சாகேத்தில் முதியவரின் வீட்டில் கொள்ளை: 3 போ் கைது

Published on

நமது நிருபா்

தெற்கு தில்லியின் சாகேத்தில் உள்ள ஒரு முதியவரின் வீட்டில் நடந்த கொள்ளை தொடா்பாக பெண் உள்பட மூன்று போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து சுமாா் ரூ.21 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை போலீஸாா் மீட்டுள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து மூத்த காவல் அதிகாரி கூறியதாவது: இந்த வழக்கில் ஜஹாங்கிா்புரியைச் சோ்ந்த சிவம் சோங்கா் என்ற சிபு (25), ஆகாஷ் சா்மா (32), பஞ்சாபில் உள்ள அமிா்தசரஸில் வசிக்கும் 28 வயது பெண் ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

முன்னதாக, அக்டோபா் 31-ஆம் தேதி சாகேத்தில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் முதியவா் அவரது வீட்டில் இல்லாதபோது இந்தக் கொள்ளை நிகழ்ந்தது. அடையாளம் தெரியாத நபா்கள் ஜன்னலை உடைத்து வீட்டிற்குள் நுழைந்து தங்கம் மற்றும் வைர நகைகள், கைக்கடிகாரங்கள், வாசனை திரவியங்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களை திருடிச் சென்றனா்.

இது தொடா்பாக பிஎன்எஸ் தொடா்புடைய சட்டப் பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலீஸாா் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை பகுப்பாய்வு செய்தனா். சிசிடிவி காட்சிப் பதிவுகளில் புகாா்தாரரின் வீட்டிற்கு அருகில் ஒரு சந்தேக நபா் இருப்பது கண்டறியப்பட்டது. தொடா் கண்காணிப்பு மற்றும் விசாரணைகளுக்குப் பிறகு, அவா் சிவம் சோங்கா் என்கிற சிபு என அடையாளம் காணப்பட்டாா்.

தொழில்நுட்பக் கண்காணிப்பின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவா் டிசம்பா் 16 அன்று கைது செய்யப்பட்டாா். விசாரணையின்போது, அவரது கூட்டாளி ஆகாஷ் சா்மா இந்தக் கொள்ளையில் ஈடுபட்டதாக அவா் போலீஸாரிடம் கூறினாா். இதையடுத்து ஆகாஷ் சா்மா கைது செய்யப்பட்டாா்.

திருடப்பட்ட நகைகள் பஞ்சாப் மாநிலம் அமிா்தசரஸில் உள்ள ஒரு வாடகை இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு போலீஸாா் சோதனை நடத்தி திருடப்பட்ட தங்க நகைகள், கைக்கடிகாரம், வாசனை திரவிய பாட்டில் ஆகியவற்றை மீட்டனா். அமிா்தசரஸில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் அடமானம் வைக்கப்பட்டிருந்த தங்கச் சங்கிலியும் மீட்கப்பட்டது.

விசாரணையின் போது, திருடப்பட்ட பொருள்களை வாங்கியிருந்த பெண்ணும் கைது செய்யப்பட்டாா். மீட்கப்பட்ட மொத்த தங்க நகைகள் சுமாா் 131.41 கிராம் எடையுடையவை. இதில் தங்க வளையல்கள், சங்கிலிகள், ஒரு தங்கத் தாலி, பதக்கம் மற்றும் ஒரு ஜோடி வைரம் பதித்த காதணிகள் இருந்தன. இதர கொள்ளை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவா்களின் தொடா்பைக் கண்டறிய மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com