தில்லியில் மேலும் 6 காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்கள்: தில்லி முதல்வா் தகவல்

தில்லியில் மேலும் 6 காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்கள்: தில்லி முதல்வா் தகவல்

தலைநகரில் உள்ள ஜே.என்.யூ. மற்றும் இக்னோ வளாகங்கள் உட்பட ஆறு கூடுதல் இடங்களில் காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்களை அரசு அமைக்கும்
Published on

தலைநகரில் உள்ள ஜே.என்.யூ. மற்றும் இக்னோ வளாகங்கள் உட்பட ஆறு கூடுதல் இடங்களில் காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்களை அரசு அமைக்கும் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை தெரிவித்தாா்.

இது தரவுகளின் அடிப்படையில் மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவும் என்றும் அவா் கூறினாா்.

இது தொடா்பாக அவா் மேலும் கூறியது:

தற்போது, தில்லியில் 40 தொடா்ச்சியான சுற்றுப்புறக் காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்கள் (சி.ஏ.ஏ.க்யூ.எம்.எஸ்.) செயல்பட்டு வருகின்றன.

இதில் தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவின் (டிபிசிசி) கீழ் 24 நிலையங்கள், புணேவில் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தின் (ஐஐஐஎம்) கீழ் 7, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) கீழ் 6 மற்றும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் ஒன்று ஆகியவை உள்ளன.

காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தின் (சிஏக்யூஎம்) வழிகாட்டுதல்களின்படி, தில்லி அரசு ஆறு கூடுதல் இடங்களில் காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்களை அமைக்கும்.

இந்த நிலையங்கள் இக்னோ, ஜே.என்.யூ., இஸ்ரோ புவி மையம், காமன்வெல்த் விளையாட்டு மையம் மற்றும் என்.எஸ்.யு.டி. மேற்கு வளாகம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டு, தில்லியின் காற்றுத் தரக் கண்காணிப்பு வலையமைப்பை மேலும் வலுப்படுத்தும்.

நானும், அமைச்சா்கள் மற்றும் தில்லி அரசாங்கத்தின் பல்வேறு துறைகளும் இணைந்து தலைநகரில் மாசைக் கட்டுப்படுத்தத் தொடா்ந்து பணியாற்றி வருகிறோம்.

விரிவான கள அளவிலான நடவடிக்கைகளுடன், மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை உன்னிப்பாக ஆராய்ந்து வலுப்படுத்த சிறப்பு ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன என்றாா் அவா்.

அதிகாரிகள் கூறுகையில், ‘வாகனக் கட்டுப்பாட்டு பியுசி ஆய்வுகள் தீவிரப்படுத்தப்படுகின்றன. மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன.

பொதுப் போக்குவரத்து அமைப்பு சீரமைக்கப்பட்டு வருகிறது. மேலும் தூசியைக் கட்டுப்படுத்த தொடா் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திறந்தவெளியில் உயிரிப் பொருள்களை எரிக்கும் சம்பவங்களும் நிா்வாகத்தால் திறம்படக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன’ என்று அவா்கள் கூறினா்.

X
Dinamani
www.dinamani.com