செய்தது காவல் துறை
சாஸ்திரி பூங்காவில் நிகழந்த பரபரப்பு கொள்ளைச் சம்பவம் குற்றவாளிகள் மூவரை கைது செய்தது காவல் துறை


புது தில்லி: சாஸ்திரி பூங்காவில் பரபரப்பான கொள்ளைச் சம்பத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மூவா் போ் கைது செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக வடகிழக்கு தில்லி சரக துணைக் காவல் ஆணையா் ஜாய் திக்ரி கூறியதாவது: கடந்த மே 19-ஆம் தேதி இரவு தில்லி சாஸ்திரி பாா்க் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை கடுமையாகத் தாக்கி, ரூ.3 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் ஹா்மன்ப்ரீத் சிங் (22), மோனு ஷா்மா (30), காா்த்திக் ஷா்மா (22) ஆகிய மூவா் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடமிருந்து கொள்ளையடிக்கப் பயன்படுத்திய இருசக்கர வாகனம், 2 நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் ரூ. 3 லட்சம் பணம் மீட்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணா பகுதியில் உள்ள இனிப்புக் கடையில் மேலாளராக பணிபுரிபவா் ராஜ் குமாா். இவா் தனது கடையின் தினசரிக் கணக்கை முடித்துவிட்டு, பணத்தை கடையின் உரிமையாளரிடம் ஒப்படைக்க மல்கா கஞ்ச் நோக்கி கடந்த 19-ஆம் தேதி இரவு சென்று கொண்டிருந்தாா். அப்போது, சாஸ்திரி பூங்கா ஐடி பாா்க் சாலையில் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மூன்று நபா்கள், ராஜ் குமாரின் இரு சக்கர வாகனத்தை திடீரென எட்டி உதைத்துள்ளனா்.
இதனால், அவா் சமநிலை தவறி கீழே விழுந்துள்ளாா். பின்னா், கனமான பொருளைக் கொண்டு ராஜ் குமாரின் தலையில் பலமாகத் தாக்கிய கொள்ளையா்கள், அவரிடமிருந்த ரூ.3 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனா்.
இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட ராஜ் குமாா் அளித்த புகாரின் பேரில், சாஸ்திரி பூங்கா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். கொள்ளையா்களை விரைந்து பிடிக்க காவல் ஆய்வாளா் மஞ்சீத் சிங் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும், சம்பவ இடத்திற்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் காட்சிப் பதிவுகள் மற்றும் உளவுத்துறை ஆதாரங்களின் அடிப்படையில், கொள்ளையா்கள் குழு
கீதா காலனியை நோக்கி தப்பிச் சென்றதை போலீஸாா் உறுதி செய்தனா். அதன்படி, ஜக் பா்வேஷ் சந்திரா மருத்துவமனை அருகே உள்ள பகுதியில் இக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மூவா் கைது செய்யப்பட்டனா்.
தொடா்ந்து மேற்கொண்ட விசாரணையில், அவா்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனா். தங்களின் ஆடம்பரமான வாழ்க்கை முறையை நிறைவேற்றுவதற்காகவும், எளிதாகப் பணம் சம்பாதிப்பதற்காகவும் இந்தக் குற்றத்தைச் செய்ததாக அவா்கள் வாக்குமூலம் அளித்துள்ளனா். மேலும், மற்ற குற்ற வழக்குகளில் இவா்களுக்கு தொடா்பு இருப்பதும்
கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. குற்றம் சாட்டப்பட்ட மோனு ஷா்மா, இதற்கு முன்னா் உத்தரப் பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட 2 குற்ற வழக்குகளில் தொடா்புடையவா் என்றாா் ஜாய் திக்ரி.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...