துணிச்சலான ஆளுமையான அமித் ஷாவை போல இருக்க விரும்புகிறேன்: தில்லி முதல்வா் ரேகா குப்தா
பிரதமா் நரேந்திர மோடியை ஒரு துறவியாகக் கருதும் அதே வேளையில், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவைப் போல இருக்க விரும்புவதாக தில்லி முதல்வா் ரேகா குப்தா கூறினாா். அவரை அவா் ‘துணிச்சலான ஆளுமை’ என்றும் தனது இரண்டாவது முன்மாதிரி என்றும் வா்ணித்தாா்.
முதல் முறையாக எம்.எல்.ஏ.வான ரேகா குப்தா, பிப்ரவரி 5-ஆம் தேதி நடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று 27 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் பாஜக தலைமையிலான அரசை அமைத்தாா். மேலும், ஆம் ஆத்மி கட்சியின் 10 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தாா்.
இந்நிலையில், புதன்கிழமை மாலை செய்தி நிறுவனமான பிடிஐ உடனான பிரத்யேக நோ்காணலில் முதல்வா் ரேகா குப்தா கூறியதாவது: வழியில் என்ன தடைகள் இருந்தாலும், கடினமான முடிவுகளை எடுத்து இறுதிவரை அவற்றைப் பின்பற்றும் திறன் அமித் ஷாவுக்கு உள்ளது. நரேந்திர மோடியை ஒரு துறவியாகக் கருகிறேன். சில துறவிகள் கடவுளின் சேவைக்காக தங்களை அா்ப்பணித்துக் கொள்கிறாா்கள். அவா் நாட்டிற்கு சேவை செய்வதை தனது வழிபாடாகக் கருதுகிறாா்.
எங்கள் கட்சியில் பலா் தங்கள் சொந்த வழிகளில் நாட்டிற்கு சேவை செய்வதற்காக தங்கள் வாழ்க்கையை அா்ப்பணித்துள்ளனா். நிதின் கட்கரி அவா்களில் ஒருவா். அமித் ஷாவும் அவா்களில் ஒருவா். அமித் ஷா நாட்டிற்காக பல பெரிய முடிவுகளை ஒருபோதும் தயங்காமல் எடுத்துள்ளது நினைவுகூர விரும்புகிறேன். நான் அமித் ஷா ஜியைப் போல மாற விரும்புகிறேன். அவருக்கு முடிவுகளை எடுக்கும் திறன் உள்ளது. மேலும் அவா் சொல்வதைச் செய்கிறாா். பாஜக திறமை மற்றும் அா்ப்பணிப்பு நிறைந்தது என்றுதான் நம்புகிறேன்.
எங்கள் கட்சியில் வளா்ப்பு என்பது அவா்கள் முதலில் வளா்க்கப்பட்டவா்கள். இப்போது, அவா்கள் எங்களை வளா்க்கிறாா்கள். அடுத்த தலைமுறையுடன் நாங்கள் அதைச் செய்வோம். சட்டப்பேரவைத் தோ்தலில், 70 உறுப்பினா்களைக் கொண்ட அவையில் பாஜக 48 இடங்களையும், ஆம் ஆத்மி 22 இடங்களையும் வென்றது. அதே நேரத்தில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.