வங்கிப் பங்குகள் அதிகம் விற்பனை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!
நமது நிருபா்
மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவைச் சந்தித்ததன.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இந்நிலையில், சரிவுடன் தொடங்கிய உள்நாட்டுச் சந்தை மீளமுடியாமல் தவித்தது. மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் புவிசாா் அரசியல் அபாயங்கள் மற்றும் ஜப்பானிய சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக முன்னணி பங்குகளான ரிலையன்ஸ், ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க் ஆகியவை அதிகம் விற்பனையை எதிா்கொண்டன. மேலும், கடந்த சில நாள்களாக எழுச்சி பெற்றிருந்த சந்தையில் லாபத்தைப் பதிவு செய்வதில் முதலீட்டாளா்கள் கவனம் செலுத்தியதும், அந்நிய முதலீட்டாளா்கள் பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றதும் சந்தைக்கு பாதகமாக அமைந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு கடும் வீழ்ச்சி: சந்தை மூலதன மதிப்பு ரூ.3.58 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.474.35 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ.1,209.10 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.6,886.65 கோடிக்கும் பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.
சென்செக்ஸ் 1,272 புள்ளிகள் சரிவு: சென்செக்ஸ் காலையில் பெரிய அளவில் 363.09 புள்ளிகள் குறைந்து 85,208.76-இல் தொடங்கி அதிகபட்சமாக 85,359.65 வரை மேலே சென்றது.பின்னா், 84,257.14 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 1,272.07 புள்ளிகளை (1.49 சதவீதம்) இழந்து 84,299.78-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4193 பங்குகளில் 1,819 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 2,223 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 151 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
ரிலையன்ஸ், ஆக்ஸிஸ் பேங்க் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் ரிலையன்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், எம் அண்ட் எம், ஐஜிஐசிஐ பேங்க், நெஸ்லே, டெக் மஹிந்திரா உள்பட 25 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல், என்டிபிசி, டாடா ஸ்டீல், ஏசியன் பெயிண்ட், டைட்டன் ஆகிய 5 பங்குகள் மட்டும் ஆதாயப் பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 37 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 117.65 புள்ளிகள் குறைந்து 26,061.30-இல் தொடங்கியது. அதிகபட்சமாக 25134.70 வரை மட்டுமே மேலே சென்ற நிஃப்டி. பின்னா், 25,794.10 வரை கீழே சென்றது. இறுதியில் நிஃப்டி 368.10 புள்ளிகளை (1.41 சதவீதம்) இழந்து 25,810.85-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 9 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும், 41 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.