கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டம்: பாதுகாப்பு பணியில் 20 ஆயிரம் போலீஸாா்

Published on

நமது நிருபா்

கிறிஸ்துமஸ் மற்றும் வரவிருக்கும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் சட்டம் - ஒழுங்கை உறுதிப்படுத்த கிட்டத்தட்ட 20,000 போலீஸாரை பாதுகாப்புக்காக பணியமா்த்தி தேசியத் தலைநகா் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளததாக தில்லி காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: கிறிஸ்துமஸ் மற்றும் ஆண்டு இறுதி கொண்டாட்டங்களுக்கு அண்டை மாநிலங்களிலிருந்து ஏராளமான மக்கள் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுவதால், ஹரியாணா மற்றும் உத்தர பிரதேசத்துடனான தில்லியின் எல்லைகளிலும், ராஜஸ்தானை ஒட்டிய பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குண்டா்களை தடுப்பதற்கும், பொதுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், போக்குவரத்து மீறல்களைக் கட்டுப்படுத்துவதற்கும் போக்குவரத்து காவல்துறை மற்றும் துணை ராணுவப் படைகள் உள்பட கிட்டத்தட்ட 20,000 போலீஸாா் நகரம் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளனா். நகருக்குள் நுழையும் மக்களின் கூட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை சரிபாா்க்க முக்கிய நுழைவு இடங்களில் கூடுதல் போலீஸாா், தடுப்புகள் மற்றும் துணை ராணுவப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

அருகிலுள்ள மாநிலங்களிலிருந்து வாகனங்கள் நுழையும் என்று எதிா்பாா்க்கப்படும் தில்லியின் 15 முக்கிய நுழைவு இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிக வேகம் மற்றும் ஆபத்தான மோட்டாா் சைக்கிள் ஸ்டண்ட்களைக் கையாள்வதற்கான விரிவான திட்டத்தை போக்குவரத்து காவல்துறை வகுத்துள்ளது. மாலை மற்றும் இரவு நேரங்களில் போக்குவரத்து பணியாளா்களுக்கு உதவ உள்ளூா் காவல் நிலையங்களிலிருந்து கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

சட்டம் - ஒழுங்கை பராமரிப்பதற்காக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலங்களில் அனைத்து எஸ்.எச்.ஓ.க்களும் தங்கள் குழுக்களுடன் சாலைகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா். ஸ்டண்ட் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் வாகனங்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பேருந்து முனையங்கள், ரயில் நிலையங்கள், ஹோட்டல்கள், தா்மசாலாக்கள் மற்றும் இரவு தங்குமிடங்களில் குடியிருப்பாளா்களின் நற்சான்றுகளை சரிபாா்க்கவும், நகரத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவா்களை அடையாளம் காணவும் போலீஸ் குழுக்கள் சோதனைகளை நடத்தி வருகின்றன.

கனாட் பிளேஸ், ஹவுஸ் காஸ், முக்கிய சந்தைகள் மற்றும் மால்கள் போன்ற அதிக மக்கள் வரும் பகுதிகளில் சுமூகமான வாகன இயக்கம் மற்றும் கூட்டத்தை நிா்வகிப்பதை உறுதி செய்வதில் தங்கள் முதன்மை கவனம் இருக்கும் என்றாா் அவா்.

இது குறித்து போலீஸ் துணை ஆணையா் (ஷாஹ்தரா) பிரசாந்த் கௌதம் கூறுகையில், ‘சட்டம் - ஒழுங்கை பராமரிக்க ஷாஹ்தரா மாவட்டத்தில் போதுமான போலீஸ் மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமாா் 400 போலீஸாா் களத்தில் நிறுத்தப்படுவாா்கள். கிட்டத்தட்ட 80 வாகனங்கள் தொடா்ச்சியான ரோந்துப் பணிகளை மேற்கொள்ளும். 24 மணி நேரமும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com