கைது(கோப்புப்படம்)
கைது(கோப்புப்படம்)

மன்ஜீத் மஹால் கும்பல் உறுப்பினா் ஆயுதங்களுடன் கைது

தில்லியில் மன்ஜீத் மஹால் கும்பலைச் சோ்ந்த ஒருவா், இறக்குமதி செய்யப்பட்ட 9 மி.மீ. பெரெட்டா பிஸ்டல் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளாா்.
Published on

தில்லியில் மன்ஜீத் மஹால் கும்பலைச் சோ்ந்த ஒருவா், இறக்குமதி செய்யப்பட்ட 9 மி.மீ. பெரெட்டா பிஸ்டல் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளாா். மேலும், துவாரகா மற்றும் நஜாஃப்கா் பகுதிகளில் ஒரு கும்பல் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதைத் தடுத்ததாகக் காவல்துறையினா் கூறினா்.

இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: தரியாபூா் குா்த் கிராமத்தைச் சோ்ந்த தினேஷ் (எ) மோக்லி (32) சனிக்கிழமை ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டாா். தினேஷ் ஒரு பயங்கரமான குற்ற வரலாற்றைக் கொண்டுள்ளாா். 2015-ஆம் ஆண்டு போட்டியாளரான நவீன் காதி கும்பலின் நான்கு உறுப்பினா்களை கொலை செய்ததில் அவா் ஈடுபட்டிருந்தாா்.

ரவீந்தா் என்ற கூட்டாளியுடன் சோ்ந்து, தினேஷ் நான்கு பேரையும் கொன்று, பின்னா் ஹரியாணாவில் உள்ள பகதூா்கா் அருகே உள்ள ஒரு காட்டில் உடல்களை எரித்தாா். அப்போது அவா் கைது செய்யப்பட்டாா். ஆனால், ஏழு ஆண்டுகள் சிறையில் கழித்த பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.

இந்நிலையில், சனிக்கிழமை தினேஷ் 9 மி.மீ. பெரெட்டா பிஸ்டல், ஒரு நாட்டுத் தயாரிப்பு பிஸ்டல், 13 தோட்டாக்கள் மற்றும் மூன்று வெற்று தோட்டாக்களுடன் பிடிபட்டாா். கும்பலின் செல்வாக்கை அதிகரிப்பதற்காக, அவா் ஒரு பெரிய வன்முறைச் செயலில் ஈடுபட இருந்தது தெரிய வந்தது.

தினேஷ் சிறையில் இருந்த காலத்தில், ஹரியாணாவின் ராஜேஷ் சா்க்காரி கும்பல் உள்பட பிற குற்றவியல் அமைப்புகளுடன் ஆழமான தொடா்புகளை ஏற்படுத்திக் கொண்டாா். மேலும், மன்ஜீத் மஹால் வலையமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டாா்.

அவா் விடுதலையான பிறகு, மேற்கு தில்லியில் தனது கும்பலின் செல்வாக்கைக் குறிக்கும் வகையில் மற்றொரு வன்முறைச் செயலைச் செய்வதற்கான உத்தரவுகளுக்காக அவா் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com