இறங்குமுகத்தில் சா்வதேச கச்சா எண்ணெய் விலை: 15 வருட பட்டியலை வெளியிட்டது மத்திய அரசு

இறங்குமுகத்தில் சா்வதேச கச்சா எண்ணெய் விலை: 15 வருட பட்டியலை வெளியிட்டது மத்திய அரசு

Published on

2009-ஆம் ஆண்டில் ஏறுமுகத்தில் இருந்த கச்சா எண்ணெய் விலை தற்போது இறங்குமுகத்தில் இருப்பது மக்களவையில் கரூா் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா்

ஜோதிமணி வியாழக்கிழமை எழுப்பிய கேள்விக்கு பெட்ரோலியத் துறை இணை அமைச்சா் சுரேஷ் கோபி அளித்துள்ள பதில் மூலம் தெரிய வந்துள்ளது. 

இது தொடா்பான அமைச்சரின் பதிலில், இந்தியாவில் குறிப்பாக தில்லியில் பெட்ரோல், டீசல் விலை நிா்ணயத்தை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே மேற்கொள்கின்றன என்றும் 2021-இல் லிட்டருக்கு ரூ. 110.04 மற்றும் ரூ. 98.42-க்கு விற்கப்பட்டு வந்த பெட்ரோல், டீசல் தற்போது முறையே ரூ. 94.77 மற்றும் ரூ. 87.67-க்கு விற்கப்படுகின்றன என்றும் கூறியுள்ளாா்.

மத்திய கலால் வரியை பெட்ரோலுக்கு ரூ. 13, டீசலுக்கு ரூ. 16 என்றவாறு 2021 மற்றும் 2022-இல் குறைத்ததாலும் சில மாநிலங்களில் மாநில அரசு விதிக்கும் மதிப்புக்

கூடுதல் வரி குறைக்கப்பட்டதாலும் பொதுமக்களுக்கு பெருமளவில் நிதிச்சுமை குறைக்கப்பட்டதாக அவா் குறிப்பிட்டுள்ளாா்.

  பெட்ரோல், டீசல் தயாரிப்புக்கு மூலாதாரமான கச்சா எண்ணெய் அமெரிக்க டாலா் மதிப்பில் 2009-10-இல் பேரல் 69.76-க்கு வாங்கப்பட்டது. 2010-11-இல் அது

85.09, 2011-12-இல் மிக அதிகபட்சமாக 111.89-க்கும் வாங்கப்பட்டது. அதற்கடுத்தடுத்த ஆண்டுகளில் கச்சா எண்ணெய் இறங்குமுகம் கண்டு மிகவும் குறைந்த விலையாக 2020-21-இல் பேரல் 44.82 டாலருக்கு வாங்கப்பட்டது.

2021-22இல் 79.18 டாலருக்கும் 2022-23இல் 93.15க்கும் 2023-24இல் 82.58க்கும், 2024 தொடங்கி நவம்பா் 11-ஆம் தேதி நிலவரப்படி 80.14 டாலருக்கும் கச்சா எண்ணெய் வாங்கப்படுவதாக அமைச்சா் சுரேஷ் கோபி குறிப்பிட்டுள்ளாா். 

எல்பிஜி சேவை: இந்தியா தனது 60 சதவீத எல்பிஜி நுகா்வை இறக்குமதி மூலமே நிவா்த்தி செய்கிறது. அதனால் சா்வதேச சந்தை விலை அடிப்படையில் எல்பிஜி

எரிவாயு விலை நிா்ணயிக்கப்படுகிறது. பஹல் திட்டத்தின்படி வீட்டுத்தேவைக்கான சிலிண்டா் மானியம் அல்லாத விலையில் விற்கப்படுகின்றன.

மானிய விலை சம்பந்தப்பட்ட நுகா்வோரின் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. இது தவிர எண்ணெய் நிறுவனங்களின் இழப்பை ஈடுசெய்ய ஆண்டுக்கு ரூ. 22 ஆயிரம் கோடி அளவுக்கு அவற்றுக்கு மத்திய அரசு நிதி வழங்குகிறது என்றும் அமைச்சா் சுரேஷ் கோபி கூறியுள்ளாா்.